தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இப்போது, அவசர அவசரமாக ஒன்றிய அரசினுடைய பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்துவிட்டு, பாரதம் என்கிற பெயரை நிரப்பிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே இந்த வேலைகள் தொடங்கி விட்டனவா என்ற கேள்வி எழுகிறது.
நாடு எந்தப் பெயரில் இருந்தால் என்ன?
“பாரதம் என்றாலும் இந்தியா என்றாலும் ஒன்றுதான்” என்று வழக்கம்போல் சமரசவாதிகள் குரல் எழுப்புகிறார்கள். இந்திய அறிவியலும் பாரத அறிவியலும் ஒன்றா? அறிவியலை இந்திய மயமாக்குதல் என்பதும் பாரதமயமாக்குதல் என்பதும் உலக அளவிலான அறிவியல் மயமாக்குதல் என்பதற்கு இணையாகுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
எடிங்டன் என்னும் முன்னுதாரணம்
உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘அனைத்தையும் குறித்த அறிவியல் கோட்பாடு’ என்கிற நிகழ்வோடு இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அனைத்தையும் குறித்த அறிவியல் கோட்பாடு என்பது ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன், மேக்ஸ் பிளாக், பிறரோடு இணைந்து இயற்பியலின் பூரிப்பு என்று அழைக்கப்படுகின்ற ஒரு காலத்தை நிர்மாணித்து ஒரு நூற்றாண்டு ஆகிறது.
உதாரணமாக, ஆர்தர் எடிங்டன். நாம் அதிகம் கேள்விப்படாத – ஆனால், அதேநேரம் மிக முக்கியமான அறிவியலாளர். இந்த வானியலாளர் அய்ன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையை 1919 இல் ஒரு சூரிய கிரகணத்தின்போது நிரூபித்துக் காட்டியவர். அய்ன்ஸ்டைன் பிரபல விஞ்ஞானியாக ஆவதற்கு எடிங்டன் ஒரு முக்கியக் காரணம். எண் கணிதக் கோட்பாட்டில் (நியூமராலஜி) தீவிர நாட்டம் காரணமாக, தெளிவற்றுப்போன நிலையில் இன்றைக்கு அவர் ஒதுக்கப்பட்டுவிட்டார்.
அவர் எண்களின் மகிமை பற்றி விசித்திரமான ஆர்வம் கொண்டிருந்தார். மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்பது குறித்த நம்ப முடியாத சில விஷயங்களை அவர் வெளியிட்டுக்கொண்டிருந்தார். ஒரு எண் – நிகழ்வுகளுக்கு இடையே உள்ள மாய (தெரியாத) உறவில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். சில எண்களின் சக்தியில் அவருடைய விசித்திர ஆர்வம் மற்ற விஞ்ஞானிகளால் கேலிசெய்யப்பட்டது.
மேலும், பல குறிப்பிடத்தக்க வானியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியபடி, வெளியிடப்பட்ட காலத்திலிருந்து எந்த மதிப்பையும் அவை உருவாக்கவில்லை. எடிங்டன் விரைவில் மறக்கப் பட்டார். இந்த நிலைதான் இன்றைய வேதகால இயற்பியல் பாடப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும் நம்முடைய தேசியக் கல்விக் கொள்கைப் புலிகளான பேராசிரியர்களுக்கும் நடக்கும்.
இடம் பெயர்ந்த அறிவியலின் மய்யம்
அறிவியலாளர்கள் தங்கள் நோக்கத்தில் தவறி நம்பிக்கைவாத அறிவியலுக்குள் நுழையும்போது என்ன ஆவார்கள் என்பதற்குச் சக்திவாய்ந்த எச்சரிக்கையாக ஆர்தர் எடிங்டனின் வாழ்க்கையைச் சொல்லலாம். ஆர்தர் எடிங்டன் போன்றோரின் தவறான செயல்பாடுகள், இங்கிலாந்தில் பல சந்ததியினரை இயற்பியல் துறையைவிட்டே விரட்டின. இது போன்ற செயல்கள் அறிவியல் ஆய்வின் மய்யத்தையே இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் மாற்றின என்பதும் வரலாறு.
இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் ஒன்றிய அரசு எண்ணி எண்ணி ஆய்வுகளுக்குச் செலவு செய்கின்ற ஒரு காலக்கட்டத்தில், கடந்த பத்தாண்டுகளில் நம்முடைய பல ஆய்வுகள் நிறுத்தப்பட்டுவிட்ட சூழலில், நம்முடைய இளைஞர்கள் இன்று கல்லூரியில் இயற்பியல் கற்பது என்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஏற்கெனவே, பல கல்லூரிகளில் கணிதத் துறையே மூடப்படும் அவலம்.
இந்தியாவிலிருந்து ஒரு காலக்கட்டத்தில் உருவாகிப் பெரிய எழுச்சி பெற்ற இயற்பியல் ஆழிப் பேரலை இன்றைக்கு வீசுவதாகத் தெரியவில்லை. ராக்கெட் விடுவதைத் தவிர, வேறு எதையுமே அறிவியல் சாதனையாகக் கருதாத மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
கோட்பாடு ரீதியிலான ஆய்வுகளுக்கு நிதி ஆதாரமின்றி டாடா அறிவியல் தொழில்நுட்ப மய்யம் உள்படப் பல அறிவியல் ஆய்வகங்கள் இன்று தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன என்பது மிகத் துயரமான உண்மை. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு ஆய்வு மய்யங்களில் இந்தியாவினுடைய ஒத்துழைப்பு நிதி ஒதுக்கீடு மேலும் மேலும் குறைந்துவந்து, தற்போது மோசமான நிலையை எட்டிவிட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய உலக அறிவியலின் சவால்கள்:
இன்று இரண்டு முக்கியச் சவால்களை நவீன இயற்பியல் தன்னகத்தே கொண்டுள்ளது. முதலாவது, இயற்பியல் முன்வைத்திருக்கக்கூடிய உலக அளவிலான நான்கு விசைகளையும் (ஈர்ப்பு விசை, மெல்லிய அணுவிசை, தீவிர அணுவிசை, மின்னணு விசை) ஒன்றிணைக்கிற ஒற்றைச் சமன்பாடு தேவை.
வழக்கமாக நாம் சொல்லக்கூடிய அய்ன்ஸ்டைன் சார்பியல் கோட்பாட்டை குவாண்டம் உலகோடு இணைக்கின்ற ஓர் இணைவுக் கோட்பாடு அது. ஸ்டீவன் ஹாக்கிங் சொல்வதைப் போல சரக் கோட்பாடாகவும் (String theory) இருக்கலாம். ஆனால், அதை இந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளுக்குள் நிறுவ வேண்டிய கட்டாயம் இயற்பியலாளர்களுக்கு உள்ளது.
இயற்பியல் மட்டுமல்ல, வேதியியலில் இன்று ஞெகிழிக்கு மாற்றாகப் புதிய உலகை அடை வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதே போல உயிரியல் துறையைத் தட்பவெப்ப மாறுதல் துறையோடு இணைக்கப் பலவகை முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆனால், இந்தியாவிலிருந்து ஜெயந்த் நாரலீகர், யூ.ஆர். ராவ் போன்ற அறிஞர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று உழைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தம். இந்தப் பின்னணி எதுவும் தெரியாமல், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பதை இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் இயல்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இழந்துவிடக் கூடாத சகாப்தம்
என்சிஇஆர்டி புத்தகங்களை வேதகால இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களாக மாற்றி டார்வினியத்துக்குப் பதிலாக தசாவதாரத்தையும், இயந்திரப் பொறியியலுக்குப் பதிலாகப் புராதன காலத்துக் கற்பனை வானூர்திகளையும், வேதி அட்டவணையை எடுத்துவிட்டு வேதகால அக்னி குண்டப் பொருள்களையும் திணித்து, சம்ஸ்கிருத மயமாக்குதல் கல்வியா என்பதுதான் கேள்வி. இப்படி உருவாகிக்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலை நினைக்கும்போது, அவற்றைக் கற்கக்கூடிய புதிய தலைமுறை எந்த அளவுக்கு உலக அறிவியலின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ளும் என்பது சார்ந்து மிகப்பெரிய அச்சம் ஏற்படுகிறது.
நம்முடைய மாணவர்களை ஒருகாலத்தில் அறிவியலை நோக்கி ஈர்த்துவந்த ஹோமி பாபா, சர் சி.வி.ராமன், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாட் சாகா, விக்ரம் சாராபாய் உள்ளிட்டோர் வாழ்ந்த ஒரு சகாப்தம் நம்மைவிட்டுச் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது!
நன்றி: ‘இந்து தமிழ் திசை’ (02–07–2024)