ஊன்றிப் படியுங்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டுச் சிந்தனைகள் அகிலம் தழுவிய இயக்கத்தின் வரலாறு

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

அறிவு ஆசான் தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய “சுயமரியாதை இயக்கத்தின்” நூற்றாண்டு தொடக்கக் கால வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்வு, வரலாற்றுப் பெருமை படைத்த, 1929இல் செங்கற்பட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற அதன் முதலாவது மாநாடாகும்!
அதில் அந்நாளைய முக்கிய அரசியல், ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜாதி ஒழிப்பு, பெண்களுக்கான உரிமைகள் மீட்பு போன்ற பல முக்கிய முன்னோடித் தீர்மானங்களைத் தந்தை பெரியார் உருவாக்கி நிறைவேற்றி மகிழ்ந்தது அம்மாநாடு!
அன்றைய அதன் தீர்மானங்கள் பல இன்றைக்கு நம் ஆளும் சட்ட திட்டங்களாகி பல்வேறு கட்சிகள் ஆட்சியில் வந்தும் சென்றும் இருக்கும் நிலையிலும், பரிணமித்துக் கொண்டு உள்ளன என்பது பூரிக்கத்தக்க பெருமிதம் ஆகும்!
அதனால் அந்த காலகட்டத்தின் நிகழ்வுகளில் புதைந்தவை, விடுபட்டவை, பல்வேறு காரணங்களால் போதிய வெளிச்சம் பெறாமல் விடுபட்ட செய்திகள் இவற்றைப் புதைபொருள் ஆய்வு போல் தேடித் தேடிக் கண்டறிந்து, ஆவணப்படுத்திடும் பணியில் நாம் இப்போது ஆழ்ந்துள்ளோம்.
அதில் ஒரு முக்கிய அரிய தகவல் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியார் நடத்திய செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டைப் பாராட்டி, வாழ்த்தி 1929, மார்ச் 1ஆம் தேதி தாம் நடத்திய “பகிஷ்கிரித் பாரத்” என்ற மராத்திய இதழில் மராத்தியில் எழுதியுள்ள செய்திக் கட்டுரையாகும்.
(மராத்தி மூல எழுத்தும் அதன் தமிழாக்கமும் பக்கத்திலேயே தரப்பட்டுள்ளன.)

இந்தப் பகுதி ‘பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள்’ என்ற தலைப்பில் மராத்திய அரசு மராத்திய மொழியில் திரட்டி வெளியிட்டுள்ள தொகுதி 20, பக்கம் 56இல் இந்த சிறப்புக் கட்டுரையாகக் காணப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுகள் ஆங்கிலத்தில் 17 தொகுதிகளாகவும் (20 புத்தகங்கள்), 21ஆவது தொகுதி அவரின் கடிதத் தொகுப்பாகவும், 22ஆவது தொகுதி அவரது ஒளிப்படத் தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது. 18, 19, 20 ஆகிய தொகுதிகள் அவரது மராத்திய எழுத்துகளின் தொகுப்புகளாகும். அவை இன்னும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வில்லை. எனவே பரவலான கவனத்தை இதுவரை பெறவில்லை. இந்த நிலையில்தான் இக்கட்டுரையைத் தேடிக் கண்டெடுத்துள்ளோம்.

இக்கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர் செங்கற்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிடுகையில் மற்ற தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்ட நிலையில், தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடுகையில் “நண்பர் இராமசாமி நாயக்கர்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘மீ’ என்று மராத்தியில் சுருக்கமாகக் குறிப்பிடப்படுவது நண்பர் என்று பொருள்படும் ‘மித்ரன்’ என்பதாகும்.
அக்காலத்தில் தந்தை பெரியார் அகில இந்தியாவிலும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற அடைமொழியோடுதான் பிரபலமாக அறிமுகமாகி இருந்தார். அதனால் ‘நாயக்கர்’ பெயரொட்டுடன் குறிப்பிடும் நிலையில், ‘நண்பர் இராமசாமி நாயக்கர்’ என்று வாஞ்சையோடு குறிப்பிடுவதன் மூலம் ‘நேரில் சந்தித்துக் கருத்தாடல் நடத்திப் பழகி தங்களது கொள்கை, இலட்சியப்பூர்வமான நட்புறவை வளர்க்க இருவருக்கும் வாய்ப்பு கிட்டாத நிலையிலும் கொள்கை உறவுகளாகவே பல காலமாக இருந்துள்ளனர்’ என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மையாகும்.

பாபா சாகேப் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய (“குரலற்றவர்களின் குரல்” என்ற பொருள்படும்) ‘மூக்நாயக்’ மராத்தி ஏட்டில் 1924இல் கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தினை தந்தை பெரியார் நடத்தியதை வரவேற்று எழுதியதோடு, அதன் பிறகு தாம் நடத்திய மகத் குளத்தில் தண்ணீர் எடுக்கும் அறப்போராட்டத்திற்கு முன்னோட்டத் தாக்கமாக ஆக்கிக் கொண்ட நிலை ஏற்பட்டது என்ற செய்தியை டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய தனஞ்செயன் கீர் அவர்கள் தம் நூலில் பதிவு செய்துள்ளார்.
அதன்பிறகு லாகூரில் நடைபெறவிருந்த ஜாட்-பட்-தோடக் மண்டல் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை தாங்க டாக்டர் அம்பேத்கரை அழைத்து, அவரது தலைமை உரை வரைவினை முன்கூட்டியே பெற்ற அச்சங்கத்தினர் அதன் சுட்டெரிக்கும் வெப்பம் மிகுந்த உண்மைகளைச் செரிமானம் செய்ய இயலாத நிலையில், சில பகுதிகளை நீக்கிடக் கோரினார். அதனை ஏற்க மறுத்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் – மாநாட்டின் தலைமை ஏற்கும் அழைப்பையும் நிராகரித்து விட்டார் (1932).

அதனை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் அந்த ஆங்கில உரையை வரவழைத்து, தமிழில் மொழியாக்கம் செய்து, “ஜாதியை ஒழிக்க வழி – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்” என்ற நூலை உருவாக்கி (விலை 4 அணா) வெளியிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
இதில் ஒரு முக்கியச் செய்தி, தமிழில் புத்தகமாக 1934இல் வெளி வருமுன்பே அதன் தமிழ் மொழியாக்கத்தைத் தொடர் கட்டுரைகளாக ‘குடிஅரசு’ வார ஏட்டில் (தந்தை பெரியார் நடத்தியது) வெளியிட்டு மக்களிடையே அக்கருத்துக்களைப் பரப்பினார்.
1940 வரை இருவருக்கும் நேரடி சந்திப்பு இல்லை. முதன்முதலில் தனது சகாக்களான பம்பாய்க்கு உடன் வந்திருந்த அறிஞர் அண்ணா, டி.ஏ.வி.நாதன், ‘சண்டே அப்சர்வர்’ (ஆங்கில வார ஏடு) பி.பாலசுப்பிரமணியன் ஆகியவர்களுடன் தந்தை பெரியார் 1940இல் தான் முதன்முதலில் நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்.
அதில் இரண்டு முறை கலந்து பேசினர். தாராவியில் ஊர்வலம், பொது நிகழ்ச்சி, உரையாடல்கள் இவைகள் எல்லாம் நிகழ்ந்துள்ளன!
(4.1.1940 முதல் பம்பாயில் தொடர்ந்த சந்திப்புகள் – நிகழ்வுகள் – பொதுக்கூட்ட உரைகளை “வடநாட்டில் பெரியார் – ஒரு சுற்றுப் பயணத் தொகுப்பு” நூலில் காணலாம்).

தமிழ்ச்சங்க இலக்கியங்களில் மன்னர் – புலவர் உறவுகள் பற்றிய ஒரு செய்தி உண்டு.
கோப்பெருஞ்சோழன் புலவர் பிசிராந்தையாரின் நட்பாக இருந்தாலும் – அவர்கள் போல நேரில் சந்திக்காமல் ‘வடக்கிருந்து’ மறைந்த கதையாகி விடாமல், வடக்கே தந்தை பெரியார் கொள்கை உரையாடியதுண்டு மகிழ்ச்சியோடு! புத்த மார்க்கத்தில் இணைவது பற்றி அம்பேத்கர் முக்கிய முடிவு எடுத்திருந்த நிலையில் – பர்மாவில் (மியான்மர்) உலகப் புத்தர் மாநாட்டில் 1954இல் தந்தை பெரியாரோடு கலந்து பேசி கருத்தாடல் செய்தார்கள் என்பது வரலாறு.

செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டிற்கு அண்ணல் அம்பேத்கர் வரவேற்பு – பாராட்டு – வாழ்த்துகள் கூறியதோடு நில்லாமல், மராத்திய மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் சிட்டிகெமான் (Chitigeman) என்ற ஊரில் சமாஜ் சமதா சங்கம் (Social Equality League) – சமூக சமத்துவ சங்கம் சார்பில் செங்கற்பட்டு மாநாட்டிற்கு மூன்று மாதங்கள் இடைவெளியில் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு என்ற மிகப் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டு அதற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தலைமை தாங்கி சுயமரியாதைக் கொள்கை, இயக்கம் பற்றி மிகவும் சிறப்பான ஒரு பேருரையாற்றியுள்ளார்.
அது தந்தை பெரியார் 1928இல் துவங்கி நடத்திய ‘ரிவோல்ட்’ (Revolt) ஆங்கில வார ஏட்டில் பதிவாகியுள்ளது.
26.5.1929இல் ஒரு சிறு பகுதியான கயர்வாடி ஸ்டேஷனில் டாக்டர் அம்பேத்கருக்கு வரவேற்பு தந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, பெண்கள் உள்பட 5000 பேர் அம்மாநாட்டில் கலந்துகொண்டு பலன் அடைந்தனர் என்ற செய்தியைத் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த பெரியாரின் ‘ரிவோல்ட்’ பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த மாநாட்டை டாக்டர் அம்பேத்கரின் ‘பகிஷ்கிரித் பாரத்’ மராத்திய ஏடு பதிவு செய்துள்ளது. என்னே கொள்கை உணர்வு!
பின்னாட்களில் காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஒய்.பி.சவான் அவர்களை ஒருமுறை டில்லியில் தமிழ்நாடு அமைச்சர் க.ராசாராம் அவர்களுடன் சென்று சந்தித்து உரையாடும்போது, என்னை ஒய்.பி.சவானிடம் “தந்தை பெரியாரின் இயக்கப் பொதுச் செயலாளர் – ‘விடுதலை’ ஆசிரியர்” என்று க.ராசாராம் அறிமுகப்படுத்தினார்.
அப்போது உடனே திரு.ஒய்.பி.சவான் அவர்கள் வணக்கம் தெரிவித்து வாஞ்சையோடு “பெரியவர் பெரியார் ‘Grand old leader Periyar’ எப்படி இருக்கிறார்? நலமாக உள்ளாரா?” என்று விசாரித்துக் கைகுலுக்கிய பிறகு, இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியைக் கூறினார்.
“அவருடைய சுயமரியாதை இயக்கம் எங்கள் பகுதியில் மாநாடு நடத்தி பெரும் அள வில் ஆதரவு பெற்றது. அந்த மாநாட்டில் ஒரு தொண்டராக வாலண்டியர் (Volunteer) ஆக இருந்து பணியாற்றினேன்” என்று பெருமகிழ்ச்சி – பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே!

மகாராட்டிர நாசிக்கில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையின் தமிழ் மொழியாக்கத்தினை நாளை படியுங்கள்.
அதே ஆண்டில் 1929இல்தான் மலேசியா, சிங்கப்பூர் நாட்டிற்குப் பயணமாக்கி சுயமரியாதை இயக்கத்தினை வலுப்படுத்தி – அகில உலக பன் னாட்டு அமைப்பாக தந்தை பெரியார் ஆக்கினார்.
அய்யாவுடன் அப்போது அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையாரும் – முக்கிய தோழர்களும் சென்றனர்.
(தொடரும்…)

 

சுயமரியாதை இயக்கத்தின் தேவை பற்றி அண்ணல் அம்பேத்கரின் கட்டுரை
சுயமரியாதை இயக்கத்தின் பாய்ச்சல்
மதராஸ் மாகாணத்தின் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரி 17 அன்று தொடங்கியது.
மதராசின் சட்டமன்ற உறுப்பினர் எம்.கிருஷ்ணன் நாயர், முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன், சுகாதாரத் துறை அமைச்சர் திரு.முத்தையா முதலியார், சர் பி.டி.ராஜன், நண்பர் ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட தலைவர்கள் குழுமி இருந்தனர்,
சர். பி.டி.ராஜன் சுயமரியாதை இயக்கக் கொடியை ஏற்றிவைத்தார்,
மாநாட்டைத் தொடங்கி வைத்த டாக்டர் சுப்பராயன், ”சமூகத்தில் சுயமரியாதை உணர்வு இல்லாமல் அரசியலில் சுயமரியாதை கிடைக்காது. ஜாதிப் பாகுபாடு வேரூன்றிய சமூகத்தில் இருந்து, ஜனநாயகத்திற்கு உகந்த ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவது ஒருபோதும் சாத்தியமில்லை” என்று கூறினார்.
இந்த சுயமரியாதை இயக்கம் என்பது சமூக சமத்துவத்திற்கான இயக்கம் ஆகும், சுயமரியாதை என்பது ஆணவம் அல்ல; மற்றவர்களை இழிவாகப் பார்க்கும் போக்கு அல்ல. சுயமரியாதை என்பது உயர்ந்த சிந்தனை. நாங்கள் மனிதர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் உள்ளன. அதைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ள முழு வாய்ப்பு இருக்க வேண்டும். இப்படி உணர்வதே சுயமரியாதை. ஓர் உண்மையான சுயமரியாதைக்காரன் மற்றவர்களின் சுயமரியாதையையும் பாதுகாப்பவன் ஆவான். ஏனெனில், சுயமரியாதையின் மதிப்பை அவன் அறிவான்.
ஹிந்து சமுதாயத்தில் சுயமரியாதை ஒழிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஒரு ஜாதியை விட இன்னொரு ஜாதி தாழ்ந்தது; அவனை விட இன்னொருவன் தாழ்ந்தவன் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த தவறான கொள்கைகளைக் களைந்து ஹிந்து சமுதாயத்தில் உண்மையான ஒளியைப் பாய்ச்ச, சுயமரியாதை இயக்கம், சமாஜ் சம்தா சங், ஜாட்பட் தோடக் மண்டல் போன்ற இயக்கங்கள் தேவையானவயாகும்.

(1929 மார்ச் 1 – பகிஷ்கிரித் பாரத் இதழில்
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதியது)
ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுத்துகள்
மற்றும் பேச்சுகள் (மராத்தி) – தொகுதி – 20, பக்கம் 56

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *