ஆம்! தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே கேட்கப்படும் நடத்துநர்களின் குரல்கள் இவை! சிலைகளின் வரலாற்றையே தமிழ்நாட்டில் ஓர் ஆய்வு செய்யலாம்! மரியாதைக்கும், புகழுக்கும் வைக்கப்படுகிற சிலைகள் ஒருவகை; கொள்கை யைக் குறிக்கோளாகக் கொண்ட சிலைகள் மறுவகை! இதில் இரண்டாவது ரகம் பெரியார் சிலைகள்! மாநகரம் தொடங்கி சிற்றூர் வரை அவர் இல்லாத இட மில்லை! அரசாங்கம், தனி அமைப்புகள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், இயக்கத் தோழர்கள் எனப் பெரியார் சிலையை வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகமானது! ஒவ்வொருவருக்கும் அவர் பயன்படுகிறார்; மொத்தத்தில் சமூகத்தைக் காத்து நிற்பவர்!
எங்கம்மா இறங்கணும்? “பெரியார் சிலையில் இறக்கி விடுங்க”, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எப்படிப் போகணும்? “பெரியார் ‘பஸ் ஸ்டாண்டில’ இறங்கி, வலது பக்கம் போங்க என்கிற ஓயாத திசைகாட்டும் குரல்களை நாம் கேட்க முடியும்! அதிலும் சிறீரங்கம் போன்ற ஆன்மீக ஸ்தலங்களில் (?) உள்ள பெரியார் சிலைகளுக்குச் சிறப்பு வரலாறே உண்டு! இப்படியான பெரியார் சிலை, திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது! அதுகுறித்து இந்த வார மகளிர் சந்திப்பில் காண்போம்!
அம்மா வணக்கம்! பெரியார் சிலை என்பது என்ன மாதிரியான உணர்வுகளை உங்களுக்குள் ஏற்படுத்தியது?
திருமணத்திற்கு முன்பு நான் பக்தியோடு தான் இருந்தேன். அதன் பின்பும் 5 ஆண்டுகள் வெள்ளிக்கிழமை விரதம் இருந்தேன். திருவாரூர் மாவட்டத்தின் சிறு கிராமமாக இருந்தாலும், திருவாதிரை மங்கலம் திராவிடர் கழகக் கோட்டையாக இருந்தது! கிராமத்திற்குள் நுழைந்தால் பெரியார் சிலை நம்மை வரவேற்கும்! சுற்றியுள்ள கிராமங்க ளிலும் பல இடங்களில் பெரியார் சிலை இருக்கும். கங்களாஞ் சேரி தொடங்கி நாகூர் வரைக்குமே நான்கைந்து இடங்களில் பெரியார் இருப்பார்! பல ஊர்களில் பேருந்து நிறுத்தம் பெயரே பெரியார் சிலைதான்! “பெரியார் சிலை வந்துருச்சு, இறங்குங்க” என்பார் நடத்துநர். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும்!
பெரியார் பிறந்த நாள், பொங்கல் இந்த இரண்டையும் எங்கள் கிராமமே கொண்டாடும். பெரியார் சிலை அலங்கரிக்கப்பட்டு, கழகக் கொடிகள் கட்டப்பட்டு, ஒலி பெருக்கியில் பாடல்கள் இசைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கி அந்த நாளே மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஆன்மீகத்தில் நாட்டமாக இருந்த போதே, இந்த நிகழ்வுகள் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தின!
உங்கள் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
1973இல் எனக்குச் சுயமரியாதைத் திருமணம் நடை பெற்றது. இணையர் பெயர் இராஜேந்திரன். கிராமத் தலைவர் அட்சயலிங்கம், பெரியார் பெருந்தொண்டர் வி.சுப்பிர மணியன் இருவரும் திருமணத்தை நடத்தி வைத்தனர். கிழக்குப் பக்கம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள். ஆனால் என் திருமணம் மேற்கு பக்கம் பார்த்து நடந்தது! இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிலர், பாதியிலேயே மண்டபத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் என் இணையர் அதுகுறித்துக் கவலைப்படவில்லை! பெரியார் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்.
நீங்கள் எப்போது கொள்கைக்கு வந்தீர்கள்?
எப்போதுமே நான் பத்திரிகைகள், நூல்கள் படிப்பேன். அப்போது தொலைக்காட்சிகள் இல்லை. திருமணத்திற்குப் பின்பு விடுதலை நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கினேன். இயக்க நூல்களையும் ஆர்வமாகப் படித்தேன். இந்த வாசிப்பு என்னுள் மாற்றத்தை உருவாக்கியது. இந்நிலையில் இணையரின் அக்கா குடும்பம் திருப்பதிக்குச் சாமி கும்பிடச் சென்றார்கள். அப்போது நடைபெற்ற விபத்தில் ஒரே நேரத்தில் 12 பேர் இறந்துவிட்டார்கள். அந்நிகழ்வு என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கிராமத்தில் யாரும், யாருக்கும் அடிமை வேலை செய்யக்கூடாது என இயக்கத்தில் பிரச்சாரம் செய்வார்கள். அவையெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர் பிரச்சாரம் மூலம் அந்த நிலையையே கிராமத்தில் இருந்து ஒழித்துவிட்டார்கள். 1973இல் பெரியார் மறைந்த போது, எங்கள் கிராமமே அழுதது. அழுகாத ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். ஆனால் பின்னாளில் பெரியாரின் தீவிர தொண்டராக மாறிப் போனேன்!
தீவிரத் தொண்டராக செய்த பணிகள்
குறித்துச் சொல்லுங்கள்?
பிறந்த ஊரிலும், திருமணமாகி சென்ற ஊரிலும், “நான் ஒரு நாத்திகர், கடவுளைக் கும்பிடாதவர், இந்து மதப் பண்டிகைகளை விரும்பாதவர் என்பதை வியப்பாகவும், வெறுப்பாகவும் பார்த்தார்கள்! அதுமட்டுமின்றி அடிக்கடி கருப்புச் சேலை கட்டி வெளியே செல்வதை வெறித்துப் பார்ப்பார்கள். நன்னிலத்தில் நடந்த சிறு மாநாடு ஒன்றில், மேடையில் ஏறி தாலியை அகற்றிக் கொண்டதை, ஆண்டாண்டு காலமாய் பேசினார்கள். எங்கள் பகுதியில் வட்டாரக் கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். கிளைக் கழகத் தலைவராக 10 ஆண்டுகளும், திருவாரூர் மாவட்ட மகளி ரணித் தலைவராகச் சில ஆண்டுகளும் இருந்துள்ளேன். கொட்டாரக்குடி மகளிர் மாநாடும், திருவாரூர் மகளிர் மாநாடும் நான் பொறுப்பில் இருந்த போது நடந்தவை. நாகையில் ஒருமுறை பெரியளவில் மகளிர் மாநாடு நடந்தது. யானை, குதிரை போன்றவை எல்லாம் ஊர்வலத்தில் வந்தன. அவற்றையெல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாது!
போராட்டங்களில் பங்குபெற்று, சிறை சென்ற அனுபவம் இருக்கிறதா?
இயக்கத்திற்கு வந்த பிறகு எந்த ஒரு கூட்டத்தையும் தவறவிடுவதில்லை. வெளியூர்களில் நடைபெறும் பெரு நிகழ்ச்சிகள், மாநாடுகளிலும் பங்கேற்போம்! அனைத்து ஜாதி அர்ச்சகர் போராட்டத்திற்குச் சுமார் 200 மகளிர் சென்னைக்குச் சென்றோம். ஒருநாள் கைதாகி விடுதலை செய்யப்பட்டோம். பெரியார் சிலை சேதம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் நாகூர் சிறையில் ஒரு நாள் இருந்தேன். இதுபோன்ற போராட்ட அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. இதில் மிக முக்கியமான ஒரு சம்பவமும் என் வாழ்வில் நடந்தது.
அதுகுறித்துக் கூறுங்களேன்?
69 விழுக்காடு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 15 மகளிர் கைது செய்யப் பட்டு, வேலூர் சிறையில் வைக்கப்பட்டோம். நாட்கள் முடிந்த நிலையில் நீதிபதி முன்பு அழைத்துச் சென்றார்கள். மகளிராக இருந்து கொண்டு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்? உங்கள் தலைவர் வீரமணி சொன்னால் செய்து விடுவீர்களா? என நக்கல் தொணியில் கேட்டார். எங்கள் வீட்டுப் பிள்ளைக்கும், ஆசிரியர் வீட்டுப் பிள்ளைக்கும் போராட்டம் செய்யவில்லை; உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்தே போராட்டம் செய்கிறோம் எனக் கூறினோம். இதனால் கோபமடைந்த அவர், விடுதலையான எங்களை மீண்டும் 15 நாள் வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பிறகு என்ன ஆனது?
மீண்டும் 15 நாள் சிறையில் அடைத்துவிட்டனர். அதுசமயம் அங்கிருந்த பெண் காவலர் எங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுத்தார். சோதனை என்கிற பெயரில் அடிக்கடி மன உளைச்சல் தந்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து எதிர்க்கத் தொடங்கி விட்டோம். “கொடும்பாவி எரித்து வந்துள்ளோம்; குடும் பத்தைப் பிரிந்து வந்துள் ளோம்! போராட்டம் எங்களுக்குப் புதிதல்ல”, என்று கூறி, தேவைப்பட்டால் சிறையிலேயே போராட்டம் செய்ய தயங்க மாட்டோம் எனக் கூறினோம். இந்நிலையில் கழக வழக்குரைஞர் அருள்மொழி அவர் கள் பார்க்க வந்தார். அவரிடம் விவரங்களைக் கூறினோம். பிறகு சிறையிலேயே ‘ஜெயிலர்’ மீது புகார் கொடுத்தோம். அது வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த ஜெயிலர் தன் நிலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். போராட்டம் செய்து சிறைக்குச் சென்று, அங்கும் போய் ஒரு வழக்குப் போட்டு வந்துள்ளீர்களே என எஸ்.எஸ்.மணியம் அய்யா அடிக்கடி கூறுவார்கள்.
ஒரு சிறு கிராமத்தில் இருந்தாலும், இயக்க நடவடிக்கையில் தீவிரமாக இருந்துள்ளீர்களே?
ஆமாம்! திருவாரூரில் பெரியார் நூலகத்தில் மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். தவறாமல் போய் வருவோம். உறவினர்களை விட, கருப்புச் சட்டை தோழர்களைக் கண்டால் கூடுதல் மகிழ்ச்சி! எங்கள் வீட்டில் பெரியார், மணியம்மையார், ஆசிரியர் படங்கள் மட்டுமே இருக்கும். சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு ஆசிரியர் வந்தால் சென்று விடுவோம். ஆசிரியரின் பேச்சு என்பது கொள்கைக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகள்! நான் எப்போதும் விரும்பிக் கேட்பேன், நம் சிந்தனைகளையும் தூண்டிவிடும்! ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது ஆசிரியரைப் பார்க்கவில்லை என்றால், ஏன் இந்தப் பக்கம் நிகழ்ச்சிகள் இல்லையா என்கிற யோசனை வந்துவிடும்.
உங்கள் கிராமத்தில் முன்பிருந்த பெரியார் பெருந்தொண்டர்களை நினைவில் இருக்கிறதா?
சிலரை நினைவில் இருக்கிறது. கழகக் கொடிக் கட்டி, பாடல்கள் போட்டாலே கிராமம் களை கட்டத் தொடங்கி விடும். பெரியார் தொண்டர்கள் எல்லாம் பம்பரமாய் வேலை செய்வார்கள். ஆன்மீக நம்பிக்கையில் இருந்த காலத்தில் இருந்தே இதைப் பார்த்து வருகிறேன். அந்தக் காலத்தில் மானமிகுவாளர்கள் சுப்பிரமணியன், பாலச்சந்திரன், கோவிந்தசாமி, பரந்தாமன், ஞானசேகரன், கணபதி, முருகானந் தம், இராமையன், சீனிவாசன், அம்பேத்கர், செல்வமணி, திராவிடமணி, தங்கவேல், எஸ்.எஸ்.மணியம், முத்தம்மாள், அஞ்சம்மாள், காசி அம்மாள், வெள்ளை அம்மாள், பார்வதி, வீரம்மாள், கல்யாணி, சுப்புலட்சுமிபதி ஆகிய சிலரின் பெயர்கள் நினைவில் இருக்கிறது.
தற்சமயம் உங்கள் கிராமத்தில் பிரச்சாரங்கள் எப்படி உள்ளது?
எனக்கு செல்வகுமாரி, செந்தில்குமாரி என்கிற இரண்டு பெண் பிள்ளைகளும், செல்வேந்திரன், மகேந்திரன் என்கிற இரண்டு ஆண் பிள்ளைகளும் உண்டு. எங்கள் கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் திராவிடர் கழகத்தில் இருக்கிறோம்! எங்கள் ஊர் பிள்ளைகள் அனைவரும் நன்றாகப் படித்து, வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். எங்கு இருந்தாலும் கொள்கை உணர்வோடு இருக்கிறார்கள்.
கிராமத்தில் அவ்வப்போது தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவோம். அதிரடி.அன்பழகன், இராம.அன்பழகன், பெரியார் செல்வன், பூவை.புலிகேசி, மாங்காடு மணியரசன், சிங்காரவேலு உள்ளிட்ட பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள்.
தோழர்களில் யாராவது மறைந்தால், மகளிரே சடலத்தைத் தூக்கிச் செல்வோம். இடுகாடு வரை நாங்களே கொண்டு செல்வோம். இப்போது பாதி தூரம் நாங்களும், பிறகு ஆண்களுமாக மாறி தூக்கிச் செல்கிறோம்.
இதுபோன்ற எனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது இணையர் இராஜேந்திரன் அவர்கள் துணையாய் இருக்கிறார்கள் என்பது பெரிய விசயமல்ல; எனது மாமியார் வெள்ளையம்மாள் அவர்கள் பெரும் ஒத்துழைப்பும், உதவியும் செய்வார்கள். பெரியார் கொள்கையைப் பின்பற்றுவதால் நாமும் நிதானமான பயணிக்கிறோம், நல்ல அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். அதனால் குடும்ப உறவுகளும் ஆரோக்கியமாக இருக்கிறது!
மொத்தத்தில் சொல்வதென்றால் ஆத்திக வாழ்க்கையை விட, நாத்திக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்று மகேஸ்வரி அவர்கள் கூறினார்!