நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்! மனநல மருத்துவர் சிவபாலன்!-வி.சி.வில்வம்

வாழ்வின் பிரச்சினைகளில் இருந்து விடுபட, “நம்மை நாமே மாற்றிக் கொள்வதுதான் முதல் தீர்வு”, என மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் கூறினார். பெரியார் மெடிக்கல் மிசன் சார்பில், “நல வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்’’ எனும் தலைப்பில், 28.06.2024 அன்று பெரியார் திடலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் மருத்துவர் ச.மீனாம்பாள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் குறித்து ஏராளம் கேள்விப்பட்டுள்ளேன்! சிறந்த மருத்துவ அணுகுமுறைக் கொண்டவர். அவரின் எழுத்துகள் நிறைய படித்துள்ளேன். நான் கூட அவர் வயதானவராக இருப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் இளம் வயது மருத்துவராகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார். அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. அதேநேரம் பெரியார் திடலுக்கும், கவிஞர் கலி.பூங்குன்றன் இல்லத்திற்கும் அவர் புதியவர் அல்ல! தொடர்ந்து இங்கு வந்து செல்லக் கூடியவர். பெரியார் திடலில் தனியாக ‘விருந்தினர் இல்லம்’ என ஒன்று கட்டவில்லை. ஏனெனில் கவிஞர் அவர்களின் இல்லமே எப்போதும் விருந்தினர் இல்லம்தான்!

தயக்கம்! தயக்கம்!!

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் நல்ல கொள்கைப் பார்வை கொண்டவர். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம் தொழிலா? தொண்டா? எனும் போது, சமூகம் பயன்படும் வகையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் மருத்துவர் சிவபாலன்.

மனநலம் என்பதைப் படித்தவர்கள் கூட தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இருதய மருத்துவரைப் பார்த்தேன், நரம்பியல் மருத்து வரைப் பார்த்தேன் என்பவர்கள், மனநல மருத்துவரைப் பார்த்ததாகக் கூற மாட்டார்கள். வயதானால் செவித்திறன் குறையும், கண்ணில் ஒளி மங்கும் என்பது இயல்பான ஒன்று. இன்றைக்கு வளர்ந்திருக்கிற விஞ்ஞானம், நம் உடலில் எந்த உறுப்புகள் தேய்மானம் ஆகியுள்ளதோ அதை மட்டும் மாற்றி, நம் வாழ்வைப் புதுப்பித்துக் கொடுக்கிறது!

இதில் கண் அறுவைச் சிகிச்சையை இயல்பாகக் கூறுவார்கள். காது கேளாத கருவிகள் பொருத்துவதை வெளிப்படையாகக் கூறுவதில்லை. உடல் நிலையில் கூட, ஒருவித பேத உணர்ச்சியைக் கடைப்பிடிக்கிறார்கள்.
மனநலத்தைப் பேணிக் காக்கும் மருத்துவமனைகள் மீது கேலிப் பார்வை உண்டு. கீழ்ப்பாக்கத்தில் மனநல மருத்துவ மனை இருக்கிறது என்பதற்காக, எங்கே கீழ்ப்பாக்கத்தில் இருந்து வருகிறீர்களா? என்றெல்லாம் பேசும் நிலை இருக்கிறது. மனம் செழிப்பாய் இருப்பதும், அதன் மூலம் மனிதன் மகிழ்ச்சியாய் வாழும் போதே, இந்தச் சமூகமும் ஆரோக்கியம் பெறும்!

சமூகம் சார்ந்துள்ள மருத்துவர்!

அப்படியான மனநலப் படிப்பை தேர்ந்து படித்து,‌ எளிய குடும்பத்தில் பிறந்து, குக்கிராமத்தில் வளர்ந்து, இன்றைக்கு மிகப் பெரியளவு இருப்பவர் நம் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் அவர்கள்! எப்படி உடல்நிலைக்கு எதிர்ப்பாற்றல் முக்கியமோ, அதேபோல மனநலத்திற்கும் முக்கியம்! இது ஓர் முக்கியமான துறை; ஆனால் எல்லோரும் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் துறை! அவற்றைப் பத்திரிகை, தொலைக்காட்சிகள் வாயிலாகத் தொடர்ந்து பேசி, மக்களுக்கு நல்ல வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்!

ஏனென்றால் நாம் நீண்ட காலம் வாழ்வது முக்கியமல்ல; நலமோடு வாழ வேண்டும்!அதற்கு மனநலம் மிக முக்கியக் காரணம்! தொழில் என்பதையும் தாண்டி, சமூக உணர்வுடன் செயல்பட்டு வரும் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் உரையை அனைவரும் கேட்டுப் பயனடைவோம்”, எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

அறிவியலுக்கு எதிரான போக்கு!

பல இடங்களிலும் பேசி வருகிறேன். ஆனால் இங்கு ஒரு பதற்றம் தெரிகிறது. வீட்டிற்கு வெளியே நிறைய பேசுவோம். ஆனால் வீட்டிற்குள் கவனத்துடன் பேசுவோம். அதுபோல ஆசிரியர் முன் பேசுவதற்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது!

மனநலம் என்பதைப் பெரியார் திடலில் பேசுவது மிகவும் பொருத்தமான ஒன்று! ஏனெனில் அறிவியலுக்கு எதிரான நம்பிக்கையை உடைத்த இடம் பெரியார்திடல் தான்! மனநலம் குறித்த எதிர்மறைப் பார்வையே சமூகத்தில் அதிகம் இருக்கிறது. சாதாரண அல்லது சிறு மனப் பிரச்சினை வந்தால் கூட அது நிரந்தரமான சிக்கல் என்றும், இனி உன்னுடன் வாழவே முடியாது என்றும், கூடுதலாக “சைக்கோ” என்றழைக்கும் அறிவியலுக்குப் புறம்பான போக்கு இருக்கிறது!

நோய்க்குச் சிகிச்சை செய்வது வேறு; நல்வாழ்வை மேம்படுத்திக் கொள்வது வேறு! மனநலம் என்பதை ஏதோ தீவிர சிகிச்சை என்று எடுத்துக் கொள்கிறார்கள். இதுகுறித்து வெளிப்படையாகப் பேச தடை அல்லது தயக்கம் இருக்கிறது! நலமா என யாராவது கேட்டால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நம் நலத்தின் மீது, பிறருக்கு அக்கறை இருக்கிறதே எனபதே அதற்குக் காரணம். அதேபோல மனநலம் நன்றாக இருக்கிறதா என யாரும் கேட்பதில்லை.

யோகா எனும் விற்பனைப் பொருள்!

மனநலப் பாதிப்பு என்பதை தனிப் பிரச்சினை என்றும், நாமே அதற்குக் காரணம் என்றும் மனிதன் நினைக்கிறான். அதனாலே அதுகுறித்து அவன் வெளியே சொல்வதில்லை. வெளியே சொல்லாத விசயம் விபரீதம் ஆகிற போது, நோயின் தீவிரம் தெரிய வருகிறது. எனவே மனநலம் என்பது வெளிப்படையாகப் பேச வேண்டிய ஒன்று!

அதேநேரம் இருதய மருத்துவர் ஒருவர் மனநலம் குறித்துப் பேசும்போது, இது கடவுள் கொடுத்த உடல் என்றும், அன்றாடம் யோகா செய்யுங்கள் என்றும் கூறினார். சந்தையில் ‘யோகா’ என்பது நல்ல விற்பனைப் பொருள். முன்பெல்லாம் நமக்கு மட்டும் யோகா செய்ய சொன்னார்கள். இப்போது உலக நலத்திற்கும் செய்ய சொல்கிறார்கள்.

மனம் என்றால் என்ன?

மனநலம் என்றால் என்ன? மனம் குறித்து ஏன் இவ்வளவு குழப்பங்கள் நிலவுகிறது என்பதைப் பார்ப்போம். மனதிற்கு உருவம் என்பதே கிடையாது. எங்கு உருவங்கள் (Structural) இல்லையோ, அங்கு அறிவியலுக்கு எதிரான கருத்துகள் முளைத்துவிடும். நம் நாட்டில் மனம் குறித்து முதலில் பேசியவர்கள் யார் தெரியுமா? சாமியார்கள். மனம் என்பதற்கு உருவம் இல்லாத நிலையில் அடித்துவிட்டார்கள். மருத்துவ அறிவியல் வளர்ந்த பிறகுதான், மனநோய் என்பது உடலுக்குள் ஏற்படுகிற சிக்கல் என்பதை அறிந்தார்கள். பிறகு அதற்கான சிகிச்சை வந்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு விலங்குகளுக்குக் கிடையாது. ஆனால் மனிதனுக்கு உண்டு! தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள “மன உறுதி வேண்டும்” என்பார்கள்.

மனநிலைச் சீர்கேடுகள்!

‘‘உனக்குப் பெருமை வேண்டுமானால் சமூகத்திற்குப் போட்டி போட்டு தொண்டு செய்’’, என்கிற பெரியாரின் மானுடம் தான் மனிதப் பண்புக்கு அடிப்படை! அந்தப் பண்புகளே சிறந்த மன நலனை உருவாக்கும்! அதேநேரம் மனநலப் பிரச்சினைகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகம். அதேபோல விவாகரத்துகளும் தமிழ்நாட்டில் அதிகம். காரணம் வளர்ச்சி இருக்கும் இடங்களில் இவற்றைத் தவிர்க்க முடியாது! சமூக வளர்ச்சியும், தனி மனித வளர்ச்சியும் ஒருசேர விரிவாக்கம் ஆகிறபோது, இது போன்ற பிரச்சினைகள் வருவது இயல்பு.

அதேநேரம் அன்றைக்கு இருந்த மன நோய்கள், மனச்சிதைவு நோய்கள் குறைந்துவிட்டன.‌ எனினும் இன்றைய வாழ்க்கை முறையால் “மனநிலைச் சீர்கேடுகள்” பெருகிவிட்டன! அதைக் குறைக்கும் வழிமுறைகளை, ஆலோசனைகளை நாம் பெற வேண்டும்.

சமூகத்துடன் இணைந்திருங்கள்!

மகிழ்ச்சியான மனநலத்திற்கு நல்ல சுற்றுச்சூழல் தேவை. சமூகம் சார்ந்து இயங்குவது அதில் முக்கியமான ஒன்று! சமூகத்தோடு எப்போதும் நாம் இணைந்திருக்க வேண்டும்! நம்மை சுற்றியுள்ள சமூகம், அதன் சிக்கல்கள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.‌

அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். நல்ல செயல்பாடுகள் உடைய சமூக மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உழைத்துக் கொண்டே, ஓடிக் கொண்டே இருப்பார்கள். அன்றைய உதாரணம் பெரியார்! இன்றைய உதாரணம் ஆசிரியர்!

ஒரு மனிதனின் அதிகபட்ச குணநலன்கள் என்பது, அறிவு நாணயத்தோடு வாழ்வது. அதாவது தம் அறிவைப் பயன்படுத்தித் தமக்கும், சமூகத்திற்கும் பயன்படுமாறு வாழ்வது! இந்த உலகம் எல்லோருக்குமானது! இங்கு போட்டி, பொறாமைகள் தேவையில்லை. நாம் கொடுக்கும் உழைப்பிற்கு மட்டும் பயன்களைப் பெற்றுக் கொள்வோம்! சக மனிதர்களுடன் நட்புறவு இல்லாமல், ‘இன்ஸ்டாகிராமில்’ 3000 நண்பர்களை வைத்து என்ன செய்யப் போகிறோம்?

நம்மை நாம் மாற்றுவோம்!

அதேபோல குழந்தைகளையும் போட்டி மனப்பான்மை யோடு வளர்க்கிறோம். பிற குழந்தைகளை நாமும் மனிதர்களாய் பார்ப்பதில்லை. நம் குழந்தைகளுக்கு, போட்டி குழந்தைகளாகவே பார்க்கிறோம்! எனவே நமது குழந்தைகளை ஒரு “பாதுகாப்பு வளையத்திலே” வைத்தி ருக்கிறோம். பின்னாளில் அவர்களுக்குப் பிரச்சினை வருகிற போது தீர்வு பெற சிரமப்படுகிறார்கள். சமூகம் குறித்தும் தெரிவதில்லை; சமூகத்தில் இருந்து உதவியும் கிடைப்பதில்லை!

நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.‌ அப்படி ஏற்க முதலில் நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும். அப்படியின்றி அவர்கள் ஏன் மாறவில்லை எனப் புலம்பக் கூடாது. “நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவே இல்லை”, எனவும் சங்கடப்படக் கூடாது! அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்!

நிறைவாக வாழ்வது முக்கியம்!

இதற்குத் தீர்வு என்பது வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதுதான்! வெளிப்படையோடும், நேர்மையோடும் இருக்கிற போது எதிர்மறைப் பிரச்சினைகள் குறைந்துவிடும்! நாம் எந்தெந்த விசயங்களை வீட்டில் சொல்லத் தயங்குகிறோமோ, நண்பர்களிடம் சொல்ல யோசிக்கிறோமோ அவற்றைச் செய்யக் கூடாது! அதேபோல பிறரின் கருத்து களைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்! மனோவியல் மருத்துவர்கள் நிறைய பேசுவதாகச் சொல்வார்கள். ஆனால் நான் நிறைய கேட்பேன்!

ஒரு காலத்தில் தேர்வில் தோற்றவர் தற்கொலை செய்து கொண்டார். இப்போது முதல் மதிப்பெண் பெற்றவர் தற்கொலை செய்து கொள்கிறார். காரணம் இந்தச் சமூகம் கொடுக்கும் அழுத்தம்! எனவே உடல்நலம் என்பது நீண்ட காலம் வாழ்வது மட்டுல்ல; நிறைவாக வாழ்வதே முக்கியம்!

ஆகவே மனநலத்திற்கு எதிரான சிந்தனைகளை, நம்மைப் போன்ற சமூகச் செயற்பாட்டாளர்கள் மாற்ற வேண்டும்! அதற்கான சரியான இடம் பெரியார் திடல்! அவ்விடத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி”, என மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் பேசினார்!

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *