சென்னை, ஜூலை 3- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் களுக்கு நாளுக்கு நாள் கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை வழங்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் 116 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளி பயணிகளும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் வகையில் சாய்தள வசதியை ஏற்படுத்த வேண்டும் என அரசிற்கு உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி
ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், மெட்ரோ நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளங்கள் அமைக்கப் பட்டதாக கடந்த 2017 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 2020இல் வெளியிடப் பட்ட கூடுதல் அறிக்கையில் 40% மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக் கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத் திறனாளிகளால் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை பயன்படுத்த முடிவதில்லை” இவ்வாறு வாதிட்டார்.
இதனை அடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையே இடைவேளையை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும். எனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்” இவ்வாறு உறுதி அளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.