பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) எனும் பி.பி.ஷெல்லி உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர். ஆங்கிலக் கவிதை உலகில் அழியாப் புகழ்பெற்றவை ஷெல்லியின் படைப்புகள். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகளை பாராட்டியவர்கள் மிக மிகக் குறைவு. காலத்தைக் கடந்த படைப்புகளை படைத்தவர் இக்கவிஞர். இளம் வயதில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘நாத்திகத்தின் தேவை’ (Necessity of Atheism) எனும் சிறு கட்டுரையை எழுதியதற்காக கல்லூரி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
* If Winter comes, can Spring be far behind?
குளிர் காலம் வந்து விட்டால், வசந்த காலத்திற்கு அதிகம் காத்திருக்கத் தேவையில்லை.
* “A God made by man undoubtedly
has need of man to make himself
known to man.”
மனிதனால் படைக்கப்பட்ட கடவுளுக்கு சந்தேகத் திற்கு இடமின்றி மனிதன்தான் தேவைப்படுகிறான் – சக மனிதர்களுக்கு அந்த கடவுளை உணரச் செய்திட!
* “Rise like Lions after slumber
In unvanquishable number—
Shake your chains to earth like dew
Which in sleep had fallen on you—
Ye are many—they are few.”
நித்திரையிலிருந்து
விழித்தெழும் சிங்கங்களைப்போல் எழுவீர்
வெல்ல முடியாத எண்ணிக்கையில்
பூமியுடன் உமக்குள்ள சங்கிலிகள் போன்ற
பனித்துளிகளின் கட்டுப்பாட்டை உடைத்தெறிவீர்
நீங்கள் தூங்கும்பொழுது
உங்கள் உடலின்மீது விழுந்த பனித்துளிகள்தான் அவை.
நீங்களே பலர் – அவையோ சில.
இந்த கவிதை வரிகளை படிக்கும்பொழுது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவுகள் திறக்கப்பட்டது!
சிறுத்தையே வெளியே வா!”
தனிமை வாழ்க்கை, தடையற்றசிந்தனை, அளப்பரிய அழகியல் படைப்புகள் என்றே வாழ்ந்த கவிஞர் ஷெல்லியின் சமகாலத்து கவிஞர் நண்பர்கள் வோர்ஸ் வொர்த், ஜான் கீட்ஸ், பைரன் பிரபு ஆவர்.
இங்கிலாந்தில் பிறந்து சுதந்திரப் பறவையாக வாழ்ந்து மானுட சுதந்திரத்திற்காகப் பாடிய கவிஞர் ஷெல்லி இத்தாலி நாட்டின் லெரிசி எனும் ஊரில் படகில் சென்றபொழுது மரணமடைந்தார். சில நாள்களுக்குப் பின்னர்தான் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 1792ஆம் ஆண்டில் பிறந்து 1822ஆம் ஆண்டில் மறைந்து 30 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் ஷெல்லி ஒரு மானுடப் பற்றாளர், நாத்திகர். அவரது படைப்புகள் சாகா நிலை உடையவை.