“ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்! திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது”
சிறப்புகள் பெரியார் – அண்ணா – கலைஞர் – ஸ்டாலின் உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்துக்கே!
“ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்!” “திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது” – சிறப்புகள் பெரியாருக்கே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
காங்கிரசில் இருந்த காலம் முதலே கோயில் நுழைவு – ஜாதி பேதமற்று அனைவரும் கருவறைக்குச் சென்று வழிபடும் உரிமை ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தும், போராடியும் வந்த தந்தை பெரியார் 1969ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் உரிமைப் போராட்டத்திற்கு மூல வித்தாக கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்கள்.
அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை பெரியார் திடலுக்கே நேரில் வந்து சந்தித்து, “அந்த அறப்போராட்டத்தைத் தள்ளி வையுங்கள்; அதற்குள் அதற்கு வழிவகுக்கும் வகையில் தனிச் சட்டமே நிறைவேற்றித் தங்களது ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்புக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசே நடைமுறைக்குக் கொண்டு வரும் – இது உறுதி” என்றார்!
அதன்படியே தனித்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள் – 1970இல்!
அதனை எதிர்த்து தமிழ்நாட்டுப் பார்ப்பன அர்ச்சகர்களும், சில மடாதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காமல், நேரே டில்லி உச்சநீதிமன்றத்தில் தனி வழக்குகளைத் தொடுத்தனர்.
திருவாளர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் பரிந்துரையை ஏற்று, அந்நாளைய பிரபல மூத்த வழக் குரைஞரான பல்கிவாலா அவர்களே வாதாடினார். கே.பராசரன் போன்ற பல மூத்த வழக்குரைஞர்களும் மனுதாரர்களுக்காக வாதாடினர்.
‘சேஷம்மாள் வழக்கு’
அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேக்கர், எம்.எச்.பெக் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விரிவாக விசாரித்தது! தீர்ப்பும் கூறியது. (ஜஸ்டீஸ் டி.ஜி. பாலேக்கர் – இவர் மராத்திய அர்ச்சகப் பார்ப்பனரின் மகன் என்பது ஒரு சுவையான தகவல்).
இந்த வழக்கை ‘சேஷம்மாள் வழக்கு’ என்றே சுருக்கமாகச் சட்ட நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.
இவ்வழக்கினை கலைஞர் தலைமையிலான தமிழ் நாடு தி.மு.க. அரசு சிறப்பாக, திறம்பட மூத்த அரசு வழக்குரைஞர்களை வைத்து நடத்தியது.
தீர்ப்பில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம் செல்லும் (செல்லாது என்றுதான் பார்ப்பனர்கள், அர்ச்சகர்கள் வாதாடினர்) என்றும், தமிழ்நாடு அரசின், பாரம்பரிய அர்ச்சகர் நியமன ஒழிப்புச் சட்டம் செல்லும் என்றும் கூறிவிட்டு, ஆனால் “அர்ச்சகர் ஆவதற்கு ஆகமங்களைப் படித்து தகுதி பெற்றவர் மட்டுமே அர்ச்சகராக நியமனம் பெற முடியும் – அரசமைப்புச் சட்ட 26ஆவது பிரிவின்படி ‘மதவிஷயம்’ அது” என அத்தீர்ப்பில் கூறினர். இதன்படி “தமிழ்நாடு அரசு விரும்பியபடி உடனடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகமத் தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்ற ஒரு நிபந்தனைத் தடுப்பை ஏற்படுத்தியது அத்தீர்ப்பு!
இதைத்தான் அன்று ‘விடுதலை’ தலையங்கத்தில் “ஆபரேசன் வெற்றி; நோயாளி செத்தார்” என்ற சொற்றொடர் மூலம் விளக்கினோம்.
மறுபடி ஆட்சிகள் மாறின, இந்தப் போராட்டம் பல ஆண்டுகள், பல களங்களைச் சந்தித்தது.
முற்றுப் புள்ளி
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின்படியான நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்தது. அதன் மீதான மேல் முறையீட்டினை இந்திய உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு – நேற்று (22.8.2023) தள்ளுபடி செய்ததின் மூலம் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் அரசால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் செல்லு படியாகும் என்பது இரண்டாவது முறையாகவும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி…
அடக்கம் செய்யப்பட்டபோது தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தந்த துணிவுமிக்க கலைஞர் துயரத்துடன் கூறினார். “தந்தைக்கு அரசு மரியாதை கொடுத்தும், அவர் “நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி” – ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகும் ஜாதி ஒழிப்பு விருப்பத்தை நிறைவேற்றிட முடியவில்லையே” என்று குறிப்பிட்டார்!
மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் தலைமையில் ஓர் உயர் நிலைக்குழுவினை நியமித்து உரிய ஆகமப் பயிற்சிப் பள்ளியில் ஆகமக் கல்வியைக் கொடுத்து அர்ச்சகர் நியமனத்திற்கு வழி வகை செய்தார்.
அதை எதிர்த்தும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
205 பேர் தகுதி பெற்றனர்
1972 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பல வழிகளை கவனத்தில் கொண்டே 2006இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற் றப்பட்ட புதிய சட்டப்படி தனித்தனியே வைணவக் கோயில், சிவன் கோயில்களுக்கு ஏற்ப அர்ச்சகர் பயிற் சிக்கென 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டு (அதில் சில பார்ப்பன மாணவர்களும் கூட உண்டு) 205 பேர் தகுதி பெற்றனர்!
ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் – இரு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், வெங்கட ரமணா ஆகியோரும் – 16.12.2015 அன்று, சேஷம்மாள் வழக்கில் வந்த தீர்ப்புப்படி, “ஆகமத் தகுதியின்படி எந்த ஜாதியினரானாலும் அர்ச்சகராக நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு” என்று தீர்ப்புக் கூறிவிட்டு, இறுதிப் பாராவில், “தனிப்பட்ட முறையில் யாராவது பாதிக்கப்பட்டவர்களானால் அவர்கள் தனியே நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் தேடிடலாம்” என்றும் கூறி ஒரு “சிறு சந்து” விட்டிருந்த நிலையைப் போன்ற வரிகள் அத்தீர்ப்பில் காணப்பட்டன.
சரித்திர நாயகருக்கு மக்கள் தந்த பெருமை!
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு 2021 – ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஒப்பற்ற முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், ஆகமப் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாக காத்திருந்தோரில் சிலரை முதற் கட்டமாக நியமனம் செய்தது. அந்த வரலாறு காணாத சரித்திரச் சாதனை யினை நிகழ்த்தியவர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் என்று மகிழ்ச்சிப் பேருவகையுடன் மக்கள் தந்த பெருமையைப் பெற்றார்!
ஆதிக்கச் சுவையை ஆயிரக்கணக்கான ஆண்டு களாய் அனுபவித்த ஆரியம் பொறுக்குமா? மீண்டும் ஆங்காங்குள்ள சில ஆரிய நச்சரவங்களின் மறைமுக உதவியோடு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நியமனம் பற்றி புது வழக்கு – “ஆகமப் பயிற்சி பெற்றவர் – ஜாதிக் கண்ணோட்டமின்றி, அர்ச்சகர் நியமனத் தகுதி உடை யவரே” என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் – அவ் வழக்கினை அனுமதிக்காமலேயே அத்தீர்ப்பு சரியானதே என்று அதைத் தள்ளுபடி செய்து ஒரு முழு வட்டப் பயணத்தை உச்சநீதிமன்றம் – இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.
திருப்புமுனைத் தீர்ப்பு!
இதன்மூலம் – இப்போது
“ஆபரேஷனும் வெற்றி,
நோயாளியும் பிழைத்தார்!
எழுந்தார்! மகிழ்ந்தார்!”
நமது முதல் அமைச்சரும், அவரது அரசும், இதற்கு முக்கிய காரணமாக அமைந்து 53 ஆண்டுகால சமூகப் போராட்டமான ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட் டக் களத்தில் பெரு வெற்றி வாகை சூடியது வரலாற்றின் வைர வரிகளாகும். நியாயத் தராசினைச் சரியாகப் பிடித்த நீதிபதிகளும் – மக்களின் பாராட்டுக்கு உரிய வர்கள் – இது ஒரு திருப்பு முனைத் தீர்ப்பு!
தொடரட்டும் ஒப்பற்ற முதலமைச்சரின் சரித்திர சாதனைகள்! எஞ்சிய நியமனங்கள் தொடரட்டும்; இடையில்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் அர்ச்சகர் பயிற்சியும் தொடரட்டும்!
இதன் மூலம் பெரியார் வென்றார், அண்ணா வென்றார், கலைஞர் வென்றார், ஸ்டாலின் வென்றார், மக்கள் வென்றார்கள்!
முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!!
திராவிடம் வெல்லும்! நாளைய வரலாறு சொல்லும்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.8.2023