திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்
சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

சென்னை, ஜூலை 3 – உலக நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர், சுதந்திர சிந்தனையாளர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 30.6.2024 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டத்தின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ், செயற்குழுவில் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

21 மாநிலங்களில் செயல்பட்டுவரும் – கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் இராமு ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் அடுத்த தேசிய மாநாட்டினை, பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் பங்கேற்று உரை

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வேண்டுதலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற நிலையில் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவரின் உரைச் சுருக்கம் வருமாறு:

சமுதாயத்திற்குக் கேடு ஏற்படுத்திவரும் மதவெறியை, மூடநம்பிக்கைகளை எதிர்த்து களமிறங்கி போராடி வருவதில் பகுத்தறிவாளர் சங்கங்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த சிறப்பான பணியினை ஆற்றி வருகின்றன. அவை ஆற்றிய களப்பணிகளால் நாட்டில் ஒரு மாறுதலான அரசியல் சூழல் ஏற்படும் என நினைத்திருந்த நேரத்தில், மதவெறி அமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் சக்தியினர் மீண்டும் அதிகார நிலைக்கு வந்துள்ளனர். எந்தச் சோதனையினையும் சாதனையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவாளர் சங்கத்தினர் நடப்புச் சூழலையும் நேர்கொண்டு சமுதாயத்தில் மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

திருச்சியில் மாநாடு

பகுத்தறிவாளர்களின் செயல்பாடு உலகளாவிய மக்களுக்குரியது; அனைவருக்கும் தொடர்புடையது. அந்த வகையில், பன்னாட்டு பகுத்தறிவு, மனிதநேய, நாத்திக, சுதந்திர சிந்தனைமிக்க அறிஞர்களை – அமைப்பின் தலைவர்களை அழைத்து, தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடத்திடலாம். தமிழ்நாட்டின் மய்யத்தில் இருக்கும் திருச்சி மாநகரில் அந்த மாநாட்டினை நடத்திடுவோம்.

வருகின்ற டிசம்பர் திங்கள் 28, 29 ஆகிய இரு நாள்களில் மாநாட்டினை நடத்திடுவோம். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டினையும் சேர்த்து மிகப்பெரும் மாநாடாக நடத்திடுவோம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெறும் காலத்தில் இந்த உலக மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது.
இரண்டு நாள் மாநாட்டிலும் அறிஞர் பெருமக்கள், முற்போக்குக் கொள்கையாளர்கள் பங்கேற்று உரையாற்றுவர். மாநாட்டின் நோக்கத் தலைப்பில் பங்கேற்பாளர்கள் கட்டுரை படித்திடவும், தனி அரங்கு நிகழ்ச்சிகளாகவும் இரண்டு நாள்களும், திருச்சியில் மக்கள் பங்கேற்கும் வகையில் திறந்தவெளியில் பொதுக் கூட்டம் நடைபெறும். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடத்தப்படும்.

கடந்த காலங்களில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகள் மற்றும் பல கழக மாநாடுகளை நடத்திக் காட்டிய திருச்சி நகரில், இரண்டு நாள் மாநாடு நடைபெறுவது மக்களுக்கும், பகுத்தறிவாளர் சங்கத்தினருக்கும் ஆக்கமும், ஊக்கமும் நிச்சயம் அளித்திடும்.

மாநாடு குறித்த தொடர் பணிகள் பற்றிய ஆலோசனை களை கூட்டமைப்பின் அங்கமாக உள்ள சங்கத்தினர் தெரிவிக்கலாம். மாநாட்டினை வெற்றிகரமாக அனைவரது ஈடுபாட்டுடன் நடத்திடுவோம்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்று சிறப்புச் செய்தார்.

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *