விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் பெருவெற்றி பெற்றுள்ளார். ஜாதியை முதலீடாக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் ஓங்கிக் குரல் கொடுத்த காவி அணிகளுக்கும், இதுபோன்ற தோல்வியை சந்திக்க வேண்டிவரும் என்பதை உணர்ந்து, களத்திற்கு வருவதற்கே அஞ்சி ஒதுங்கியவர்களுக்கும், அடாவடித்தன அரசியல் நடத்தும் கட்சித் தலைவருக்கும் படுதோல்வியைத் தந்த விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களைப் பாராட்டுகிறோம்!
நாற்பதுக்கு நாற்பது என்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் வெற்றிக்கான போனஸ் போல் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெற்றிக் கனிப் பறிக்க வியூகம் வகுத்து, களமாட வைத்த நம் ‘திராவிட மாடல்‘ நாயகரான முதலமைச்சருக்கும், அதற்காகக் கடுமையாக உழைத்த இந்தியா கூட்டணிப் பொறுப்பாளர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!
ஜாதி, மத வெறிக்குக் கிடைத்த மரண அடிதான் இது!
தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த மக்கள் தீர்ப்பு – விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றி!
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
தமிழர் தலைவர் வாழ்த்து!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், கோவையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அலைப்பேசி வழியாக, முதலமைச்சர் அவர்களைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வெற்றிகள் தொடரவேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.