உடல் நலம் காப்பதற்கும், அதனைத் தக்க வகையில் மேம்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றலை (Immunity from disease) உடலில் வலுப்படுத்திக் கொள்ளவுமே நாம் டாக்டர்களிடம் சென்றும் – மருத்துவமனைகளில் சேர்ந்தும், சேராமலேயே புற நிலையின் மருத்துவம் பார்த்தும் நமது வாழ்க்கையை நாளும் வளப்படுத்திக் கொள்ளுகிறோம். மனிதவாழ்வின் இயல்பு அது!
ஆனால் உடலைப் போன்றதே உள்ளம் என்ற மனமும்.
ஆனால் உடலைக் காட்ட மருத்துவர்களை அணுகுவதற்கோ, அதற்குரிய சிகிச்சை நிலையங்களுக்குச் செல்லவோ கூச்சப்படாத நாம், உள்ளம் என்ற மன நலத்தை வளப்படுத்தி, மேம்பாடு அடையச் செய்ய மனநல மருத்துவரிடம் (Psychiatrist Doctor) செல்வதை பிறரிடம் கூறவோ, சென்றுபார்த்தாலே நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைப்பார்கள் என்றோ. அதை நம்மைப் பற்றி நாமேகூடநமக்கு மனநிலை சரி இல்லாமல் “பைத்தியமாக” (இச்சொல்லைப் பயன்படுத்த வாசகர்கள் மன்னிப்பர்களாக) ஆகி விட்டோமோ, அல்லது மற்றவர் நம்மை அப்படி நினைப்பார்களோ என்ற தேவையற்ற மனக் குழப்பம் விரும்பத்தகாத வெட்கம், சுமக்கத் தேவையற்ற அடிப்படை அச்சம் இவைகளை நாம் சுமந்து திரியும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
பகிரங்கமாக இவைகளை விவாதிப்பதோ, அதுபற்றி விலாவாரியாக விளக்கம் பெறுவதோ கூடாச் செயல் அல்ல; மனித குலத்திற்கு தேவைப்படும் ஒன்றாகும்!
சென்னையின் பிரபல மனவள மருத்துவர் டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்கள் பெரியார் திடலில் உள்ள அன்னைமணியம்மையார் அரங்கில் கடந்த 28.6.2024 அன்று மாலை தந்த ஒரு அருமையான பொழிவில் எளிய முறையில் ஒரு வகுப்பு எடுப்பதன் மூலம் சரளமாகப் பேசினார்!
கேட்டார் பிணிக்கும் வகையில் அந்த பொருள் பொதிந்த பொழிவு அமைந்திருந்தது.
மன அழுத்தத்தின் சிக்கலில் சிக்கிச் சீரழிவதன் அடிப்படைப் பற்றி நன்கு துல்லியமாக விளக்கினார் அந்த புகழ் பெற்ற மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்!
மன அழுத்ததின் மூல வேர் எதிலிருந்து வருகிறது என்பதை ஆழமாக அலசிய அவர், மனிதன் அடிப்படையில் ஒரு சமூகம் சார்ந்து வாழும் ஒரு உறுப்பினர்; சமூகப் பிராணி (Social Animal) என்பதை உணர்ந்து சமூகநலன்பற்றி நாம் எண்ணி இலக்காக்கிக் கொண்டு, நான் என்ற தனி மனிதனை பின்னுக்குத் தள்ளி வைப்பதால், பிரச்சினைகளில் பலவும் தோன்றாமலேயே இருப்பதோடு, தோன்றியவைகளாக இருப்பினும்கூட, அவற்றை விரைவில் தீர்வுக்குள்ளாகிவிடக் கூடியதாகும்! என்ற பொதுநலக் கண்ணோட்டம் பொதுமையை பின்னுக்குத் தள்ளாது, முன்னாலேயே நிறுத்தினால் பிரச்சினைகள் பனியாய்க் கரைந்து விடும் என்பதை தனது 40 நிமிட உரையில் தெளிவுபடுத்தினார்!
நம்மை பிறருடைய வாழ்க்கையில் ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்தல், தேவையற்ற பொறாமைக் குணம் முதலியவைகளைத் தவிர்த்தலும், அதிலும் வெளிப்படைத் தன்மை (Openness) கொண்ட வாழ்தலும் நமக்கு பிரச்சினைகள் ஏற்படாத தடுப்பணைகளாக என்றும் துணை நிற்கும் என்றார்!
பேசுபவர்களாகவே நம்மில் பலரும் இருக்கிறோம்; துயரமும் துன்பமும் அடையும். பல முதியவர்கள், தொல்லைப்படுபவர்களின் குறைபாடுகளை கேட்க நம்மில் பலரும் தயாராக இல்லை; காரணம் வேக உலகம்; நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
ஒதுங்கிக் கொண்டு நம்மைப் பிறரிடமிருந்து பார்க்கும் மனச் சுவர்களை எழுப்பி தடுத்துக் கொள்கிறோம்!
சமூகம் என்பதே ஒருவர் மற்றவரைச் சார்ந்தே வாழும் அமைப்பு முறை (Interdependent) வாழ்க்கை முறை என்பதை ஏனோ, எப்படி மறந்து வாழ்வதுடன் தேவையற்று நமமைத் தனிமைப்படுத்திக் கொள்ளுகிறோம். சமூக நலனைப் புறந்தள்ளிஅளவுக்கு மீறிய சுயநலத்திலேயே சுழன்றுகொண்டிருப்பதுதான் மன அழுத்தங்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன என்றார். மற்றவை பிறகு விவாதிப்போம்!