சென்னை, ஜூலை 2 ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து சென்னையில் திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 6-ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத் துறை ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி காணொலி வாயிலாக நடந்தது. திமுக சட்டத் துறை தலைவர் ஆர்.விடுதலை முன்னிலையில், செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இவை நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றிவிடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 5-ஆம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது, ஜூலை 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசு அமல்படுத்தி யுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களையும் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கம், அரங்க கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.