ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் உளறல்
மூவர்ணக் கொடியின் பச்சை நிறத்தை சிறீலட்சுமியாக பார்க்கவேண்டுமாம்!
பெங்களூரு, ஆக.20 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்திற்குப் புதிய விளக்கத்தை கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாடு விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்ட மூவர்ணக் கொடி இந்தியாவின் அடையாளங்களில் முக்கியமானதாக இருந்தது. தற்போதும் இருந்து வருகிறது. இந்திய காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான பத்ருதீன் தியாப்ஜியின் மனைவி சுரையா தியாப்ஜிதான் இந்த தேசியக் கொடியை வடிவமைத்துள்ளார். முதலில் காவி நிறமும், பின்னர் வெள்ளை நிறமும் அதில் நீல நிற அசோக சக்கரமும், இறுதியாக பச்சை நிறமும் உடையதாக இந்தக் கொடி வடிவமைக்கப்பட்டது.
இந்த மூன்று நிறங்களுக்கும் ஒவ்வொரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிக்கும். வெள்ளை நிறம் உண்மை யையும், அமைதியையும் குறிக்கிறது. அதில் உள்ள அசோக சக்கரம், புத்தனின் காலடியை, உடலை, சிந்த னையைத் தாங்கி நின்றது. இது வாழ்க்கை சுழற்சியை குறிக்கிறது. அதேபோல இறுதியாக உள்ள பச்சை நிறம் வளர்ச்சியையும் வேளாண் செழிப்பையும் குறிக்கும். ஆனால், சமீப காலங்களாக தேசியக் கொடியின் உண்மையான அர்த்தங்கள் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் பெங்களூருவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அதிலிருந்த மூவர்ணத்திற்கு கூறிய விளக்கமும் தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவர் பேசியதாவது,
“மூவர்ணக் கொடியில் இருந்து பெறப்பட்ட செய்தி களின் வழியில் நாடு முன்னேறி உலகிற்கு வழிகாட்ட வேண்டும். இந்தியா உலகிற்கு அறிவூட்டும் திறனை கொண்டிருக்க வேண்டும். விழிப்புடனும் எச்சரிக்கையு டனும், தேசியக் கொடியில் கொடுத்துள்ள அர்த்தத்தின் அடிப்படையிலும் நாம் செயல்பட வேண்டும். எதிர்மறை சக்திகள் வெற்றி பெறாத வகையில் தேசத்தை ஒன் றிணைக்க வேண்டும். நாம் சூரியனை வணங்குகிறோம். எனவேதான் நம்முடைய தேசத்தை பாரதம் என்று அழைக்கிறோம். அதில் பா என்பது ஒளியை குறிக்கிறது.
விடுதலை நாளன்று சூரியனை வணங்குதல் அர்த்த முள்ள ஒன்றாகும். பாரதம் எனும் சொல் இதைத்தான் குறிக்கிறது. இந்த உலகுக்கு அறிவூட்டுவதற்காகவே இந்தியா விடுதலை அடைந்தது. எனவே இந்தக் கடமையை நிறைவேற்ற நாம் நமது தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். கொடி யின் உச்சியில் இருக்கும் காவி நிறம், தொடர்ச்சியான உழைப்புடன் வாழ்க்கையை இருளிலிருந்த வெளிச் சத்தை நோக்கிய திசையில் வழிநடத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. நடுவில் இருக்கும் வெள்ளை நிறம், அனைவரும் சுயநலத்தை நீக்கி தூய்மையுடன் பணி செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது.
இறுதியாக இருக்கும் பச்சை நிறத்தை சிறீ லட்சுமியாக சித்தரிப்பது அறிவார்ந்த ஆன்மீகமாகும். இது உயர்ந்த மற்றும் தன்னலமற்ற வலிமையை பெற உதவும். இதுதான் தேசியக் கொடி உணர்த்தும் செய்தி” என்று கூறியுள்ளார். தேசியக் கொடியின் அர்த்தம் வேறாக இருக்க, மோகன் பகவத் வேறு அர்த்தத்தை குறிப்பிட்டு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.