தஞ்சாவூர். ஜூலை 9- கடந்த 6ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில் வந்த ஒருகாரை நிறுத்தி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன், பாண்டியன், காவலர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் பழமையான 3 அடி உயர திரிபுராந்தகர் சிலை, 2.75 அடி உயரவீணாதார தட்சிணாமூர்த்தி சிலை, 3.25 அடி உயர ரிஷபதேவர் சிலை,தலா 2.75 அடி உயர 3 அம்மன் சிலைகள் என 6 உலோக சிலைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தசிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், காரில் வந்த, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(42), திருமுருகன்(39) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த விவரம் வருமாறு:
மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(64) என்பவர் 5 ஆண்டு களுக்கு முன்பு, வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டியபோது, 6 அய்ம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றை சில ஆண்டுகளாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த அவர், பின்னர் தனது மருமகன் திருமுருகன், அவரது நண்பர் ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து வெளிநாட்டில் விற்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, லட்சுமணன் வீட்டிலிருந்து, ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு சிலைகளை எடுத்துக் கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டுள்ளனர். இதையடுத்து, 3 பேரையும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைகைது செய்து, 6 சிலைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் உத்தேச மதிப்பு ரூ.22 கோடி இருக்கும் எனதெரிகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் நேற்று (8.7.2024) ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் சிலைகள் மீட்பு:
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 17ஆவது தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன். சிற்பியான இவர்,தான் செய்யும் சிலைகளை விற்க,தன் வீட்டருகே சிறிய கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி காலை வழக்கம்போல கடையைத் திறந்தபோது கடையில் இருந்த 50 கிலோ எடையுள்ள அம்மன் அய்ம்பொன் சிலை மற்றும் மார்பளவு பெண் சிலை, சிறிய அய்ம்பொன் சிலைகள் உள்ளிட்ட 23 அய்ம்பொன் சிலைகள் திரு டப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பலலட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிலைகள் திருட்டு குறித்து,லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சிவசங்கரன் புகார் அளித்தார்.அதன் பேரில் காவல்துறைவிசாரித் தனர்.
4 பேர் கைது:
இத்திருட்டில் புதுச்சேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந் தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அலெக்ஸ்,அவற்றை நரிக்குறவர் காலனி அருகே புதரில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார். அவற்றை காவல்துறைநேற்று மீட்டனர். இதையடுத்து அலெக்ஸ் மற்றும் சிலை திருட்டில் உதவியதாக முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகியோரை காவல்துறைகைது செய்தனர்.