சென்னை ஜூலை 07- எடப்பாடியை துரோகி என பேசியதை திரும்பப் பெறாவிட்டால் அண்ணா மலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்’ என மேனாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் (6.7.2024) மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசியலில் வெற்று விளம்பர வெளிச்சம் காட்டி, அரசியல், பொதுவாழ்க்கை அனுபவ மின்றி அவதூறு பரப்பி, நாக்கில் நரம்பில்லாமல் அரசியல் பண்பின்றி அண்ணாமலை பேசுகிறார். இந்த தேர்தலில் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி ஒரு வாக்கு கூட பாஜவிற்கு யாரும் போட வில்லை.
பலர் கூட்டணி வைத்தும் பாஜவிற்கான வாக்குகள் குறைந் துள்ளது. எடப்பாடி பழனிசாமி கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அண்ணா மலை கூறுகிறார். முதலில் அண் ணாமலை அவர் முகத்தை கண் ணாடியில் பார்க்கட்டும். அவருக்கு புரியும்.
அதிமுக மீது அண்ணாமலைக்கு ஏன் அக்கறை? பிரதமரின் வலது புறத்தில் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்தோம் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை அங்கே உட்கார வைத்துவிட்டு, இங்கே அதிமுகவின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் அண்ணாமலை அவதூறாகப் பேசினால் பொறுக்க முடியுமா?
அண்ணாமலை தமிழ்நாட்டிற் காக என்ன செய்தார்? தமிழ் நாட்டிற்காக நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தந்தாரா? நிவாரண நிதியைக்கூட பெற்றுத் தராத கையாலாகாதவர் அண்ணா மலை. சென்னை, தூத்துக்குடி மாவட்டங்களின் மழை பாதிப்பிற்கு நிவாரணம் பெற்றுத் தந்தாரா? வாய்சவடால் பேசுகிறார்.
மேகதாது, முல்லைப் பெரியாறு, பாலாறு குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கிறார்கள். காவிரியில் உரிய நீர் கிடைக்கவில்லை.
ஒன்றிய அரசு வாய் திறக்க வில்லை. இதற்கு அண்ணாமலை என்னதான் செய்தார்? அண்ணா மலை பேராசை காட்டி வருகிறார். அவரின் சூழ்ச்சி எங்களுக்குத் தெரியும். சுற்றிச் சுற்றி சூழ்ச்சி வலை விரிக்கிறார்.
ஈரோடு தேர்தலை பற்றி அண்ணாமலை பேசியுள்ளார். ஓபிஎஸ் அணியில் போட்டியிட்ட வேட்பாளர், எங்களுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவு தந்த போட்டோ உள்ளது.
பொதுவாக இரு தலைவர்கள் பேசும் கருத்துக்களை ரகசியமாக வைப்பதே அரசியல் நாகரிகம்.
அண்ணாமலை நாகரிகமின்றி ரகசியத்தையும் பேசி வருகிறார். இதே போன்று டில்லி தலைமை அண்ணாமலையிடம் பேசியதை தனக்கு ஆபத்து வரும்போது கூட வெளியிடுவார். டில்லி தலைமைக் கும், அண்ணாமலையால் ஆபத்து இருக்கிறது.
அண்ணாமலை ஏற்ெகனவே அரவக்குறிச்சியில் நின்று தோற்றார். கோவையில் பல கோடியை வாரி இறைத்து, வார்த்தை ஜால வித்தைகள் காட்டியும், மக்கள் அவரை நிராகரித்து விட்டனர்.
ஆனால், பாஜ வளர்ச்சியடைந்த தாக கூறுகிறார். தொடர்ந்து எலும்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்பதாக அண்ணாமலை பேசினால் தொண்டர்கள் வெகுண்டு எழுவார்கள். அதிமுக தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.
எடப்பாடி பழனிசாமி குறித்து துரோகி என அண்ணாமலை பேசியதை திரும்ப வாங்க வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலைக்கு எதிராக சிறை நிரம்பும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழத் தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.