‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிபாலிடெக்னிக் மாணவர்கள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு

viduthalai
3 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். மனதுக்கு இதமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இதனைக் கண்டு என் நெஞ்சம் பெருமிதத்தால் நிறைகிறது. நமது திராவிட மாடல் அரசு மெய்யாகவே நமது இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டு, தத்தமதுதுறைகளில் மென்மேலும் புதிய உயரங்களை அடையுங்கள். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களை தடை செய்ய  உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஜூலை 3- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவி யல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாய்மொழி அல்ல

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நேற்று (1.7.2024) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் உள்ள 9 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மட்டும்தான் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளன. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களாக உள்ளனர். மீதமுள்ள 56.37 சதவீதத்தினருக்கு ஹிந்தி தாய்மொழி அல்ல.
அதிகாரம் இல்லை

அதனால், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை.

குற்ற விசாரணை முறைச் சட்டம், உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவுகள், மாவட்ட நீதிமன்றங்களின் வழக்காடு மொழிகளை தீர்மானிக்க அதிகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மொழிச் சட்டப்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே நீதிமன்ற மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்

இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவுகளுக்கு எதிராக ஹிந்தி மொழியில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்த சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். மூன்று சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். – இவ்வாறு அதில் கூறியுள்ளார்.   இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பக்தியின் காட்டுமிராண்டித்தனம்  கோயில் விழாவில் துடைப்பத்தால்
அடி வாங்கிய பக்தர்கள்

தமிழ்நாடு

வேலூர், ஜூலை 3- கோவில் திருவிழாவில் பக்தர்கள் துடைப்பம் மற்றும் முறத்தால் அடி வாங்கினர்.
மகாபாரத சொற்பொழிவு

வேலூர் மாவட்டம் புட்டவாபாரிபல்லி ஊராட்சி, பெருமாள்பல்லி குரம்பூர் பகுதியில் திரவுபதி சமேத தர்மராஜா கோவிலில் மகாபாரத சொற்பொழிவு கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது.30ஆம் தேதி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்தது. கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திரவுபதி கல்யாணம், அர் ஜுனன் தபசு, கர்ணன் மோட்சம், திரவுபதி துயில் உரிதல் மற்றும் துரியோதனன் வதம் ஆகியவை நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 1.7.2024 அன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. துரியோதனன் மற்றும் பீமன் வேடமிட்டவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

துடைப்பம், முறத்தால் அடி வாங்கினர்

அதைத்தொடர்ந்து தனது மகன் துரியோதனனை படுகளம் செய்ததை அறிந்து கோபமடைந்த தாயார் காந்தாரி படுகளத்திற்கு வந்து தனது மகன் துரியோதனனை கொன்றவர்களை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூச்சலிட்டவாரே கையில் துடைப்பம் மற்றும் முறத்தால் அங்கிருந்த பக்தர்களை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காந்தாரி வேடமணிந்தவரிடம் பக்தர்கள் துடைப்பம் மற்றும் முறத்தால் அடி வாங்கினார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், ஆந்திர மாநில எல்லை பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்படியும் ஒரு காட்டுமிராண்டித்தனம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *