பேரூரில் கடல் நீரை குடிநீராக மாற்ற ரூபாய் 4276 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்
சென்னை, ஆக 22 சென்னை பேரூரில் ரூ.4276 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மீஞ்சூரில்
மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் கடந்த 2007-ஆம் ஆண்டு அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறை அமைச்சராக இருந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால் 2010-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் இருந்து கிடைக்கக் கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதி களான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
நெம்மேலியில்
இதனைத்தொடர்ந்து நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு 2010ஆ-ம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி அப்போது துணை முதலமைச்சராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது சீரான முறையில் இயங்கிவரும் இந்த நிலையத்தின் மூலம், தென் சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப் பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பால வாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. விரைவில் இப்பணிகள் அனைத் தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதன்மூலம் உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப் பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
பேரூரில்
இந்த நிலையில், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பணி நடக்க இருக்கிறது.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் திட்டப் பணிகள் நடக்கிறது. தலைமை செய லகத்தில் இருந்து இதற்கான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலை யமாக அமைய உள்ளது. இந்த நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகா மையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். இந்த நிலையத் தில் கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ரா.கிர்லோஷ் குமார்.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக துணை தூதர் தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி, வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.