சென்னை, ஜூலை 7- பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப் பட்ட விவகாரத்தில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக, மேலும் சிலரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் (52). பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தார். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்குரைஞர் படிப்பு முடித்து கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். 2006ஆம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பக்கம் அரசியல், வழக்குரைஞர் தொழில் என சென்று கொண்டிருந்தாலும் தொடர்ந்து, மற்றொரு பக்கம் பல்வேறு வழக்குகளில் சிக்கி விமர்சனத்திற்கும் ஆளானார்.
பிறகு வழக்குகளில் இருந்து படிப் படியாக விடுதலையானார். 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியை சென் னைக்கு அழைத்து வந்து மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் பிரபலமானார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் நடந்த தேர்தல்களில் இவரது கட்சி வேட்பாளர்களை மட்டும் நிறுத்தி பிரச்சாரத்திற்கு மட்டும் செல்வதை ஆம்ஸ்ட்ராங் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையர் பேட்டி
ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல்வேறு நபர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. அதன் காரணமாக கூட கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணை யாளர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார். சென்னை வேப்பேரியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று (6.7.2024) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நேற்று முன்தினம் (5.7.2024) மாலை 7.15 மணிக்கு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன் கத்தியால் தாக்கப்பட்டார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரில் செம்பியம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி கேமரா ஆய்வு செய்யப் பட்டது. 3 மணி நேரத்தில் காவல் துறையினரால் 8 நபர்கள் கைது செய்யப் பட்டு, புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 8 நபர்கள் மட்டுமல்லாது, மேலும் குற்றத்துடன் தொடர்பு உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது
சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். இந்த சம்பவம் அரசியல் ரீதியான பிரச்சினை என்று சொல்ல வாய்ப்புகள் குறைவு. பொன்னை பாலு மற்றும் அவரது அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும்போது என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். விசாரணையின் முடிவில்தான் காரணம் தெரியும். பொன்னை பாலு மீது 4 வழக்குகள், மணிவண்ணன் மீது 4 வழக்குகள் என ஒருவர் தவிர மற்றவர் களின் மீது வழக்குகள் உள்ளன.
நேரடியாக ஆம்ஸ்ட்ராங்கிற்கு மிரட்டல் இருந்ததாக நமக்கு தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளார். அதனால் உளவுத்துறை வழக்கமாக கண்காணிக்கும். அதுமாதிரியான தகவல் நம்மிடம் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின்னர் ஆம்ஸ்ட்ராங், தனது கைத்துப்பாக்கியை திரும்பப் பெற்றுள்ளார்.
அவருடைய கைத் துப்பாக்கி அவரிடம்தான் உள்ளது. தற்போதைய விசாரணைப்படி ஆம்ஸ்ட்ராங் ஜாதி ரீதியாக கொலை செய்யப்படவில்லை. இந்த கொலையில் குற்றவாளிகள் எவரும் சரணடையவில்லை. விரை வான விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் மீது இருந்த 7 வழக்குகளும் முடிவடைந் துள்ளன. அவரது கொலையில் எந்த மாதிரியான ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டது என்பது குறித்து முழு விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் எவரும் இல்லை.
கைது செய்யப்பட்டவர்களில் பாலு என்பவர் வேலூர் மாவட்டம், மணிவண்ணன் – திருவள்ளுர், திருமலை பெரம்பலூர் மாவட்டம் ஆகும். ரவுடிகள் மீது கண்காணிப்பு தொடர்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேவைக்கு ஏற்ப காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார். கடந்த காலங்களை ஒப்பிடும்போது சென்னையில் கடந்த 6 மாதங்களில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த 2023இல் முதல் 6 மாதங்களில் 63 கொலை நடந்தது. இந்த ஆண்டு அது 58 ஆக குறைந்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னைதான் என நாங்கள் சொல்லவில்லை, ஆய்வில் சொல்லியுள்ளார்கள்.
சென்னை மாநகரை பொறுத்தவரை பொதுமக்கள் பாதுகாப்பு என்பது காவல்துறைக்கு மிக முக்கியமானது. எப்போதும் பொதுமக்களுக்கு காவல் துறையினர் உதவியாக உள்ளனர்.
எந்த குற்றம் நடைபெற்றாலும் அதன் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் கூறினார்.
இக்கொலை சம்பந்தமாக பா.ஜ.க. மண்டலத் தலைவர் உள்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.