செங்கல்பட்டு, ஜூலை 3- செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கியது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், இராட்டின கிணறு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் வழியாக செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கல்லூரி வரை சென்று முடிவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுவினால் குடும்பங்கள் சீரழிந்து வருவதையும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கலைக் குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வழி எங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், போதை மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு வெளியீடுகள் அவ்வழியாக வரும் வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வி நிர்வாகங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜெயகுமார், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.