மாநில மாநாடு போல மிகச் சிறப்பாக நடத்தப்படும்
சேலம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
சேலம், ஜூலை 14- 15.7.2024 அன்று சேலம் கோட்டையில் நடைபெறவிருக்கும், ‘நீட்’ ஒழிப்பு பிரச்சார பெரும்பயண சங்கமம் நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடு நடத்துவது குறித்தும், பிரச்சார பெரும்பயணத்தில் பங்கேற்கும் மாணவர்கள், இளைஞர்கள், தோழர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் சேலம் மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 10.7.2024 அன்று மதியம் அம்மாப்பேட்டை “குயில்” பண் ணையில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையேற்றார்.
தலைமைக் கழக அமைப்பாளர் எடப்பாடி கா.நா.பாலு, சேலம் மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மாநகரத் தலைவர் அரங்க.இளவழகன், சேலம் மாவட்டச் செயலாளர் இராவண பூபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ, செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ், தருமபுரி தோழர் கார்க்கிநேசன், பகுத்தறிவாளர் கழக மாநகரச் செயலாளர் வழக்குரைஞர் கல்பனா, அம்மாப்பேட்டை பகுதிக் கழகச் செயலாளர் சு.இமயவரம்பன், பகுதி செயலாளர் இராவண பூபதி, தோழியர் வீ.வாசந்தி உள்ளிட்ட கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 1.7.2024 கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தபடி, வாகனப் பரப்புரையில் வரும் தோழர்களுக்கு நம் இல்ல விழாக்களுக்கு வருகை தரும் உறவினர்களைப் போல மிகச் சிறப்பாக வரவேற்பு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், இரு சக்கர வாகன சங்கமம் நிகழ்ச் சியை மிகுந்த எழுச்சியுடன், மிகச் சிறப்பாக தமிழர் தலைவர் அவர்கள் மகிழும் வண்ணம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
முன்னதாக பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி இராஜீ ஏற்பாட்டில், அவரின் இல்லத்தில், வாகனப் பரப்புரையில் பயணித்து வரும் தோழர்களுக்கு இரவு உணவு தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள “பாஷா கேட்டரிங்” பிரியாணி மாஸ்டர் டி.பாஷா – பாத்திமா இணையர்கள் தோழர் களுக்கு மதிய உணவாக பிரியாணி சமைத்து வழங்கினார்கள்.
பொறுப்பாளர்கள் சுவைத்துப் பார்த்து பாராட்டி, சில திருத்தங்களை எடுத்துக் கூறினர். “பாஷா கேட்டரிங்” இணையர்கள் திருத்தங்களை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டனர். இணையர்களுக்கு, தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோ.கல்பனா ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். வாகனப் பரப்புரையில் வரும் தோழர்களுக்கு கேசரி, சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல், சோறு, ரசம் மற்றும் காபி, தேநீர் விருந்து வைத்து உபசரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இரவு உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வீரமணி இராஜீ – வாசந்தி இணையருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
மறுநாள் (16.7.2024) காலை உணவு வழங்கும் பொறுப்பை அம்மாப்பேட்டை பகுதி கழகம் சார்பாக அம்மாப்பேட்டை பகுதி கழகச் செயலாளர் சு.இமயவரம்பன் ஏற்றுக் கொண்டார். காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, காபி, தேநீர் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. காலை உணவு பொறுப்பை ஏற்றுக் கொண்ட சு.இமயவரம்பன் அவர்களுக்கு, சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பரப்புரை பெரும் பயணத்தில் வரும் மாணவர்கள், இளைஞர்கள், தோழர், தோழியருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் இரவு தங்கும் வசதி. அதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
“நீட்” ஒழிப்பு பிரச்சார பெரும் பயண கூட்டத்தை மாநில மாநாடு போல மிகச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திட ஒருங்ணைந்து, அர்ப்பணிப்புடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகள்…
மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன் – அழைப்பிதழ் அச்சடித்து கொடுக்கும் பணி.
மாவட்டச் செயலாளர் சி.பூபதி – 100 கழகக் கொடி.
மாநகரத் தலைவர் அரங்க.இளவரசன் – பொதுச் செயலாளர் வழிச் செலவு.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ – இரவு உணவு.
அம்மாப்பேட்டை பகுதிக் கழகம் சார்பில் செயலாளர் சு.இமயவரம்பன் – காலை சிற்றுண்டி.
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் – சுவரொட்டி.
நிறைவாக தருமபுரி தோழர் கார்க்கி நேசன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவுற்றது.