1919 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஒன்றரை வயது முதல் பதினான்கு வயதுவரை உள்ள விதவைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட்டது. அதனைப் பார்த்து தேசிய இயக்கத் தலைவரான காந்தியார் அதிர்ந்து போனார். அதன் பிறகு, அரை மனத்தோடு விதவை மறுமணத்தை அவர் ஆதரித்துப் பேசலானார். ஆனால், ‘இரண்டாவது திருமணம் என்பதை என் வீட்டுப் பெண்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டேன்’ என்று ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
மனைவியை இழந்தவர்கள் மட்டும் விதவைகளை மறுமணம் செய்துகொள்ளலாம் என்று காந்தியார் பரிந்துரை செய்ததுதான் இதற்கு காரணம். இந்தக் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய தமிழ்நாட்டுக் கவிஞர் பாரதியார், ‘சிறீமான் காந்தி சொல்வதைக் கேட்டால் பின்னாளில் புருஷ விதவை களின் எண்ணிக்கையைப் பார்த்து நாம் பரிதாபப்பட வேண்டும்’ என்று கேலி செய்தார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழ்ச் சமூகத்திலும் பெரும்பாலான ஜாதிகள் குழந்தை மணம் செய்யும் வழக்கம் உடையதாக இருந்தன. அதேபோல கைம்பெண் மறுமணம் செய்யும் வழக்கத்தையும் அந்த ஜாதிகள் கொண்டிருந்தன.
பிராமணர், வேளாளர் ஸ்மார்த்த பிராமணப் புரோகிதத்தோடு திருமணம் செய்த சில பிற்படுத்தப்பட்ட ஜாதியார் ஆகியோர் மட்டுமே கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்யும் வழக்கத்தைத் தடை செய்து இருந்தனர்.
1880களில் வங்காளத்தில் பிராமணர்கள், பண்டிதர்கள் பத்ரலோக் வர்க்கத்தினர் ஆகியோரிடத்திலே வழக்கத்தில் இருந்த கைம்பெண் கொடுமையைக் கண்டித்து ‘கைம்பெண் மறுமணச் சங்கங்கள்’ தொடங்கப்பட்டன.
சென்னையில் இப்படி ஒரு சங்கத்தை தொடங்குவதில் முன் நின்றவர் ‘சுதேசமித்திரன்’ ஜி.சுப்ரமணிய அய்யர், 10 வயதில் திருமணமாகி விதவையான தன்னுடைய 13 வயது மகள் சிவப்பிரியாவிற்கு அவர் 1889இல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மறுமணம் செய்து வைத்தார்.
விதவை, கைம்பெண், கைம்பெண்டாட்டி (கம்மனாட்டி), அறுத(ர)லி, முண்டை, வெள்ளைச் சேலைக்காரி என்பன தமிழில் கைம்பெண்ணைக் குறிக்க வழங்கும் இழிவான சொற்கள். இவை வசைச் சொற்களாகவும் வழங்குகின்றன. கணவனை இழந்த பெண் முழுமையில்லாதவள் (மூளி) என்ற நினைப்பே இதற்குக் காரணம். மூளி என்ற சொல்லும் வசைச் சொல்லாகப் பயன்படுகிறது.
கைம்பெண் மறுமணம் அனுமதிக்கப்பட்ட ஜாதிகளில் கூட கணவனை இழந்த அன்றும் அதைத் தொடர்ந்து சில நாட்களும் கைம்பெண்ணின் உணவு, உடை, நடமாட்டம், சமூக உறவுகள் ஆகியவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தாலி உட்பட அனைத்து அணிகளையும் கழற்றிடுதல் தலையணை இல்லாமல் வெறுந்தரையிலோ அல்லது சாக்கின் மீதோ அறையின் ஒரு பகுதியில் அல்லாமல் மூலையில் உறங்குதல்,வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுடையவராக இருந்தால் உடனே நிறுத்துதல், முதல் எட்டு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணுதல், தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் வாராமல் இருத்தல், பிற ஆடவர் முகம் பார்க்காமல் இருத்தல் ஆகிய கொடுமையான வழக்கங்கள் இன்றும் கூட சில ஜாதியாரிடத்தில் உள்ளன.
பிராமண புரோகிதத்தை ஏற்றுக்கொண்ட சில ஜாதியாரிடத்தில் இவை மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. கைம் பெண்ணுக்கு மொட்டையடிக்கும் வழக்கம் உடைய பிராமணர்கள் இப்பொழுது அதைக் கைவிட்டு விட்டார்கள்.
இறந்த கணவனுடன், மனைவி தீப்பாய்தல் என்னும் வழக்கமும் தமிழ்நாட்டில் அரச மரபினரிடத்திலும் அவர்களோடு தொடர்புடைய குடும்பத்தினரிடத்திலும் இருந்திருக்கிறது. முதலாம் இராசராச சோழ னின் தாய், கணவன் இறந்தவுடன் அவன் உடலோடு தீப்பாய்ந்த பெண்களில் ஒருத்தி என்று திருக்கோவிலூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. பால் குடிக்கும் குழந்தையைக்கூட விட்டுவிட்டுத் தன் கணவனின் ஈமத் தீயில் அவள் பாய்ந்தாள் என்பதனை,
……………… சுரந்த
முலை மகப் பிரியினும் முழங்கெரிநடுவன்
தலைமகற் பிரியாத் தையல்
என்று கல்வெட்டு வியந்து பாராட்டியுள்ளது. ஆனால், விதிவிலக்காக எங்கேனும் அன்றி தமிழ்நாட்டில் இவ்வழக்கம் இருந்ததில்லை.
ஒப்பாரி என்பது, தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்புக்குள் பெண்கள் பட்ட துயரங்களை அவர்களின் கவித்துவ ஆற்றலோடு ஒரு சேரப் புலப்படுத்தும் இலக்கிய வடிவம் ஆகும். இந்த இலக்கிய வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் துயரங்கள் குறிப்பிடத்தக்கன. சொத்துடைய கணவன் இறந்தவுடன் அவனுடைய பங்காளிகள் (தந்தை வழி உறவினர்) எல்லாச் சொத்துகளையும் எடுத்துக்கொள்வதை ஒப்பாரிப் பாடல் ஒன்று பின்வருமாறு பதிவு செய்கின்றது. குழந்தை இல்லாத கைம்பெண்ணின் துயரம் இப்பாடல்:
“செஞ்சியிலே ரெண்டுகடை
தேங்காய்கடை நம்மகடை
சீமானும் போன அண்ணைக்கி
தேங்காயெல்லாம் சூறை சூறை
மதுரையிலே ரெண்டு கடை
மாங்காக் கடை நம்ம கடை
மன்னவனும் போன அண்ணைக்கி
மாங்காயெல்லாம் சூறை சூறை”
நாட்டு விடுதலைக்கு பின்பு ஏற்பட்ட சட்டப் பாதுகாப்புகளுக்கு முன்னர், பெண்களுக்கு தனியாகச் சொத்துரிமை என்பது தமிழ்ச் சமூகத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. குழந்தை இல்லாமல் கைம் பெண்ணான ஒரு பெண்ணுக்கு கணவனின் பரம்பரை சொத்திலோ அவர் ஈட்டிய சொத்திலோ முழு உரிமை கிடையாது. கணவனை இழந்த பின் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையும் அவளுக்குக் கிடையாது. சொத்து முழுவதும் கணவனின் உடன்பிறந்த ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அவர்களிடமிருந்து அவள் பிரிந்து செல்ல விரும்பினால், கணவனின் சொத்தில் ஒரு மிகச்சிறு பகுதி அவளது உணவு, உடைத் தேவைகளுக்கு மட்டும் அளிக்கப்படும். இதற்கு ‘அறுப்புச் சுகம்’ (கட்டிக் கொண்ட தாலியை அறுத்துக் கொண்டதால் பெற்ற உரிமை) என்று பெயர். இந்த வழக்கம் கிறித்துவ மதத்திற்கு மாறிய பின்பு கூட சில ஜாதியாரிடம் இருந்தது என்பது ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு தரும் சாட்சியாகும்.
கி.பி.1746ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தண்டிகைக் கனகராய முதலியார் என்ற ரோமன் கத்தோலிக்க கிறித்துவர் பெருஞ் செல்வத்தையும் தன் மனைவியையும் விதவையான மருமகளையும் விட்டுவிட்டு, இறந்து போனார். பிரெஞ்சு துரைத்தனத்தில் மிகுந்த செல்வம் சேர்த்தவர் இவர்.
கனகராய முதலியாரின் தம்பி சின்ன முதலி என்ற லாசரு முதலியார், தன்னுடைய அண்ணனின் சொத்து முழுவதும் வேறு வாரிசு இல்லாததால் தனக்கே சேர வேண்டும் என்றும் கனகராய முதலியாரின் மனைவி நட்சத்திரம் அம்மாளுக்கும் (குழந்தை இல்லாத) விதவையான மருமகள் சந்திரமுத்து அம்மாளுக்கும் ‘கைம்பெண் கூறு’ ஆகச் சிறிது பணம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் துய்மா துரையிடம் வாதிடுகின்றார்.
ஆளுநரோ, ஆனந்தரங்கம்பிள்ளை உட்பட இருபது பேர் கொண்ட ‘மாநாட்டாரிடம்’ வழக்கை தீர்க்கச் சொல்லி ஒப்படைக்கிறார். இந்த மாநாட்டார், லாசரு முதலியின் வாதத்தை ஏற்றுக் கொண்டு மாமியாரும் மருமகளுமான இரண்டு விதவைகளுக்கும் ‘அன்ன வஸ்திரங்களுத் தாவுயில்லாமல்’ (சாகின்றவரை உணவுக்கும் உடைக்கும் தட்டுப் பாடு இல்லாமல்)’ நாலாயிரத்து இருநூறு வராகன் கொடுத்து ஒதுக்கி விட்டனர். இந்தத் தொகையிலும் விதவை மாமியாருக்கு மூன்றில் இரண்டு பங்கும் விதவை மருமகளுக்கு மூன்றில் ஒரு பங்கும் என்று கணக்குத் தீர்க்கின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதவையின் சொத்துரிமை இவ்வாறுதான் இந்தியா முழுவதிலும் இருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் இறந்து போன அரசு ஊழியரின் விதவை மனைவிக்கான ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருக்கிறது. ஆனாலும்கூட, விதவைத் துயரத்துக்கு மாற்றாக இன்னமும் கூட சில வடமாநிலங்கள் ‘ரூப்கன்வர்’ போல ‘சதிமாதாக்களை’ உருவாக்கிக் கொண்டிருப்பது துயரமான செய்தியாகும்.
ஒப்பீட்டளவில் வடமாநிலங்களில் பெரியாரோ அம்பேத்கரோ உருவாகித் தம் கருத்துகளை எளிய மனிதர்களிடம் சேர்ப்பிக்கவில்லை என்பது கசப்பான, ஆனால், உண்மையான வரலாற்று நிகழ்வாகும்.
(பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் எழுதியுள்ள “விடுபூக்கள்” என்ற நூலிலிருந்து… பக்கம் 36-40)