காதல் மணம்

2 Min Read

பழங்காலக் காதல் மணம், இன்று மிருகப் பிராய மணம் என்றே சொல்ல வேண்டும். காதல் என்பது மிக மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்கமுடியாது! உண்மையைப் பேச வேண்டுமானால், யாரைப் பார்த்தால் யாருக்குக் காதல் இல்லாமல் இருக்கமுடியும்? சமுதாயக் கட்டுப்பாடுகள் பல இருப்பதால் காதல் கொண்டு, ஏமாற்றம் அடைவதுமாக வாழ்வு முடிகிறதே ஒழிய வேறில்லை. காதலை அவரவர்கள், உள்ளத்திற்கே விட்டுவிடுவோம்!

ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில், காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருக்கலாம் இப்போதைய அறிவுக்குத் திருமணம் வாழ் நாள் முழுவதும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான், பெரிதும், காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது.

ஆகையால், அறிவையும், நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆதலாலேயும் பழைய தமிழர் மணமுறைகளுக்கோ, ஆரியர் மணமுறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது ஏற்பட்ட மணமுறைகளுக்கே இங்கு வேலை உண்டு. அவை பழையவையானாலும், புதியவையானாலும், தமிழனுடையதானாலும், ஆரியனுடையதானாலும், அய்ரோப்பியனுடைதானாலும் இருந்து போகட்டும்!

– ‘குடிஅரசு’ – 10.01.1948
– – – – –
மண முறைக்கும் பழைமையைத் தேடித்திரிய வேண்டியதில்லை. இன்றுள்ள எந்த மனிதனுடைய அறிவும் அநேகமாய் பழைமைக்கு இளைத்ததாய் இருக்காது. இருந்தாலும் நிலைமை தானாக சரிப்படுத்தி விடும். கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டியவையே ஒழிய, ஒரு காலத்து முறைகள் எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு, அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். அதன்படி எந்த மனிதனும் தனது அனுபவத்தையே சொல்ல முடியாது என்று கூறுவேன்.

இதில் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறிவுக்கும் மேற்பட்ட காரியம் எதையும் கலக்கக்கூடாது. கலக்குவதானால், அதை எழுதி நெருப்பில் போட்டு, அது பொசுங்காமல் இருக்கிறதா என்று பார்த்து, அதன் பிறகே அறிவை அடக்க வேண்டும். இந்த நிலையில், ஏதோ சிலர், தாங்கள்தான் அறிவாளிகள், மற்றவர்கள் அறிவிலிகள் என்று நினைப்பதும் கற்றறிமூடர்கள் குணங்களேயாகும்.

– ‘குடிஅரசு’ – 10.01.1948

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *