மகாராட்டிராவில் சுற்றுலாத்தலமான லோனாவாலா என்ற இடத்தில் பாறைக்கு நடுவே குடும்பத்தோடு அமர்ந்து செல்பி (சுயப்படம்) எடுத்துகொண்டு இருக்கும் போது திடீரென காட்டாற்று வெள்ளம் வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையுமே அடித்துச்சென்றுவிடுகிறது. அனைவருமே இறந்துவிடுகின்றனர்.
கல்யாண் பகுதியில் உள்ள ஒரு பகுதி முழுவதும் சோகமயமாக ஆனது. காரணம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே மரணமடைந்துவிட்டனர்.
“நம் வீடியோவுக்கு நிறைய லைக்ஸ் கிடைக்கிறது. பலரைச் சென்றடைகிறது, என்பது ஒரு வகையான போதை. மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே இதிலும் மூளை செயல்பாடுகள் தீவிரமாக இருக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது கவனத்தை ஈர்க்கப் பல ஆபத்தான புதிய வழிகளை உருவாக்குகிறது. இதில் பாதிக்கப்பட்ட வர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையை உருவாக்கவேண்டும்.
ரீல்ஸ் அல்லது இதர சாகச காட்சிப் பதிவுகளைப் பார்க்கும் போது நீங்களும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். சிலர் ஆர்வ மிகுதியில் ரயிலைக் கடக்கும் ஸ்டண்ட் போன்ற ஆபத்தான காட்சிப் பதிவுகளை பதிவிடுவார்கள். பொதுவாக 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் இந்த ஆபத்தான காட்சிப் பதிவுகளை பதிவிடுகின்றனர்,”
“இந்த இளம் வயதில் ஹார்மோன், மூளை, உடல் அனைத்தும் இந்த உற்சாகத்தைப் பெறவே சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் சாகச விளையாட்டு, மலையேறுதல் போன்ற செயல்பாடுகளால் இளைஞர்கள் உற்சாகத்தைப் பெற்றனர். ஆனால் இப்போதெல்லாம் அந்த உற்சாக உணர்வை முயற்சி இல்லாமல் இன்ஸ்டாகிராமில் பெறுகிறார்கள்.”
சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை அதிகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் முறையை கடைப்பிடிக்கின்றனர் ஆனால் அது தெரியாத பல இளம் தலைமுறைகள் இந்த செல்ஃபி மோகத்தில் வீழ்ந்து விடுகின்றனர்.
இன்றைய சூழலில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும்பாலானோர், காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் கைப்பேசியைத் தேடி எடுத்து, சமூக வலைதளங்களைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். குறுஞ் செய்திகளைப் பார்ப்பது, பிறந்தநாள் வாழ்த்து சொல்வது எனச் சமூக வலைதளங்களுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர்.
அதில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மன அழுத்தம் மற்றும் பல்வேறு மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவது குறித்த ஆய்வு, `தி லான்செட்’ இதழில் வெளியாகியுள்ளது.
“ஒருவர், மதுப்பழக்கத்துக்கு அறிமுகமாகிறார் என்றால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, அவர் குடிக்கும் அளவு அதிகரித்து, தீவிர மதுப் பழக்கத்துக்கு ஆளாகிவிடுவார். அதனால், அவர் ‘ஆப்செஷன்’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிப்பார். மது அருந்தினால் மட்டுமே அவர்களுக்கு திருப்தி கிடைக்கும். அதுபோலத்தான், சமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களும், ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேற முடியாமல், அதைப் பார்த்தால்தான் மனம் திருப்தியாக இருக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இப்போது, பெரும்பாலானோரின் கையில் திறன்மிகு அலைபேசி இருக்கிறது. அவர்களுக்கு, முகம் தெரியாத நண்பர்கள் பழக்கமாகிறார்கள். ஒருநாள் திடீரென்று அவர்களிடமிருந்து சமூக வலைதளத்தில் எந்தவிதமான தகவலும் வராதபோது, ‘ஆப்செஷன்’ நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் மனதில் வெறுப்பு தோன்றும்.
முகம் தெரியாத நண்பருக்கு மெசேஜ் அனுப்பி, அதற்கு அவரிடமிருந்து இரண்டு நாளாகியும் பதில் வரவில்லையென்றால், மூன்றாவது நாள் அவருக்கு கோபம் உண்டாகும். இது, விரக்தியடைந்த மனநிலை ஆகும். இந்தக் கோபம், அடுத்த இரண்டு நாள்களில் எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்க ஆரம்பிக்கும். இதனால், தன்னை ஏதாவது துன்புறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது, மனஅழுத்தம் ஏற்படும். ஒருகட்டத்தில், மனஅழுத்தம் தீவிரமடைந்து தற்கொலை எண்ணத்தைக்கூட தூண்டலாம்.”
சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள் கைப்பேசி பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் நிலை மாறி இன்று அவர்களுக்கே அறிவுரை தேவைப்படும் நிலை உருவாக்கி விட்டது.
பெரும்பாலும் விடுமுறைகளிலும் ஓய்வு நேரங்களிலும் கணவன் மனைவி பிள்ளைகள் என்று அனைவருமே அலைபேசி மோகத்தில் வீழ்ந்துவிடுகின்றனர். இந்த மோகம் தான் புனேவில் ஓட்டுமொத்த குடும்பத்தினரின் உயிர்களையும் காவு வாங்கிவிட்டது.