முனைவர் கோ. ஒளிவண்ணன்
பயிற்சிப் பட்டறைகள் எப்போதுமே நம்மைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவுகின்றன.
கடந்த 29.6.2024 அன்று, ‘வாருங்கள் படிப்போம்’ மற்றும் ‘பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்’ இணைந்து நடத்திய வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை பெரும் ஆதரவைப் பங்கேற்பாளர்களிடம் பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம் இந்த பயிற்சிப் பட்டறை பதிவு கட்டணம் பெற்று நடத்தப்பட்ட ஒன்று. பெருமளவிற்குப் பதிவுகள் வரத் தொடங்கியதால், இரு நாள்களுக்கு முன்பே பதிவை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்படி கூட நடக்குமா, இந்த காலத்தில். அதுவும் காசு கொடுத்து நாள் முழுக்க ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுவது நியாயம். காரணம் புள்ளி விவரங்கள் இன்றைக்கு மனிதர்களுடைய சராசரி கவனம் 3 இலிருந்து 5 நிமிடங்களுக்கு மேல் இல்லை என்று கூறுகிறது.
இந்த பயிற்சிப் பட்டறையின் சிறப்பு, திட்டமிட்டபடி சரியாக 9:30 மணிக்குத் தொடங்கியது. எல்லா அமர்வு களுக்கும், நேரம் சரியாகத் திட்டமிடுதல், குறித்த நேரத்தில் தேநீர், உணவு இடைவேளைகள் வழங்குதல், கருத்தரங்கை நேரத்துக்கு முடித்தல் என நேர மேலாண்மையில் அதிகம் கவனம் செலுத்தியது. அதைப்போலவே சிறந்த கருத்து ரையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் முன்கூட்டியே தலைப்புகள் கொடுத்து அந்த தலைப்புகளின் நோக்கம் என்ன, அதை நோக்கி எவ்வாறு அவர்கள் கொடுத்த நேரத்தில் பயணிக்க வேண்டும் என்பதையும் விவாதித்துத் தீர்மானிக்கப்பட்டது.
80க்கும் மேற்பட்ட பதிவு செய்த பங்கேற்பாளர்கள். கூடுதலாக 20 நண்பர்கள் உதவி செய்வதற்காக என மொத்தம் 100 பேர் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் காலையிலிருந்து மாலை வரை இருந்தார்கள். நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பு, பங்கு கொண்டோரில் பாதிப் பேர் மாணவர்கள்.
தொடக்க விழாவில் ‘வாருங்கள் படிப்போம்’ குழுவின் தலைவி பேராசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் நோக்க உரை வழங்க, பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.
வாருங்கள் படிப்போம் குழுவினைச் சார்ந்த அர்ஷா பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொறுப்பாளர் கவிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.
”கவிதைக்கு மெய்யழகு’ என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் மிக ஆழமான உரையை பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு பங்கேற்பாளர்களோடு உரையாடலாகக் கொண்டு சேர்த்தார். மேலும் அவரது உரையில் இக்கால கவிஞர்கள் பலரையும் அறிமுகம் செய்து அவர்களது கவிதைகளைப் படித்துக் காட்டி, கவிதையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், நுட்பம் என்ன, கவிஞன் தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் என மிக அழகாக விவரித்துப் பேசினார்.
அதனை அடுத்து, நாவல் உலகில் தனக்கென தனி இடத்தை நிறுவிக் கொண்டிருக்கும் கரன் கார்க்கி, ‘புதினம் உருவாகும் சூழல்கள்’ என்ற தலைப்பில் தனது உரையை நிகழ்த்தினார். எத்தனையோ வட்டார வழக்கு எழுத்தாளர்கள் இருக்கின்ற இந்த தமிழ்ப் படைப்பு சூழலில், சென்னையைப் பிரதிபலிக்கும் மிக முக்கிய எழுத்தாளர் கரன் கார்க்கி என்றால் மிகையாகாது. அவரது எழுத்தில் காணக்கூடிய சீர்மிகு சிந்தனைகள் அனைத்தையும் உரையிலும் காண முடிந்தது. ‘‘ஓர் எழுத்தாளர் என்பவன் நேற்று தொடங்கி, இன்று பிறப்பவன் அல்ல. அவன் பல ஆண்டுகளாக ஓர் படைப்பிற்குள் ஊறி உழன்று நம் முன் வைக்கின்றான்.
அந்தப் படைப்பு நிச்சயமாக ஒரு நாள் கொண்டாடப்படும், காத்திருக்கும் பொறுமை நமக்கு வேண்டும். சாதாரணமான படைப்புகள் என்ற இங்கு எதுவுமே இல்லை, எல்லோருடைய எண்ணங்களும் மிகச் சிறப்பானவை தான், வாசிக்கப்பட வேண்டியவை தான். ஆனால் அவற்றை முறைப்படுத்தி செம்மை செய்து தர வேண்டியது எழுத்தாளனின் கடமை என்பதை வலியுறுத்தினார். அவரது உரை ஒன்றரை மணி நேரத்தைக் கடந்து சென்றாலும், அவையில் ஒரு சலனமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கருத்துகளை உள்வாங்கியது கரன் கார்கியின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
உணவு இடைவேளை. இன்றைக்குக் காய்கறி உணவைக் காட்டிலும், மாமிச உணவை விரும்புபவர்கள் 98 சதவீதம் இருப்பதால், அதுவே வழங்கிட வேண்டும் என்று தீர்மானித்து அமைப்பாளர்கள் சுவையான உணவை வழங்கினார்கள்.
மதிய நிகழ்வில் முதலாவதாக, எழுத்தாளர் பேச்சாளர் என்பதை எல்லாம் தாண்டி, வாசிக்கும் உலகை உரு வாக்கும் ஒரே நோக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஒளிவண்ணன் கட்டுரைகளை எப்படி வடிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசினார். படைப்புலகில் இன்னொரு பரிணாமம் கட்டுரை. கட்டுரை எழுத எதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும், குறிப்பாக, கரு, மொழி, நடை, சொற்கள், சொல்லப்படும் கருத்தின் உண்மைத் தன்மை, அதற்கான ஆதாரங்கள், கட்டுரையின் நீளம் என நேர்த்தியாக விளக்கினார். ஒரு கருத்தைச் சுருங்கச் சொல்வதின் அவசியம் என்ன, சுருங்கச் சொல்கின்ற போது கருத்துகளைச் சுருக்குவது அல்ல என பல்வேறு அரிய கருத்துக்களைக் கலகலப்பாகத் தனக்குரிய பாணியில் உரையாற்றிச் சென்றார் முனைவர் கோ.ஒளிவண்ணன்.
அதன் பிறகு எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஏ.அய். என் தோழி’ தலைப்பில் அய்.எஸ்.ஆர். செல்வகுமார் தனது இயல்பான அதே நேரத்தில் ஆழமான உரைவீச்சால் ஆரம்பம் முதல் இறுதி வரை அவையை அப்படியே தன் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். எல்லோரும் ஜெமினி ஏஅய் தரவிறக்கம் செய்யுங்கள் என்றார். பிறகு படிப்படியாக எப்படி பயன்பாட்டின் வீச்சை அதிகரிப்பது என்பதைச் செயல் முறையில் விளக்கினார். எழுத்தாளர்களுக்குப் பல வகைகளில் ஏஅய் எவ்வாறு உதவி செய்யும் என்பது குறித்து மிக நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அனைத்து வயது பிரிவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். எவ்வித வேறுபாடும் இன்றி ஆவலு டன் பயின்று சென்றார்கள். காரணம் பயிற்றுநர்களின் வல்லமை நிறைந்த உரையாடல்.
நிகழ்வின் இறுதியில் முழு நிகழ்ச்சியின் கருத்து கனி களைப் பிழிந்து ஒரு குடுவையில் சாறாக அனைவருக்கும் வழங்கினார் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார். பங்கு கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
‘‘வாருங்கள் படிப்போம்” தோழர்கள் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தோழர்கள், பலர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கினை சிறப்பாகச் செய்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர்.
முனைவர் வா.நேரு, அன்புமணி, தோழி கவிதா, பேராசி ரியர் உமா மகேஸ்வரி, குழல் குமரன், அர்ஷா, மீனாட்சி என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்தார்கள்.
பிற்பகல் தன்னுடைய அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிய திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறதே அதுவும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ என்றவுடன் ‘நேரமாகிறது, மருத்துவரிடம் செல்ல வேண்டும்: என்ற நினைவூட்டல்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஆர்வத்தோடு தன்னுடைய இளம் வயதில் சுறுசுறுப்பாக நடந்து அரங்கத்திற்கு வந்தார்.
அவரைக் கண்டவுடன் அங்கிருந்தோர் அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்றனர் .
அப்போது நடந்து கொண்டிருந்த அமர்வு முடிந்தவுடன், ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுச் செல்லுங்கள் என்று பணித்த போது, மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் ஆழமான கருத்துகளை எழுத்தாளர்களுக்கு எடுத்துரைத்து விட்டுச் சென்றார். பட்டறையின் நோக்கத்தை விளக்கினார். ‘‘ஒரு பொருள் இரு இடங்களில் இருக்கலாம். இரண்டும் ஒரே பொருள் என்று அறிகின்ற பகுத்தறிவு இருந்தால் போதுமானது” என்பதற்காக அவர் சொன்ன உதாரணம் அற்புதமானது. ஒன்றை கண்டு சீ அசிங்கம்! என்று ஒதுங்கு வதும் இன்னொன்றை சாமியாகப் பார்த்து வணங்குவதையும் சொன்னபோது அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய அம்மாவுக்கு ஆசிரியர் அவர்கள் உரைக் குறிப்புப்பற்றி இப்படியாகச் செய்தி அனுப்புகிறார்.
‘‘ஒரு தாத்தா பேசினாங்க. அவங்க ரொம்பவே இன்ஸ்பிரேஷனா பேசினது பிடிச்சிருந்தது.. எழுத்தை ஆள்பவர் தான் எழுத்தாளர்ன்னு அவரின் ஆரம்பமே சிறப்பா இருந்துச்சு. கொஞ்ச நேரம் தான் பேசினாங்க. ஆனால், ஏராளமான விஷயத்தைச் சொன்னாங்க. எல்லா பேச்சாளர்களிலும் எனக்கு அவரின் பேச்சுதான் ரொம்பப் பிடிச்சது….’’
இத்தகைய நிகழ்வுகள் சென்னையோடு முடிந்து விடக்கூடாது. பல நகரங்களில் குறிப்பாக மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்த வேண்டும் என ஏராளமான அன்பர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.