நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற் காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நீர்நிலைகளின் மேற்பரப்பை மூடி வளரும் ஆகாயத் தாமரை உள்ளிட்ட தாவரங்களையும் இது அகற்றும் என்பது கூடுதல் சிறப்பு. இதைத் துறைமுகம், ஏரி, குளம் ஆகிய எல்லா நீர்நிலைகளிலும் பயன்படுத்த முடியும்.
இந்த இயந்திரம் மிதந்தபடியே அதன் வாய்வழியே குப்பையைச் சேகரிக்கும். இதனால் மணிக்கு 200 கிலோ வரை குப்பையைச் சேகரிக்க முடியும்.
மொத்தம் 500 கிலோ குப்பை வரை இதனால் சுமந்தபடி நீந்தமுடியும். இதில் 3 கிலோவாட் மணிநேரம் (3-kWh) ஆற்றலுடைய பாட்டரி பொருத்தப் பட்டுள்ளது. 8 மணி நேரம் தொடர்ந்து இயங்கும். இதில் சூரிய மின் தகடுகள் பொருத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.
13.25 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 5.5- அடி உயரமும் கொண்ட இந்த இயந்திரத்தில், 1080 பிக்ஸல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் தாவரங்களை வெட்டுவதற் கென்று பிரத்யேகமான கத்திகளும் உள்ளன. இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள குப்பையை அகற்ற முடியும்.