‘கங்கா ஸ்நானம்!’

2 Min Read

‘புடாரி’ மராட்டி நாளிதழில் மதம் – பக்தியின் பெயரால் எந்த எல்லைக்கும் சென்று புரட்டுகளை, மோசடிகளை செய்யலாம் என்பதற்கான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

மும்பைக்கு அருகில் கல்யாண் என்ற நகரத்தைச் சேர்ந்த உல்லாஸ் நகர் என்ற பகுதி போலிகளைத் தயாரித்து மக்களிடம் விற்றுப் பணத்தைச் சுரண்டுவதில் கில்லாடியானதாம்.

உலகில் வெளிவந்த எந்தப் ‘பிராண்டானாலும்’ சரி, அது வெளிவந்த அடுத்த நாளே உல்லாஸ் நகரில் போலியாகத் தயாரிக்கப்பட்டு விடும்.

அசலுக்கும், போலிக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்குத் தில்லுமுல்லு செய்வதில் அவர்களை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாதாம்!

தீபாவளி நாளன்று ‘கங்கா ஸ்நானம்’ ஆயிற்றா என்று புராணப் புத்திக்காரர்கள் கேட்பதுண்டு அல்லவா!

அதிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். ‘‘கங்காஜல்” என்ற பெயரில் குழாய் நீரைப் பாட்டில்களில் பிடித்து, கங்கை நீர் என்று நம்ப வைக்க சிறிது கலங்கலாகக் காட்டி விற்று விடுவார்கள். இந்தப் பகல் கொள்ளை கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இந்தப் பக்தி வியாபாரத்தின் முக்கிய பிரமுகர் அனுப்சோனி என்பவர்.

இவர் என்ன செய்வாராம்?

எந்தத் தண்ணீர் கிடைத்தாலும், உள்ளூர் பார்ப்பனரை அழைத்து வந்து மந்திரம் சொல்ல வைத்தால் கங்காதேவி அதில் குடியேறி விடுவாளாம்.

அப்படிப்பட்ட தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்ல; வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

(இப்பொழுது அஞ்சல் துறையே கங்கா நீரை விற்பனை செய்து வருகிறதே என்று கேட்டுவிடாதீர்கள்!)

அந்த ஆசாமி இப்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளாக மோசடி வியாபாரம் செய்து வந்தவர்மீது கடுமையான பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மிகச் சாதாரண (றிமீttஹ்) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு என்பதுதான் வேடிக்கையானது.

உண்மையான கங்கை நீரே அசுத்தக் கடல்! மும்பையைச் சேர்ந்த மருத்துவர் குழு ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அக்குழுவில் இடம்பெற்ற டாக்டர் ஜெகன்நாத் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

‘‘பீகார், உ.பி., மாநிலங்களில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையான மக்கள், பித்த நீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்” என்பதுதான் அந்தத் தகவல்.

கங்கையில் நச்சுக் கலவை கழிவு நீர் கலக்கிறது. கிழட்டுப் பசுக்கள் கங்கையில் தள்ளப்படுகின்றன. அரைகுறையாக எரிக்கப்பட்ட பிணங்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. (கேட்டால், புண்ணியமாம்).

‘‘பக்தி வந்தால் புத்தி போகும்” என்றாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – அதை நினைத்துப் பாரீர்!

 –  மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *