சென்னை,ஆக.20 – தமிழ்நாட்டில் இருந்து, 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை, அமெரிக்காவில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழைமையான அமிர்தகடேஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலை, டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் படையெடுத்து சிதைத்தார். இதனால், 2 ஏக்கர் பரப் பளவில் இருந்த அந்த கோவில், எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.
அந்த கோவிலில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், வருணலிங்கம், சோமாஸ்கந்தர் என, 13 கற்சிலைகள் மண்ணில் புதைந்தன. இவற்றில், நின்ற நிலையில் முருகன் கற்சிலையை, 23 ஆண்டுகளுக்கு முன், அடை யாளம் தெரியாத நபர்கள் திருடி விட்டனர்.
அப்போது, ஊர் மக்கள், காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. சமீபத்தில், அந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை அசோக் நகரில் உள்ள, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையிலான காவல்துறையினர், முருகன் கற்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதை உறுதி செய்தனர். அந்தச் சிலை, அமெரிக்காவின் உள் நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப் பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர். சிலையை வெளியுறவு அமைச்சகம் வாயிலாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.