சென்னை, ஜூலை.12- தமிழ்நாட்டில் 44 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளை ரூ.2 ஆயிரத்து 360 கோடி செலவில் திறன்மிகு மய்யங்களாக” மாற்றும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 360 கோடி செலவில் 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மய்யங்களாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை நடப்பு தொழில் துறைக்கு ஏற்ப தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தால் வேலைவாய்ப்புகள் இருக்காது, பாலிடெக்னிக் படிப்பைவிட பொறியியல் சார்ந்த படிப்புகள்தான் சிறந்தது என்ற பேச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஆனால் இன்ஜினியரிங் படிப்புகளை முடித்த இளைஞர்களைவிட, பாலிடெக்னிக் முடித்தவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகள் பெற்றிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக 2020-2021ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்து 2022-2023ஆம் ஆண்டு முடித்த 82 ஆயிரத்து 513 பேரில், 54 ஆயிரத்து 888 மாணவ-மாணவிகள் சராசரியாக ரூ.16 ஆயிரம் ஊதியப் பணிகளில் சேர்ந்திருக்கின்றனர். ஆகவே பாலிடெக்னிக் படிப்புகளுக்கு தற்போதைய சூழலில் உள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023-24-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்துக்கு ஏற்ப 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை ரூ.2 ஆயிரத்து 783 கோடி மதிப்பில் திறன்மிகு மய்யங்களாக மாற்றும் திட்டம் தொடங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்கள் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டது.
அதன்படி, பெரு நிறுவனங்க ளின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து (சி.எஸ்.ஆர்.) ரூ.2 ஆயிரத்து 360 கோடி செலவில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 44 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மய்யங்களாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், நடப்புக் கல்வி ஆண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் உயர்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பு சிந்தனை, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் உள்ள பிரச்சினைகள், ஆட்டோமொபைல், மின்சார வாகனம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.