வல்லம், ஜூலை 5 விசையாய் வளர்ந்துவரும் நவீனத் தொழில் வளர்ச்சி மற்றும் புதுப்புதுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைக்கும், சேவைக்கும். ஏற்ற புதிய பல தொழில்நுட்பக் கல்விப் பாடங்களை வழங்கி, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை சமூக – சமத்துவ நிலைக்கு உயர்த்து வதில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து முனைப்போடு பங்காற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக UGC– AICTE நிதி நல்கை மற்றும் வழிகாட்டுதலோடு சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வரும் SWAYAM – NPTEL இணைய வழிக் கல்வி மய்யத்தின் வளாக மய்யமாக (Local Chapter) மார்ச் 2022இல் பெரியார் மணியம்மை நிறுவனம் தன்னை இணைத்துக் கொண்டது.
தொடர்ச்சியாக நடைபெற்ற நான்கு பருவங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்து சான்றிதழ் பெற்றுள்ளனர். 2024 ஜனவரி – ஏப்ரல் பருவத்தில் மட்டும் 178 மாணவர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
மாணவர்களோடு இணைந்து ஊக்கப்படுத்த 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் பங்கேற்றுப் பயின்று சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் 68 பேராசிரியர்கள் AICTE-Faculty Development Programme(FDP) சான்றிதழும், 18 பேராசிரியர்கள் NPTEL-Mentor சான்றிதழும் பெற்றுள்ளனர். சில பேராசிரியர்களும், மாணவர்களும் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்து TOPPER சான்றிதழும் பெற்றுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலாண்மையியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மகேந்திர மோகன் தொடர்ச்சியாக 3 முறை NPTEL-STAR சான்றிதழ் பெற்றுள்ளார் என்பதும் சிறப்புக்குரியது.
முத்தாய்ப்பாக, இந்திய அளவில் IIT-NPTEL வளாக மய்யங்களாக உள்ள 6850க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுள், தொடங்கிய முதல் மூன்று பருவங்களிலும் “Active local Chapter” எனச் சான்று பெற்று வந்த பெரியார் மணியம்மை நிறுவனம், இந்தப் பருவத்தில் முதல் 300 இடங்களுக்குள் தரநிலை பெற்றுள்ளது. இணைய வழிக் கல்வியை ஊக்குவிப்பதில் ஆர்வம் செலுத்துவதைப் பாராட்டி 22.06.2024 அன்று சென்னை அய்.அய்.டியில் நடைபெற்ற NPTEL தென்னிந்திய வளாக மய்யங்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பாராட்டு விழாவில் “Aspirant Local Chapter” எனப் பாராட்டுச் சான்றிதழும் பட்டயமும் பெற்றது.
வரும் காலங்களில் தமிழ் – ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பல பாடங்களை மின்னணு வடிவில் உருவாக்கி இணைய வழியில் வழங்கி உள்ளூர்ப்புற ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர்தரத் தொழில்நுட்பங்களை எளிமையாக வழங்கி உயர்த்திட பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.