சென்னை, ஆக.21 ‘நீட்’ மசோதா குறித்து முடிவு செய்ய வேண்டியது குடியரசுத் தலைவர் தான். இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி தலைவரும், அண்ணா நகர் (தெற்கு) பகுதி கழக செயலாளருமான ந.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழா சென்னையில் நேற்று (20.8.2023) நடை பெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-
ஆளுங்கட்சியில் இருக்கும் நேரத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான அறப்போரை நடத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏன் ஏற்பட்டது?, அதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே, இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் 2 பேரும் மருத்துவர்கள். இவர் கள் எல்லாம் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்வு பெற்று டாக்டர்களாக வந்து உட்காரவில்லை. அப்போதெல்லாம் ‘நீட்’ கிடையாது. அதனால் ஏழை, எளிய, நடுத்தர குடும் பத்தில் பிறந்திருப்பவர்கள், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து மருத்துவர்களாக வரும் வாய்ப்பு இருந்தது. இப்போது ‘நீட்’ எழுதினால்தான், அதில் இருந்து தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராக வர முடியும் என்ற நிலை இன்றைக்கு வந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டமன்றத்தில், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் ‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டுகிறோம் என்று சொல்லி தீர்மானத்தை கொண்டு வருகி றோம். எல்லா கட்சிகளும் ஆதரித்தது.
இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. கூட நாம் கொண்டு வந்த தீர் மானத்தை ஆதரித்து, அனுப்பி வைத் தோம்.
ஆளுநரிடத்தில் இருந்தது. அதை அனுப்பாமல் அப்படியே ராஜ் பவனில் வைத்திருந்தார். அதற்குப் பிறகு 2ஆ-வது முறையாக அதை மீண்டும் சட்டமன்றத் திற்கு கேள்வி கேட்டு அனுப்புகிறார், இப்போது இருக்கும் ஆளுநர். எனவே, அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லி மீண்டும் அவருக்கு அனுப்பி வைக்கிறோம். 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டதற்கு பிறகு, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது அது குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது. எனவே அதன்மீது முடிவு செய்ய வேண்டியது குடியரசுத் தலைவர் தான். ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாம் அனுப்பியதை அனுப்பி வைக்கும் வேலைதான் அவருக்கு.
ஆனால் திடீரென்று சில நாட்களுக்கு முன்பு, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார். சேலம் உருக்காலையில் பணியாற்றி கொண்டிருக்கும் ஒரு தோழர், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவருடைய மகள் அதில் தேர்வு பெற்று உள்ளார். ஒன்றிய அரசின் ஊழிய ராக இருப்பவர், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை கேட்கிறபோது வெளிப்படையாக தைரியமாக, துணிச்ச லோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘என்னுடைய மகள் பாஸ் பண்ணி விட்டாள், எனக்கு வசதி இருந்தது அவள் பாஸ் செய்து விட்டாள். ஆனால் பல மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நிலை எல்லாம் என்ன ஆகும். தயவுசெய்து இந்த ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று ஆளுநரிடத்தில்கேட்டபோது, கொதித்து எழுந்து கோபம் அடைந்தவர் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? “அது எல்லாம் முடியாது.” என்று சொல்லுகிறார். அவ ருக்கு அதிகாரமே கிடையாது.
ஆனால், இருந்தாலும் அவர் சொல் கிறார், “நான் அனுப்பி வைத்துவிட்டேன். இருந்தாலும், என்னிடத்தில் அது இருந் தால், நான் கொடுக்க மாட்டேன் – அதை அனுமதிக்க மாட்டேன்” என்று வெளிப்படையாக சொன்னார் என்றால், இதை எல்லாம் கண்டித்துதான் அந்த ‘நீட்’ தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் பட்டினி அறப் போராட்டம் நடக்கிறது. எனவே, இந்த அறப்போராட்டம் தொடரும். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக தி.மு.க. ஓயாது – உறங்காது. எப்படி, 2021-இல் தி.மு.க. ஆட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒரு நல்ல நிலையை, ஒரு விடியலை ஏற்படுத்தி தந்திருக்கிறீர்களோ, அதேபோல் 2024 நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவுக்கு ஒரு விடியலை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.