உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னை, ஜூலை 3- புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. கருநாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோர கடைகள் முதல் உயர்தர உணவக கடைகளில் பானி பூரி மாதிரிகளை கைப்பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பானி பூரிக்கான மசாலா நீரில்பச்சை நிற நிறமி (டை) சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து பானி பூரி கடைகளிலும் பயன்படுத்தப்படும் பூரி மசால் மற்றும் மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும், அதில் பயன்படுத்தப்படும் நீரின் தன்மை குறித்து ஆராயவும் அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்றுதீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையை பொறுத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானி பூரி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. சுறுசுறுப்பு தன்மையை அதிகரிக்கும் ஓர் உணவு. ஆனால் பானிபூரி கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல், வெற்றுக் கையுடன் பானி பூரியை உடைத்து அதில் மசாலாவை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றனர். இது மிகவும் சுகாதாரமற்ற முறையாகும்.
சில இடங்களில் அடுத்த நாளுக்கும் ஒரே மசாலா நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் நோய் தொற்றுவிரைவாக ஏற்படும். மேலும் பானிதயாரிக்க ‘ஆப்பிள் கிரீன்’ எனப்படும் டையை (நிறமியை) கலக்குகின்றனர். இது புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம். எனவே புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்காக முதல் கட்டமாக கல்வித்துறை ரூபாய் 61.53 கோடி நிதி விடுவிப்பு
சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.61.53 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று (ஜூலை 2) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2024-2025ஆம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகையை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது நிதி மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,471 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ.61.53 கோடி நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கையடக்கக் கணினிக்கு (டேப்லெட்) சிம் கார்டு வாங்கவும் (ஓர் ஆசிரியருக்கு தலா ரூ.110) இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் மாணவர்களுக்கு தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், தூய்மைப் பணிகள், பள்ளிகளுக்கான பொருட்கள் வாங்குதல், கட்டடப் பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்காக செலவிட வேண்டும்.
இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், செலவின அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.