உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடுக!
‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்) கற்பிப்பதற்கான திட்டம் இன்று (12.7.2024) வெள்ளிக்கிழமை அதன் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
‘‘ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் கண்டனம்” – என்ற செய்தி ‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் (12.7.2024) வெளிவந்துள்ளது.
இது முழுக்க முழுக்க, சமூகநீதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாதகம், கேடு செய்யத் தூண்டும் ஒரு செயல்; இதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ். முயற்சி போல் தோன்றுவதோடு, கல்வியை காவியமயமாக்கும் இத்திட்டம் அரசமைப்புச் சட்ட விரோதமாகும்.
ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் ஜாதி வன்முறைகளை நியாயப்படுத்தும் மனுஸ்மிருதி பல்கலைக் கழக பாடத் திட்டமாக டில்லி பல்கலைக் கழகத்திலோ, வேறு எங்காவது திணிக்கப்பட்டாலோ இமயம் போன்ற எதிர்ப்பு அலைகடலாக எழுவது உறுதி!
மீண்டும் மனுதர்ம எரிப்புப் போராட்டங்களை இது தூண்டிவிடும் நிலையைத்தான் உருவாக்கும். எனவே, இது அறவே கைவிடப்படவேண்டும். இது ஒரு ஆழம் பார்க்கும் வேலை.
உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும். வன்மையாக இம்முயற்சியைக் கண்டிக்கின்றோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை,
12.7.2024