வீ. குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
ஜி.டி.பி. என்றால் என்ன?
ஜி.டி.பி. (GDP) என்பது Gross Domestic Product என்பதன் ஆங்கில சொற்றொடரின் சுருக்கம் தான். ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று தமிழில் அறியப்பட்டாலும் “ஜிடிபி” என்று குறிப்பிடப்படுவது பரவலாக உள்ளது.
ஜிடிபி என்பது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் மதிப்பு மற்றும் வழங்கப்படும் சேவை களின் மதிப்பு இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படும் பணமதிப்பாகும். நாடு தழுவிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் இந்த ஜிடிபி ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படுகிறது. தற்பொழுது நாட்டின் கடந்த ஆண்டு ஜிடிபி (2023-2024) ரூ47.24 லட்சம் கோடியாகும். விகித அளவில் நாட்டின் ஜிடிபி 7 விழுக்காடு ஆகும். உலகில் ஜிடிபி அளவில் அய்ந்தாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
இந்த விகிதத்தில் கணக்கிடுவதற்கு அடிப்படைக் கணக்கீடூ ஆண்டு (base year) என ஒரு முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு அடிப்படைக் கணக்கீடு ஆண்டு 2011-2012 ஆகும். இதன் பொருள், 2011-2012 ஆம் ஆண்டில் நிலவிய ஜிடிபி நிலையிலிருந்து தேவைப்படும் ஆண்டில் எவ்வளவு விகிதம் உயர்ந்துள்ளது எனக் கணக்கிடப்படும். இந்த அடிப்படை ஆண்டு 2020-2021 என மாற்றி அமைத்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த அடிப் படை ஆண்டு ஜிடிபிக்கு மட்டுமல்லாமல், நாடு தழுவிய அளவில் கணக்கிடப்படும் பல்வேறு அளவீடு களுக்குப் (Parameters) பயன்படுத்தப்படும். மேலும் ஜிடிபி கணக்கிடப்படும் வழிமுறையில் மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும். மோடியின் ஒன்றிய அரசாட்சியில் ஜிடிபி கணக்கிடப்படும் வழிமுறை மாற்றி யமைக்கப்பட்டுள்ளதால்தான் வளர்ச்சி போக்கிலான சில புள்ளி விவரங்களை அளிக்க முடிந்தது என்ற விமர்சனமும் உண்டு.
ஜி.டி.பி. – கணக்கீடு ஒப்பீட்டுப் பயன் என்ன?
துறைசார்ந்த செயல்பாடு, நிதி ஒதுக்கீடு ஆகிய வற்றை ஜிடிபி யின் விகித அளவிலேதான் கூறுவது வழக்கம். ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு துறையின் பங்களிப்பினை ஒப்பீட்டளவில் கணக்கிட்டு வெளி யிடுவது வழக்கம். இந்த ஒப்பீட்டு விகிதம் அதாவது ஜிடிபி யில் எத்தனை விழுக்காடு என்று அறிவிப்பதில், அந்தத் துறை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது – கவனிக் கப்பட வேண்டியது என்பது தெரிய வரும். அரசின் நிதிநிலை அறிக்கை (Budget) வெளியிடப்படும் காலங்களில் இந்த ஒப்பீட்டு விகிதம் முக்கியத்துவம் பெறும்.
எடுத்துக்காட்டாக, நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது கோத்தாரி குழு அறிக்கை காலம் (1964) முதல் பரிந்துரைக்கப்படுவதாகும். ஆனால் இதுநாள்வரை 6 விழுக்காடு ஒதுக்கீடு கல்வி வளர்ச்சிக்கு எந்த அரசும் ஒதுக்கவில்லை என்பது கல்வியின் மீது காட்டப்படும் உண்மையான ஈடுபாட்டை (?) காட்டுவதாக அமைகிறது.
நாட்டின் முக்கிய தொழில் விவசாயம் 60–70 விழுக்காடு மக்கள் விவசாயத்திலும், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் தான் ஈடுபட்டு வரு கிறார்கள். அப்படிப்பட்ட விவசாயத் துறையின் ஜிடிபி அளவிலான விகிதம் 17.59 விழுக்காடுதான். வெகுமக்கள் சார்ந்துள்ள தொழிலை பலதளங்க ளிலும் வளப்படுத்தி ஜிடிபி-யில் விவசாயத்தின் பங்களிப்பு விகிதம் உயர்வடைய வேண்டும் என்பதே நாட்டு மக்கள் நலன் சார்ந்த செயலாக இருக்க முடியும். ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் அதன் வளர்ச்சி விவசாயம் சார்ந்த நிலையினை நம்பி இருக்கக் கூடியது என உலக நிதி ஆளுமை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. விவசாயத் துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு இல்லாததற்கு உலக நிதி ஆளு மைகளின் நிர்ப்பந்தமும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
நாட்டின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் வழங்கப்ப டும் சேவைகளின் ஏற்றுமதி ஜிடிபி யில் 23 விழுக்காடு (2021-2022) ஆகும். இதில் பல்துறை சார்ந்த உற்பத்திப் பொருட்களும், சேவைகளும் அடங்கும்; விவசாயம் உள்ளிட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு என்பது அன்னியச் செலாவணி கையிருப்பினை அதிகரிக்க வழிகோலும். அதற்காக பல்வேறு ஊக்குவிப்பு மானியங்கள் உற்பத்தியாளர்களுக்கும், சேவை நிறுவனங்களுக்கும் அரசு அளித்து வருகிறது. அந்த அளவிற்கு நம்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப கவனிக்கப்பட வேண்டிய துறைகள் சார்ந்த நிதி ஒதுக்கீடு, செலவினங்கள் மட்டுப்படவே செய்யும். பிற துறைகள் மட்டுப்படுவதால் வரவிருக்கும் அன்னிய செலாவணியின் அளவு, அந்தந்த துறைகளுக்கு உரிய நிதி இழப்பீடு ஒதுக்கப்படுகிறதா? ஒதுக்கப்படும் நிதி உரிய வகையில் பயன் அளிக்கிறதா? என்பது ஆய்வுக்குரியது.
விவசாய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக சாகுபடி விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price) ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். பஞ்சாப், அரியானா மாநில விவசாயப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை சாகுபடிப்–பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்தான். அறிவிக்கப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்திட அரசு முன்வர வேண்டும். ஏற்றுமதி அதிகரிப்பு என்பதன் பெயரால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு விளைபொருள்களை ஏற்றுமதி செய்து, சில நேரங்களில் விலைவாசியை நிலைப்படுத்துவ தற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமான விலைக்கு விவசாய விளைபொருளை இறக்குமதி செய்திடும் அலங்கோலமும் நடை பெறும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தத்தான் இந்த ஏற்றுமதி, இறக்குமதி நிலைமைகள் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்? இப்படி பொருளாதாரச் சூழலில் ஒன்றைக் கட்டுப்படுத்த அதன் விளைவு பல்வேறு தாக்கங்கள், விரும்பத்தகாத தாக்கங்களை; விரும்பத்தகாதது என முன்னரே அறிந்திடும், தாக்கங்களை ஏற்படுத்திடும். எனவேதான் பொரு ளாதாரச் சூழலை தீய சுழற்சி (vicious cycle) எனவும் குறிப்பிடுவது உண்டு.
எப்படி இருந்த போதிலும், “நம் நாட்டின் ஜிடிபி கணக்கிடும் வழிமுறை, புள்ளி விவரங்கள் உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, ஒரு சரியான வழிமுறைதான்; புள்ளி விவரங்கள் சரியானவைதான்” என பொருளாதார அறிஞரான, நாட்டின் 16-ஆவது நிதி ஆணையத்தின் (16th Financial Commission) தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார். மேலும் சரியான புள்ளி விவரங்கள் எனக் கண்டறியும் வழிமுறைகள் தொடரட்டும். உண்மை நிலை அறியப்பட்டால்தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உரிய வகையில் திட்டமிட முடியும்.