பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்!
உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல – உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக மட்டுமல்ல!
சமூகத்தின் கோணலை நிமிர்த்துவதற்காக – தன்னம்பிக்கையை, பகுத்தறிவை உருவாக்குவதற்காக எழுதுங்கள்!

சென்னை, ஜூலை 4 பகுத்தறிவாளர் என்று யாரை நாம் சொல்கிறோம் என்று சொன்னால், தன்னுடைய பகுத்தறிவை, ஆறாவது அறிவை- ஓர் இடத்தில் நிறுத்தி – ‘இந்த இடத்தில் எல்லாம் பகுத்தறிவு போகக்கூடாது; இந்தந்த இடத்தில் மட்டும்தான் பகுத்தறிவு வரலாம்‘ என்று ஓர் எல்லைக் கோடு கட்டுகிறார்கள் அல்லவா – அந்த எல்லைக் கோடு கட்டாது – யாருக்கெல்லாம் துணிவும், தெளிவும் இருக்கிறதோ, அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். பகுத்தறிவை ஆளக் கூடியவர்கள். உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல – உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக மட்டுமல்ல; சமூகத்தின் கோணலை நிமிர்த்துவதற்காக. சமூகத்தில் எங்கெங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் இருக்கின்றனவோ – அதையெல்லாம் மாற்றி, தன்னம்பிக்கையை, பகுத்தறிவை உருவாக்குவதற்காக எழுதுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வளரும் எழுத்தாளர்களுக்கான
ஒருநாள் பயிற்சிப் பட்டறை!
கடந்த 29.6.2024 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘‘வாருங்கள் படிப்போம்” குழு இணைந்து காலை முதல் மாலைவரை நடத்திய வளரும் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘‘வாருங்கள் படிப்போம்” குழு இணைந்து நடத்தும் வளரும் எழுத்தா ளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருக்கின்ற இளம் தோழர்களைப் பார்க்கின்ற பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் எல்லோரும் பெறுகின்றோம்.

மலர்ந்த பூக்கள் கனிகளாக வரவேண்டிய அளவிற்கு, வளரவேண்டும்!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இப்படிப்பட்ட முத்துக்களை, பூக்களாக, மலர்களாக – மலர்ந்த பூக்கள் கனி களாக வரவேண்டிய அளவிற்கு, வளரவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்விற்குத் தலைமை யேற்று இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே,
இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக் கூடிய எழுத்தாளர், பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் அருமைத் தோழர் முனைவர் ஒளிவண்ணன் அவர்களே,

ஓராண்டிற்குள் 100 கூட்டங்களுக்குமேல்
சிறப்பாக நடத்திய அருமைச் செயல்வீரர்!
இந்நிகழ்வில் தொடக்கவுரையாற்றி, சிறப்பான வகையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தை நல்ல வண்ணம் நடத்திக்கொண்டு, ஏராளமான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதிய புதிய நூல்களையெல்லாம் அறிமுகப்படுத்தக் கூடிய அளவிற்கு, காணொலி காட்சியின் மூலமாக ஓராண்டிற்குள் 100 கூட்டங்களுக்குமேல் சிறப்பாக நடத்திய அருமைச் செயல்வீரர் சிந்தனையாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களே,
அதேபோல, ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய பேராசிரியை உமாமகேசுவரி அவர்களே,
இந்நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பாக உரையாற்றிய கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களே,
எனக்குமுன் சிறப்பாக உரையாற்றிய தோழர் கரன் கார்க்கி அவர்களையும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தோழர்களையும், ஒளிவண்ணன் உள்பட, வாழ்த்துரை வழங்கக்கூடிய பிரின்ஸ் என்னாரெசு பெரியார், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அர்ஷா, கவிஞர் கவிதா ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர்கள் மத்தியில், பேச்சாளனுக்கு வேலையில்லை. எழுத்தாளர்கள், பேச்சாளர்களாக மாறுகின்ற நேரத்தில்தான், சில சில கருத்துகளைக் கேட்கிறீர்கள்; கேள்விகளையும் கேட்கிறீர்கள் என்பது மிக முக்கியமானதுதான்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தினுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
எத்தனையோ எழுத்தாளர் மன்றங்கள் இருக்கின்றன. இங்கேகூட கார்க்கி அவர்கள் சொன்னார்கள். ஏராளமான அளவிற்கு எழுதுகிறார்கள். திருக்குறளுக்குக்கூட தெளிவுரை, பதவுரை எழுதுகிறார்கள்.
ஏனென்றால், சரசுவதி நாக்கில் எழுதவேண்டும் என்று முன்னாளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்பொழுது, சரசுவதிகளே நாக்கில் எழுதவில்லை; புத்த கங்களை எழுதுகிறார்கள்.

இன்றைய சரசுவதிகள் அனுபவத்தை
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
படிக்காத சரசுவதிகள் இருந்தார்கள்; இன்றைக்குப் படித்த சரசுவதிகள், இப்பொழுது நேரில் படித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்; அனுபவத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தாம் சங்கடப்பட்டவைகளையெல்லாம் எழுத்துகளாக மாற்றி, தங்கள் உணர்ச்சிகளை வெளியே, நியாயம் கேட்பவர்களாக வந்திருக்கிறார்கள்.
ஆகவே, அதுவே ஒரு பெரிய மாற்றம்தான், அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.
ஒன்றே ஒன்று, எழுத்தாளர்கள் என்றால், யார்?

எழுதுகின்றவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?
நிறைய எழுதுகின்றவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
அப்படிப் பார்த்தால், பத்திரம் எழுதுகிறவர்கள்தான் அதிகமாக எழுதுகிறவர்கள். வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருப்பவர். அவருடைய தொழிலே எழுதுகின்ற தொழில்தான்.
அவரை எழுத்தாளர் என்று சொல்ல முடியுமா?
அடுத்ததாக, குமாஸ்தா என்று பழைய காலத்தில் சொல்வார்கள். இன்றைக்கு நல்ல தமிழில் ‘‘எழுத்தர்” என்பது தான் அது.
ஆகவே, அவரும் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டி ருக்கின்றார்.
ஆனால், என்ன வேறுபாடு? என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தாழ்வு மனப்பான்மைக்கு
இடமில்லாததுதான் முதல் தகுதி!
எழுத்து ஆளர். எழுத்தை ஆளவேண்டும். அந்த ஆளுமை இருக்கவேண்டும். அந்த ஆளுமை இன்னாருக்குத்தான் இருக்கிறது; இன்ன ஜாதியினருக்குத்தான் இருக்கிறது. இவ்வளவுக்கு மேம்பட்டவருக்குத்தான் இருக்கிறது. என்னால் முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மைக்கு இட மில்லாததுதான் முதல் தகுதி எழுத்தாளர் ஆவதற்கு.
என்னால் முடியும்; சிந்தனை – ஆறறறிவு படைத்த மனித னுக்குச் சிந்தனைதான் மிக முக்கியமானதாகும்.
ஒலி பெருக்கியை நாம் பயன்படுத்துகின்றோம். அதேபோன்று, செல்பேசி இல்லாதவர்கள் இன்றைக்கு இருக்கிறார்களா? பிச்சைக்காரர்கள்கூட, செல்பேசியில் தொடர்புகொண்டு அப்பாயிமெண்ட் வாங்கிக்கொண்டு வருகின்ற நிலை இருக்கிறது.
அதேபோன்று, காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள் எல்லாம் செல்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘இத்தனை மணிக்கு வந்துவிடுவேன்” என்று சொல்லுகின்ற நிலைதான்.
இவ்வளவு அறிவியல் வளர்ந்திருக்கிறதே – இவ்வள வையும் கண்டுபிடித்தவர்கள் யார்?
அன்றாட வாழ்க்கையில் நவீன பொருள்களையெல்லாம் பயன்படுத்துகின்றோம்.
இங்கே இருக்கின்ற ஒலிபெருக்கி, கடிகாரம், செல்பேசி போன்ற பொருள்கள்.
செல்பேசி பயன்பாட்டிற்கு வந்தவுடன், பல பொருள்களை உள்ளடக்கி இருக்கிறது. போட்டோ எடுக்க வேண்டுமா? நாள்காட்டி பார்க்கவேண்டுமா? ஒலிப்பதிவு செய்யவேண்டுமா? இப்படி ஏராளமான வாய்ப்புகள் அதில் உள்ளன.

வெளிநாட்டுக்காரனுக்கு ஏழு அறிவு?
நமக்கு அய்ந்து அறிவா?
ஒன்றே ஒன்றில் உலகத்தையே சுருக்கி வைத்து, 10, 15 பேருக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டனர்.
அறிவியல் வளர்ந்திருப்பதை அனுபவிக்கின்ற நாம், பயன்படுத்துகின்ற நாம், அவற்றை ஏன் நாம் கண்டு பிடிக்கவில்லை? ஏன் இன்னொரு நாட்டுக்காரன் கண்டு பிடிக்கிறான்? அவனுக்கென்ன ஏழு அறிவா? நமக்கு அய்ந்து அறிவா?
நாம் எதைக் கண்டுபிடித்திருக்கின்றோம் என்பதை நன்றாக எண்ணிப் பாருங்கள்.
மிகவும் கஷ்டப்பட்டு, ஒரே ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். இவ்வளவு கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தவர்கள் நாம் அல்ல என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றோம்.
அதுவே ஒரு நல்ல கண்டுபிடிப்புதான். ஏனென்றால், அப்பொழுதுதான் எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்கிற எண்ணம் வரும்.

உண்மையான எழுத்தாளர்கள் என்றால்,
எழுத்தை ஆள்பவர்கள்!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எழுத்தை ஆளக்கூடி யவர்களாக நீங்கள் மாறவேண்டும்; உண்மையான எழுத்தா ளர்கள் என்றால், எழுத்தை ஆள்பவர்கள் என்று பொருள்.
ஆள்வது என்றால், ஆளுமை. அது இவருக்குத்தான் வரும்; அவருக்குத்தான் வரும் என்பது கிடையாது. முயற்சி செய்தால், நிச்சயமாக உங்களால் முடியும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தன்மானம் – தன்னம்பிக்கை – தன்னிறைவு – தன்னால் செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வுகள் மிகவும் தேவை!
அடுத்தபடியாக, இதோ ஏதோ சாதாரணமான பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அல்ல.
மூன்று வாக்கியங்களை நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டும்!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்றால், இதற்கு வேறு விதமாக வியாக்கியானம் செய்துகொள்ளக் கூடாது. எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நாம் வலியுறுத்துகின்றோம்.
பகுத்தறிவை ஆளுவது என்றால் என்ன? என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
இரண்டு, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை வானொலி நிலையத்திற்கு அழைத்து, என்னிடம் கேள்வி கேட்கச் சொன்னார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை வானொலியில் முன்பெல்லாம் நடத்துவார்கள். இன்றைக்கு அதை எதிர்பார்க்க முடியாது.

வானொலி நிலைய நிகழ்வில்,
மாணவர் ஒருவரின் கேள்வி!
அறிவியலுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது இன்றைக்கு.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாணவர் ஒருவர், ஒரு கேள்வியை கேட்டார்.
‘‘சார், எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா! மனிதன் என்றாலே, ஆறு அறிவு உள்ளவன் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், எல்லோரும் பகுத்தறிவாளர்கள்தானே? பிறகு, உங்களை மட்டும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்; எங்களுக்கெல்லாம் பகுத்தறிவு இல்லையா? உங்களுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறதா?” என்று கேட்டார்.
நான் அந்த மாணவர்மீது கோபப்படவில்லை.
‘‘நீங்கள் கேட்ட கேள்வியை நான் வரவேற்கிறேன். பகுத்தறிவு என்பது எல்லோருக்கும் இருக்கிறது. அதி லொன்றும் சந்தேகமே இல்லை.

பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள் பகுத்தறிவாளர்கள்!
ஆனால், பகுத்தறிவாளர் என்று யாரை நாம் சொல்கிறோம் என்று சொன்னால், தன்னுடைய பகுத்தறிவை, ஆறாவது அறிவை- ஓர் இடத்தில் நிறுத்தி – ‘இந்த இடத்தில் எல்லாம் பகுத்தறிவு போகக்கூடாது; இந்தந்த இடத்தில் மட்டும்தான் பகுத்தறிவு வரலாம்’ என்று ஓர் எல்லைக் கோடு கட்டுகிறார்கள் அல்லவா – அந்த எல்லைக் கோடு கட்டாது – யாருக்கெல்லாம் துணிவும், தெளிவும் இருக்கிறதோ, அவர்கள்தான் பகுத்தறிவார்கள். பகுத்தறிவை ஆளக் கூடியவர்கள்” என்று சொல்லிவிட்டு, இந்தக் கேள்விக்கு தியரி போன்று மாணவர்களிடையே பதில் சொல்லியிருக்கிறேன். இதை சாதாரணமாகச் சொன்னால், உங்களுக்குப் புரியாது. ஓர் உதாரணம் சொல்கிறேன்.

அங்கே இருந்ததும் சாணிதான்; இங்கே இருப்பதும் சாணிதான், ஆனால், இது ‘சாமி’யாம்!
ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். அப்படி நடந்து போகிறவர், வீட்டிற்குச் சென்றவுடன், கை, கால்களை கழுவி, சுத்தமாக இருக்கவேண்டும்; தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள், அது இயல்புதான்.
எதிர்பாராமல் சாலையின் நடுவே மாடு சாணி போட்டிருப்பதைப் பார்க்காமல், மிதித்துவிடுகிறோம், காலில் செருப்பு அணியாத கால்களால். உடனே ஒரு காலால் நொண்டியடித்துக்கொண்டு சென்று, பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்து, காலை கழுவியவுடன்தான் அவருக்கு நிம்மதியாக இருக்கும்.
அப்படியென்றால், அவருக்குத் தெரிகிறது, சாணியில் கால் வைக்கக்கூடாது என்று.
பிறகு அவர் கொஞ்சம் நடந்து செல்கிறார். அங்கே ஓரிடத்தில், அதே சாணியைப் பிடித்து வைத்து, அதற்குமேல் அருகம்புல்லை வைத்து, அதனருகில் அகல் விளக்கு ஒன்றைக் கொளுத்தி வைத்திருக்கிறது. அதைப் பார்த்த இவன், கும்பிடு போடுகிறான்.
சாணியை மிதித்தவுடன், காலைக் கழுவியனும் இவன்தான்; அங்கே இருந்ததும் சாணிதான்; இங்கே இருப்ப தும் சாணிதான், ஆனால், இது ‘சாமி’யாம்!”
அகில இந்திய வானொலியில் நான் சொன்ன பதில் இது.
இரண்டும் சாணிதான் என்று சொல்கின்ற துணிச்சலும், பார்வையும் எவருக்கு இருக்கிறதோ, அவர்தான் பகுத்தறிவு வாதி.
‘‘இல்லீங்க, முதலில் மிதித்தது சாணி; இரண்டாவது இருப்பது சாமி” என்று சொல்கிறார்கள் என்றால், அவர்க ளுக்குத் தெளிவு இல்லை என்றுதான் அர்த்தம்.
ஆகவேதான், பகுத்தறிவாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்மூலமாக பகுத்தறிவைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்.

அறிவியல் கருவிகள்மூலமாக மூடநம்பிக்கைகளை நாம் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்!
ஏனென்றால், இன்றைக்கு எங்கே பார்த்தாலும் மூடநம்பிக்கை. அறிவியல் கருவிகள் வந்துவிட்டன. ஆனால், அந்த அறிவியல் கருவிகள்மூலமாக மூடநம்பிக்கைகளை நாம் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு எழுத்தாளர்
எப்படி இருக்கவேண்டும்?
ஆகவேதான், பகுத்தறிவாளர் கழகத்தில், நீங்கள் சமூகத்தில் இருக்கின்ற கோணல்களைச் சுட்டிக்காட்டுங்கள்.
ஒரு எழுத்தாளர் எப்படி இருக்கவேண்டும் என்றால், ஸ்கேன் ரிப்போர்ட் போன்று சமூகத்தைப் படம் பிடிக்க வேண்டும்.
சமூகத்தில் அவலங்கள் இருக்கின்றன. அதிலும் மகளிர் படுகின்ற பாடு இருக்கிறதே, அது மிகக் கொடுமையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் பிறந்திருக்காவிட்டால், இங்கே இருபால் இளைஞர்களும் கலந்து அமர்ந்திருக்கின்றீர்களே, இதுபோன்று அமர முடியுமா?
இங்கே வந்திருக்கின்ற எழுத்தாளர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.
இங்கே இருக்கின்ற உங்கள் குடும்பத்தில், பட்டதாரி பாட்டி இருக்கின்றவர்கள் கைதூக்குங்கள் பார்க்கலாம்.
இவ்வளவு பேரில், 2 பேர்தான் கையைத் தூக்கி யிருக்கிறீர்கள்.
சரி, உங்களுடைய அம்மாக்களில் எத்தனை பேர் பட்டதாரிகள்?
17 பேர்.
சரி, உங்களில் எத்தனை பேர் பட்டதாரிகள்?
அனைவரும் கையைத் தூக்கியிருக்கிறீர்கள்.
இதுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செய்த காரியம்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால், இவ்வளவு தைரியம் வந்திருக்காது. நான்கூட முதல் தலைமுறைப் பட்டதாரி.
எனவே, பட்டம் படித்தால் மட்டும் போதாது; பட்டம் படிக்கக் கூடிய தைரியத்தைப் பகுத்தறிவு கொடுத்தது.
ஆனால், பட்டம் பெற்ற பிறகு, அந்தப் பகுத்தறிவு பயன்படவில்லை.

உங்களுடைய பேனா,
கலங்கரை வெளிச்சமாகட்டும்!
உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது. சமூகத்தி னுடைய கோணல்கள் நிமிர்த்தப்பட்டு, எங்கெங்கெல்லாம் வெளிச்சம் பாயாமல் இருட்டு இருக்கிறதோ – அங்கெல்லாம் – அந்த இருட்டையெல்லாம் நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். அதற்காக உங்களுடைய பேனா, கலங்கரை வெளிச்சமாகட்டும்.
திருச்சியில், எழுத்தாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அந்த மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தார்கள்.
தந்தை பெரியார் அந்த மாநாட்டில் உரையாற்றும்பொழுது – தமது உரையைத் தொடங்கும்பொழுது, எல்லோரும் அதிர்ச்சியடையும்படி பேசினார்.

‘‘நான் கருத்தாளன்’’ என்றார் தந்தை பெரியார்!
தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, எல்லாக் கருத்துள்ளவர்களும் வந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் எல்லாம் கூடியி ருக்கிறார்கள்.
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், ‘‘என்னை இந்த மாநாட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள்; நான் எழுத்தாளனும் அல்ல; பேச்சாளனும் அல்ல” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்திவிட்டு, ‘‘நான் கருத்தாளன்” என்று சொன்னார்.
ஆகவேதான், கருத்தை முன்னால் வையுங்கள்; துணிச்ச லோடு எழுதுங்கள்; தெளிவாக எழுதுங்கள். வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு எழுதுங்கள்.

உங்கள் எழுத்துகள் சமூகத்தின் கோணலை நிமிர்த்துவதற்காக!
உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல – உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக மட்டுமல்ல; சமூகத்தின் கோணலை நிமிர்த்துவதற்காக. சமூகத்தில் எங்கெங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் இருக்கின்றனவோ – அதையெல்லாம் மாற்றி, தன்னம்பிக்கையை, பகுத்தறிவை உருவாக்குவதற்காக எழுதுங்கள்!
வாழ்த்துகள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *