சென்னை, ஜூலை 6- புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குரைஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்குரைஞரைருமான வில்சன் தலைமையில், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் மற்றும் பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அதைத்தொடர்ந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அளித்த பேட்டி வருமாறு:-
3 புதிய குற்றவியல் சட்டங்களை யும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்திய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கேட்டால், எவரோ ஒருவர் வழக்கு தொடர்ந்தார், நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு அளித் துவிட்டது என இந்த விவகாரத்தை எடுத்து கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவுகள் ஒரு போதும் இந்த சட்டங்களை கட்டுப்படுத்தாது.
வழக்குரைஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அந்த சட்டங்கள் அமல்படுத்தபட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை இடை நீக்கம் செய்து அந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நடைமுறையில் இருக்கிற சட்டங் களை எடுத்துவிட்டு, உச்சரிக்க முடியாத மொழியில் சட்டம் இயற்ற பட்டுள்ளது. அவசர அவசரமாக இந்த சட்டங்களைக் கொண்டு வந்து ஒன்றிய அரசு என்ன சாதிக்க போகிறது?
எனவே ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் சந்தித்து இந்த சட்டங்களை நீக்க ஆதரவு கேட்போம்.
இவ்வாறு அவர்பேசினார்.
வழக்குரைஞர் மாரப்பன் கூறியதாவது:- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களை எதிர்த்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியதற்காக அவருக்கு நன்றி கூறினோம். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தோம்.