கூலிப் படைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக!
தமிழர் தலைவர் அறிக்கை
சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய ஆணையராக திரு.அருண் அய்.பி.எஸ். பொறுப்பேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கூலிப்படைகளின் கொட்டத்தையும், ரவுடிக் கும்பலையும் ஒழிக்கவேண்டும் என்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை பெருநகர காவல்துறைத் தலைவராக (கமிஷனராக) திரு.அருண் அய்.பி.எஸ். அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள மாறுதல் நியமனம் பெரிதும் வரவேற்கத்தக்கது.
கூலிப் படைகளின் கொட்டம், ரவுடிகளின் அட்டகாசத்திற்கு முழுதாய்ந்து முற்றுப்புள்ளி வைக்க முயலவேண்டும்.
முதலமைச்சர் அவர்கள் எந்த நட வடிக்கைக்கும் தாமதிக்காமல், உடனடியாகத் தீர்க்க மின்னல் வேகத்தில் செயல்பட்டாலும், அரசு இயந்திரம் அதனைப் புரிந்து, அவரது வேகத்திற்கு ஈடுகொடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது!
அதுபோலவே, சட்டம்– ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதும் வர வேற்கத்தக்கதாகும். மிகுந்த அனுபவம் வாய்ந்த வர் அவர்.
காவல்துறை, உளவுத் துறை போன்றவற்றில் உள்ள கருப்பு ஆடுகளைக் கண்டறிந்து, மிகக் கடுமையான நடவடிக்கைகளை இன்னார், இனியார் என்ற கண்ணோட்டமே இல்லாமல், முதலமைச்சரும், அரசும் செயல்பட்டு நிலை மைகளைச் சீரடையச் செய்யவேண்டும்.
முன்பு சென்னை ஆணையராக இருந்த
எப்.வி.அருள் அவர்கள் சென்னையில் அப்போது பிரபலமான காட்டன் சூதாட்டத்தை நன்கு வேட்டையாடி அறவே ஒழித்தார்!
அதுபோலவே வால்டர் தேவாரம் அவர்கள் ரவுடி ராஜ்ஜியத்திற்குத் தமது துணிச்சலான நடவடிக்கைகள்மூலம் முழுதும் முற்றுப்புள்ளி வைத்தார்.
சிறைக்கூடங்களில் கொலைக்கான சதிக் கிடங்குகளாக இயங்குவதாகச் சொல்லப்படு கிறது. அதுபற்றி அரசு சிறைக்குள்ளேயும் நன்கு ஆராய்ந்து உரியத் தீர்வு காணப்படவேண்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.7.2024