*400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்கள் இப்பொழுது பிரதமர் நாற்காலிக்கு
முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
*40-க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை செய்து முடித்திருக்கிறது
தி.மு.க. கூட்டணி – இந்தியா கூட்டணி!
*ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!
குற்றாலம், ஜூலை 6 ஓர் ஆட்சி, போராட்டங்களைத் தவிர்க்கவேண்டுமே தவிர, அந்த ஆட்சியே போராட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்கு இருப்பது நல்லதல்ல. இப்பொழுது ஜனநாயகத் தீர்ப்பு வந்த பிறகுகூட, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினர் திருந்தியபாடில்லை. 400 இடங்களை எதிர்பார்த்தவர்கள், இப்பொழுது பிரதமர் நாற்காலிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணி
40-க்கும் 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, அதன்படியே 40 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் 45 ஆவது ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த 4.7.2024 முதல் 7.7.2024 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க சென்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (5.7.2024) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
45 ஆவது ஆண்டாக நடைபெறும்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாமினை நாங்கள் தொடங்கி இது 45 ஆவது ஆண்டாகும்.
45 ஆண்டுகளும் கோடை காலத்தில் மிகப்பெரிய அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், குறிப்பாக தென்மாவட்டங்க ளில் இருக்கின்ற மாணவர்கள், கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள், இருபால் இளைஞர்கள், முப்பால் இளைஞர்கள் எல்லோருமே இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு இது 45 ஆவது ஆண்டாகும். பெரியாரியல் பயிற்சிக்காக இந்தப் பணியைத் தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டு வருகிறோம்.
இந்த ஆண்டு இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக வந்த நேரத்தில் பத்திரிகை யாளர்களான உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாமலேயே…
செய்தியாளர்: மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருத மொழியில் மாற்றியதற்காக ஒன்றிய அரசை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: மூன்று கிரிமினல் சட்டங்களும் – காலனிய சட்டங்களாக இருக்கின்றவற்றை நாங்கள் மாற்றப் போகின்றோம் என்று சொல்லும்பொழுது – 200 ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்திய பீனல் கோடு – இந்திய சிவில் புரசிஜர் கோடு – எவிடன்ஸ் ஆக்ட் என்று சொல்லக்கூடிய மூன்று சட்டங்களையும் அவர்கள் மாற்றுவதற்கு முன்னால், இந்தியா முழுவதும் உள்ள வழக்குரைஞர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், வழக்காடிகள் மத்தியிலும், சட்ட நிபுணர்கள் மத்தியிலும் ஒரு நீண்ட விவாதம் நடைபெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
அதைவிட மிக முக்கியம் நாடாளு மன்றத்தில், இரு அவைகளிலும் இதைப்பற்றி
உச்சநீதிமன்றக் கேள்விக்கு முதலில் அண்ணாமலை பதில் சொல்லட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி –
விலாவாரியாக, ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதுபற்றி பொது விவாதம் நடத்தியிருக்க வேண்டாமா? இந்த சட்டங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மனித உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. பழைய தடா சட்டங்கள், பொடா சட்டங்கள், மிசா சட்டங்கள் போன்ற சட்டங்கள் – அவற்றினுடைய நிழல் பாயக்கூடாது என்ற அளவில், பெரிய விவாதங்களை நடத்தியிருக்கவேண்டும்.
கடந்த ஒன்றிய ஆட்சியில், நாடாளுமன்றம் எப்படி நடந்தது என்பது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்ததுதான்.
எவ்வளவு பெரிய சட்டமாக இருந்தாலும், இரு அவைகளிலும் விவாதமின்றியும், நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பாமலும், சில மணிநேரத்திலேயே அந்த சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலைதான்.
எதிர்க்கட்சிக்காரர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டால், 146 உறுப்பினர்களை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து, ஒன்றிய ஆட்சியாளர்கள் விரும்பிய சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது போன்ற நிலை.
அவசரக்கோலத்தில் அள்ளித்
தெளித்ததுபோல இருக்கக் கூடாது!
அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையே, அடிக்கட்டுமானங்களையே சில மணிநேரங்களில் அவர்கள் விருப்பம் போல் மாற்றியமைத்து நிறைவேற்றினார்கள். ஆகவேதான், நாடு முழுவதும் இருக்கின்ற வழக்குரைஞர்கள் ஒரு பெரிய போராட்டத்தினை நடத்துகிறார்கள்.
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப் பட்டு இருக்கின்றன. அவ்வழக்குகளும் விசாணையில் இருக்கின்றன.அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல இருக்கக் கூடாது.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த சட்டங்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்று நேற்றுகூட ஒன்றிய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ஒரு சர்வாதிகாரி ஆட்சி போன்று இருக்கிறது ஒன்றிய அரசு.
அரசமைப்புச் சட்டத்தின்
அடிப்படைக்கே விரோதமானது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே இப்பொழுது கொண்டுவந்துள்ள சட்டங்கள் விரோதமானவை யாகும்.
எப்படி என்றால், சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். இந்த சட்டங்களின் பெயர் சமஸ்கிருத பெயரிலும், ஹிந்தியிலும் இருக்கின்றன.
அவர்கள் சட்டத்தை மட்டும் மாற்றவில்லை. சமஸ்கிருதத் திணிப்பு, ஹிந்தித் திணிப்பைச் செய்திருக்கிறார்கள்.
ஆகவேதான், அந்தச் சட்டங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றால், நாடு தழுவிய அளவிற்கு விவாதங்கள் செய்யப்பட்டு, அதன் பிறகுதான் அந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
வழக்குரைஞர்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் தெளிவுபடுத்தவேண்டும்!
200 ஆண்டுகளாக இருந்து வந்த சட்டங்களை மாற்றுகின்ற நேரத்தில், மக்களைப் பக்குவப்படுத்தவேண்டும்; அதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவேண்டும். எல்லாவற்றையும்விட, வழக்குரைஞர்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் தெளிவு ஏற்படவேண்டும்.
மேற்சொன்ன மூவருமே இதில் தெளிவடையவில்லை; திருப்தியடையவில்லை என்கிறபொழுது, இந்தச் சட்டங்கள் ஏற்கத்தக்கதல்ல.
போராட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்கு
ஓர் ஆட்சி இருப்பது நல்லதல்ல!
ஓர் ஆட்சி, போராட்டங்களைத் தவிர்க்கவேண்டுமே தவிர, அந்த ஆட்சியே போராட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்கு இருப்பது நல்லதல்ல.
இப்பொழுது ஜனநாயகத் தீர்ப்பு வந்த பிறகுகூட, அவர்கள் திருந்தியபாடில்லை. இப்பொழுது ஒன்றியத்தில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரால், இரண்டு, மூன்று கட்சிகளின் ஒட்டுப் போடப்பட்டுதான் அந்த பிரதமர் நாற்காலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, இந்தப் போராட்டங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால், ஜனநாயகத்திற்கு, மக்களின் குரலுக்கு, வழக்குரைஞர்களின் நியாயமான விமர்சனங்களுக்குக் காது கொடுக்கவேண்டும். ஒன்றிய அரசு, தன்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவேண்டும்.
அவசரத்தில் திணிப்பதற்கு
இது சர்வாதிகார நாடு அல்ல!
இந்தச் சட்டங்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, நல்ல அளவிற்கு விவாதிக்கப்பட்டு, பிறகு மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற அய்யங்களைத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அவசரத்தில் திணிப்பதற்கு இது சர்வாதிகார நாடு அல்ல; ஜனநாயக அமைப்பு முறை சிதைக்கப்படக் கூடாது.
அரசமைப்புச் சட்டத்தின்படி, சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்று இருக்கும்பொழுது, அந்த அடிப்படையைக்கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள் என்றால், இது அரசமைப்புச் சட்ட விரோதமும் ஆகும்.
கருத்துகளைச் சொல்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் தொடர்ந்து நடிகர்கள் அரசிய லுக்கு வருகிறார்கள்; உதாரணமாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த்தைத் தொடர்ந்து இப்பொழுது நடிகர் விஜய் அவர்களும் அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார்; அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: கருத்துகளைச் சொல்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. அதேபோன்று கட்சியைத் தொடங்குவதற்கும் யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால், எந்தக் கொள்கைக்காக கட்சித் தொடங்கப்படு கின்றது என்பதுதான் மிகவும் முக்கியம்.
நடிகர்களாக இருந்தால், அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்து தவறானது என்பதை, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்தாம் தொடங்கிய கட்சியின் மூலமாக ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கட்சித் தொடங்கிய பல நடிகர்கள்,
அக்கட்சிகளை மூடிவிட்டார்கள்!
எம்.ஜி.ஆர். அவர்கள், ஏற்கெனவே திராவிட இயக்கத்தில் பங்கேற்று ஊறிய கொள்கைக்காகத்தான் அவரால் வெற்றி பெற முடிந்ததே தவிர, நடிகர் என்பதாலேயே அவர் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியாது.
ஏன் இது சிவாஜி கணேசனுக்குப் பொருந்தவில்லை என்கிற கேள்வி வரும். கட்சித் தொடங்கிய பல நடிகர்கள், அக்கட்சிகளை மூடிவிட்டார்கள் – அதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
நடிப்பு ஒரு மூலதனமல்ல அரசியலுக்கு. ஆனால், அரசியலில் வேண்டுமானால் நடிப்பு பயன்படலாம்; பயன்படுகிறது. ஆனால், நடிப்பே மூலதனமாக ஆக முடியாது என்பது வேறு செய்தி.
இருந்தாலும், கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சியினுடைய கொள்கையைச் சொல்லும்பொழுது, அது ஏற்கத்தக்கதா, இல்லையா என்பதைப் பார்க்கவேண்டும்.
ஓர் இயக்கத்திற்கு என்ன கொள்கைகள் என்பதை அறிவிப்பதுதான் மேல்நாட்டு முறை!
ஒர் இயக்கம் தொடங்குவதற்குமுன், அந்த இயக்கத்திற்கு என்ன கொள்கைகள்? என்ன செய்யப் போகிறது அந்த இயக்கம் என்பதை அறிவிப்பதுதான் மேல்நாட்டு முறை – நம்முடைய நாட்டிலும் அந்தக் காலத்திலிருந்து அதுதான் முறை. ஆனால், இப்பொழுது அதுபோன்று இல்லாமல், கட்சியைத் தொடங்கிவிடுகிறோம்; பிறகு கொள்கைகளைச் சொல்கிறோம் என்ற நிலை.
வண்டிக்கு முன்னால் குதிரையா? குதிரைக்கு முன்னால் வண்டியா? என்ற கேள்விதான் எழுகிறது.
ஆகவேதான், கட்சித் தொடங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. மக்கள் மத்தியில் இப்பொழுது எது முக்கியமாக இருக்கிறதோ, அந்தக் கருத்தைச் சொன்னால், அது நடிகர் விஜய் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, வரவேற்கவேண்டிய கருத்துகளை வரவேற்கிறோம்.
நீட் எதிர்ப்புக் குரல் நாடு தழுவிய
அளவில் எழுந்திருக்கிறது!
நீட் தேர்வு ஒழியவேண்டும் என்கிற கருத்து இப்பொழுது நாடு தழுவிய அளவில் எழுந்திருக்கிறது.
முதலில், இதை திராவிடர் கழகம்தான் சொல்கிறது என்றார்கள். பிறகு தி.மு.க. சொல்கிறது என்றார்கள். தி.மு.க. – தி.க.தான் சொல்லுகின்றன என்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர்தான் சொன்னார் என்றார்கள். பிறகு தமிழ்நாடு மட்டும்தான் சொல்கிறது என்றார்கள்; பிறகு தென்னாட்டில் மட்டும்தான் சொல்கிறார்கள் என்றார்கள்.
இப்பொழுது அகில இந்திய அளவில், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்தும் நீட் எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.
ஆகவேதான், சொல்கின்ற கருத்துதான் முக்கியமே தவிர, யார், எப்போது சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
ஆனால், இதை மட்டும் வைத்தே, அவருடைய கட்சியைப் பற்றியோ, அவர் கட்சியின் கொள்கைகளைப் பற்றியோ யூகம் செய்யவேண்டிய அவசியமில்லை.
இது ஒரு சாதாரண வெளிச்சமே தவிர, அந்த வெளிச்சமே முழு கலங்கரை விளக்கம் என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை.
தோற்றுப் போனவர்களுக்கெல்லாம்
அமைச்சர் வேலை கொடுக்கின்ற
ஒரு ‘‘ஜனநாயகக் கட்சி” பா.ஜ.க
செய்தியாளர்: தமிழ்நாடு, புதுவை உள்பட நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இதைத் தொடர்ந்து விமர்சனம் செய்கிறாரே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எதை வேண்டுமானலும் விமர்சனம் செய்வார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. ஏனென்றால், தோற்றுப் போனவர்களுக்கெல்லாம் அமைச்சர் வேலை கொடுக்கின்ற ‘‘ஒரு ஜனநாயகக் கட்சி” பா.ஜ.க.
ஒருமுறை தோல்வி என்பது அல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருமுறை தோற்று; பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் இன்னொரு தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி.
தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்களையெல்லாம் அமைச்சர்களாக ஆக்கியிருக்கிறார்கள்.
400 இடங்களை எதிர்பார்த்தவர்கள், இப்பொழுது பிரதமர் நாற்காலிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணி 40-க்கும் 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, அதன்படியே 40 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
பெரியார் மண்ணுக்கு உண்டு;
திராவிட இயக்கத்திற்கு உண்டு
இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, அரசியல் வரலாற்றி லேயே சொன்னதைச் செய்தது மட்டுமல்ல; இதுதான் எங்கள் இலக்கு என்று காட்டக்கூடிய வாய்ப்பு இந்தப் பெரியார் மண்ணுக்கு உண்டு; திராவிட இயக்கத்திற்கு உண்டு. திராவிட ஆட்சியினுடைய வெற்றி மலர்களாக இவை விளங்கட்டும்.
கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு இருக்கிறது
செய்தியாளர்: தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மது விலக்கினைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்று சொல்லியிருந்ததே, இன்னும் அதனை செய்யவில்லையே?
தமிழர் தலைவர்: அதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றனவே. படிப்படியாகக் கொண்டு வருவோம் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்.
ஏனென்றால், இன்றைக்கு இருக்கின்ற சூழலை எதார்த்தமாகப் பார்க்கவேண்டும். விஷச் சாராய உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் நடைபெற்று இருக்கின்றன. அதற்காக உயிரிழப்புகளை நியாயம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக செய்தார்.
நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒருமுறை கலைஞர் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அருமையான ஒரு வரியைச் சொன்னார்.
‘‘கொளுத்தப்படாத கற்பூரம் நடுவில் இருக்கும்பொழுது, கொழுந்துவிட்டு எரியும் தீப்பந்தங்கள் சுற்றி இருந்தால் என்ன நிலை?” என்று கேட்டார்.
அதுபோன்று, கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு இருக்கிறது. கொழுந்துவிட்டு எரியக்கூடிய தீப்பந்தங்களாக பக்கத்தில் பாண்டிச்சேரி, காரைக்கால், ஆந்திரா, கருநாடகா என்று தென்னாடுகளை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அறிவித்தாலும், போதைப் பொருள்களுக்குத் தடை இருந்தாலும், அதற்காக ஆயுள் தண்டனை போன்றவை இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் குஜராத் மாநிலத்தில் இறக்குமதி ஆகி, மற்ற மாநிலங்களுக்கு வருகிறது என்ற நிலை இருப்பதுபோன்று – சட்டங்கள் முக்கியம் – சட்டத்தின் கைகள் நீளம் – சட்டத்தை மீறுகின்ற கைகள் அதைவிட நீளம் என்ற ஒரு பழமொழி உண்டு.
அதுபோன்று, சட்டத்தை மீறுகின்றவர்களைப் பிடித்து தண்டனை வழங்குகிறார்கள்.
மதுவிலக்கினை படிப்படியாகத்தான் செய்ய முடியும்!
ஆகவேதான், நிதிநிலை, மக்கள் நிலை, பிரச்சாரம் இவற்றையெல்லாம் கணக்கெடுத்து, ஓர் ஆட்சியினுடைய எதார்த்தத்தை உண்மையாகப் பேசவேண்டுமானால், மதுவிலக்கினை படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்று சொல்லி, அதனைக் குறைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற அனுபவங்களை வைத்து, என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வதற்குத் தயாராகி இருக்கிறது.
சட்டங்களைக் கடுமையாக்கி இருக்கிறார்கள்; தண்டனையை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்; காவல் துறையில் உரிய நடவடிக்கையை எடுத்துப் பரிசுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.
எனவே, இந்தப் பணிகள் தொடரும்.
அதற்குமேலே மற்ற வாய்ப்புகள் இருக்கும்பொழுது, நிலைமைக்கு ஏற்றவாறு செய்யவேண்டியது அரசாங்கத் தினுடைய கடமை. அதைத் தெளிவாகச் செய்வார்கள்.
இன்னும் காலம் இருக்கிறது. ஆகவேதான், ஏற்கெனவே நடந்த அனுபவங்களையெல்லாம் பார்த்துவிட்டு, மது விலக்கை செய்யவேண்டும்.
எங்கெங்கே ஒட்டைகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கவேண்டும். ஒருமுனை அல்ல, பல்முனை தாக்குதல் நடந்தால்தான், இதில் வெற்றி பெற முடியுமே தவிர, அப்படி செய்யவில்லையானால், இதில் வெற்றி பெற முடியாது.
உச்சநீதிமன்றக் கேள்விக்கு முதலில் அண்ணாமலை பதில் சொல்லட்டும்!
செய்தியாளர்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறாரே?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு எல்லா அறிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசு. அதற்கு முன்பு உச்சநீதிமன்றம் என்ன கேள்வி கேட்கிறதோ, அந்தக் கேள்விக்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும்.
நீட் தேர்வு முகமை என்பது, எவ்வளவு ஒழுக்கக்கேடாக, ஒழுங்கீனமாக நடந்திருக்கிறது. நீதியை சிதைக்கலாமா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார். பா.ஜ.க. தலைவர் அந்தக் கேள்விக்கு முதலில் பதிலைச் சொல்லிவிட்டு, மற்ற கேள்விகளைக் கேட்கட்டும்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.