இதுதான் திராவிட மாடல் அரசுஇந்தியாவிலேயே மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூலை 4- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று முன்தினம் (2.7.2024) சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் TN-RISE தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்து, TN-RISE திட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து TN-RISE இலட்சினையை (Logo) வெளியிட்டு, இணையதளத்தையும் (www.tnrise.co.in) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்கள்.

சென்னை, கிண்டி தொழிற்பேட்டை யில் உள்ள அலுவலகத்தில் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் கலைநயத்துடன் மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யம், தற்போதுள்ள தொழில் காப்பு மய்யங்களை (Business Incubation Centers) எளிதில் அணுக இயலாத ஊரக, நகர்ப்புர மகளிர் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் நிலை சேவைகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் தொழில் வணிக சூழலில் மகளிர் தொழில் முனைவோருக்கும் மற்ற தொழில் முனைவோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படும்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மகளிர் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் தொழில் குழுக்கள் இம்மய்யத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயன் பெற இருக்கின்றனர். மேலும் இத்தகைய தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும், தேவையான சேவைகளை வழங்கவும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்ற Flipkart, HP. SICCI, StartupTN மற்றும் பல நிறுவனங்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் தற்போது TN-RISE நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று (2.7.2024) தொடங்கி வைத்து பேசியதாவது:

மகளிர் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக “வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டமானது கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்து வருகிறது. மகளிர் வேலைக்கு செல்கிறார்கள் என்ற நிலையை, மகளிர் 4 பேருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்று மாற்றிட அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திட்டங் களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் பயனாக இன்றைக்கு இந்தியா வில் இருக்கிற மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவீத தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

இந்த வெற்றி பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக, தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை இப்போது அரசு தொடங்கியிருக்கிறது. தொழில் செய்வதற்கு ஏற்ற தேவையான நவீன கட்டமைப்பு, உற்பத்தி மேம்பாடு, பேக்கிங், பிராண்டிங், மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை, நிறுவன உருவாக்கம், நிறுவன செயல்பாடு என மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகளை A to Z வழங்குவதற்காக தான் இந்த TN-RISE நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மகளிர் தொழில் முனைவோர்களும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள் என்கிற வரலாற்று சாதனையை எட்ட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *