பெண் இருவர் பேசிடில் உலகிற்கு எவ்வளவு மகத்தான ஆபத்து விளையும் என்பதைப் பற்றிப் பழம்பாட்டுகள் பல உண்டு. பெண்களை அடிமையாக்காத மதமே கிடையாது. ஏனெனில், மதம் ஆண் இனத்தால் உண்டாக்கப்பட்டது.
‘அகில இந்திய மாதர் மாநாடு’ என்ற பெயரால் கடந்த இரண்டு நாட்களாக ஒரு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் பெண் இருவர் பேசவில்லை! பலர் பேசியிருக்கின்றனர்.
இம்மாநாடு ‘ஜமீன்தாரர்கள் மாநாடு’ “சிற்றரசர் மாநாடு”, “மில் முதலாளிகள் மாநாடு” என்பவை போன்ற ஒரு பூர்ஷவாப் பெண்கள் மாநாடு என்பது உண்மையேயாயினும், இந்நாட்டுப் பெண்கள் கோவில்களிலும் திருவிழாக்களிலும் மட்டுமே கூடுவது என்ற முறைமைக்கு மாறாக, இம்மாதிரி, ஒரு நல்ல இடத்தில் கூடித் தங்கள் விஷயங்களைப் பற்றிப் பேசுவது என்ற வகையில் இந்த நிகழ்ச்சி வரவேற்கக் கூடியதாகும். இம்மாநாட்டில் பல்வேறு மாதர்கள் கலந்திருந்த போதிலும், பெரும்பான்மையிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே முக்கியப் பங்கெடுத்துக் கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. மாதர்களை இழிவு செய்துள்ள மதங்களில் இந்து மதம் முதலிடம் வகிக்கிறது என்பது நடைமுறையில் கண்டுவரும் உண்மையாகும். மதத்திற்குச் செல்வாக்கில்லாமல் செய்யப்பட்டுள்ள இரஷ்யா ஒன்றைத்தவிர, மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாகத் தானிருக்கிறார்கள்.
மேல்நாட்டுப் பெண்களுக்கு அந்நாட்டு ஆண்கள் தனி மரியாதை செய்வதையும், அப்பெண்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதையும், அப்பெண்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதையும் பார்த்து, இதைவிட என்ன உரிமை வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள். இதுபோலவே, இந்நாட்டு ஆண்களும் இங்குள்ள பெண்களுக்கு வேண்டிய விதவிதமான ஆடைகளையும், அணிகளையும் தாராளமாக வாங்கித் தருவதன் மூலமே பெண்களுக்குச் சகல உரிமைகளையும் தந்துவிட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். ஆண்களைக் காட்டிலும் ஆடம்பரமாகவோ, நவீன முறையிலோ அலங்கரித்துக் கொள்வதன் மூலமே, தங்கள் சகல உரிமைகளையும் பெற்றுவிட்டதாகப் பல பெண்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர்.
உரிமை பேசும்போது, தங்கள் வீட்டுப் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கவனித்தாலே போதும், ஒரு தாரமிருக்க மறுதாரங்களை ஏற்றுக் கொள்பவர்களும், வீட்டிலே இளம் விதவைகளைப் பூட்டி வைத்திருப்பவர்களும், சிறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் கிழவர்களும், மனைவியைப் பத்திரப்படுத்தி விட்டுத் தான்மட்டும் ஊர் சுற்றி வரும் ஆண்களும், கல்வியிலும் சொத்திலும் தம் பெண்களுக்குச் சம உரிமை வழங்காத தந்தைமார்களும், வேறு ஜாதியில் மணஞ் செய்து கொண்டால், வேங்கைபோலப் பாயும் வீணர்களும், பெண் உரிமையைப் பற்றிக் கரடியாகக் கத்துவார்கள்! பேனாமுனையொடியக் கிறுக்குவார்கள்! இவர்களைவிடப் பித்தலாட்டக்காரர்கள், போலிச் சீர்திருத்தவாதிகள் வேறு யாராவது இருக்க முடியுமா?
பெண்களுக்கு ஆண்களைப்போலவே சம உரிமை இருக்க வேண்டுமென்றால், இன்றுள்ள வாழ்க்கை முறையே அடியோடு மாற வேண்டும். சமைப்பது, பிள்ளை வளர்ப்பது, குடும்பத்தை நடத்துவது ஆகிய மூன்று பொறுப்புகளும் பெண்களைச் சார்ந்தவைகளே என்ற மனப்பான்மையே ஒழிய வேண்டும். இரஷ்யாவில் இதில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டுச் சமையல் முறை, பிள்ளை வளர்ப்பு நிலையம் போன்ற சில சாதனங்களால் பெண்கள் எல்லாத் துறைகளிலுமே முழுநேர ஊழியர்களாக இருந்து வருகின்றனர். நாட்டு உற்பத்தியில் அவர்களுக்கும் விகிதாசாரமான பங்கு இருக்கிறது. எந்த நாட்டிலும் இம்முறை கிடையாது. அதுவும் இந்நாட்டிலோ முழுமோசம்.
திராவிட இனத்திலுள்ள பாமரர்களிடையே இம்முறை ஓரளவு இருந்து வருவதைக் காணலாம். ஆண் – பெண் இருவரும் சமையல் செய்கின்றனர். குழந்தையை மரத்தடியில் தங்க வைத்துவிட்டு இருவரும் கழனியில் இறங்கி வேலை செய்கின்றனர். இருவர் உழைப்பும் நாட்டுக்குப் பயன்படுகிறது.
பெண் சமுதாயம் இன்னின்ன தொழில்களைத்தான் செய்ய முடியுமென்ற பத்தாம் பசலி மனப்பான்மையே முதலில் அழிந்துவிட வேண்டும். அவர்களுக்கும் எல்லா வசதிகளும் இருக்குமேயானால், இடையூறுகள் களையப்படுமானால் ஆண்களைப் போலவே சகல துறைகளிலும் ஈடுபடலாம் என்பதை உணர வேண்டும்.
அகில இந்திய மாதர் மாநாடு படித்த, பணக்கார மாதர்களின் கூட்டம் என்பதை நன்கறிவோம். “அகில இந்திய” என்ற பெயரால் கூட்டப்படும் எல்லாக் கூட்டங்களைப் போலவே, இதிலும் காந்தியார் அர்ச்சனை, அய்க்கிய இந்தியப் பல்லவி, இந்தி தேசிய மொழி என்று கிளிப்பிள்ளைப் பேச்சு ஆகிய மூடச்சடங்குகள் நடைபெற்றிருக்கின்றன. திராவிட இனத்துப் பெண்களின் 100 – க்கு 99 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பதைப்பற்றி இந்த “அகில இந்திய மாதர்”களுக்கு என்னதான் கவலை இருக்க முடியும்? திராவிட இனத்துப் பெண்கள் பரம்பரை பரம்பரையாக நாற்று நடவும், வீட்டு வேலை செய்யவும், நெல் குத்தவும், கல் உடைக்கவும், அங்காடி விற்கவும், ஆரிய இனத்துப் பெண்கள் மட்டுமே இவைகளின் பலன்களை நுகர்ந்து கொண்டு, வைரங்கள், பட்டுப்புடவை அணிந்து உல்லாச வாழ்வு வாழவுமான நிலைமையை எந்த “அகில இந்திய மாதரும்” அசைக்க முடியாதே!
‘இந்த இழிநிலையில், தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டுமானால், திராவிடம் தனியாட்சி ஆனாலொழிய முடியாது,! வேறு எந்த ‘மந்திரத்தாலும் முடியாது.’