திருவண்ணாமலை, ஜூலை 2– திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 2017-2018ஆம் நிதி ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டும் திட்டத்தில் பயனா ளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பி.டி.ஓ.க்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக் குப் பதிவு செய்துள்ளனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, அரசு மானியத்தில் வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்து, வீடு கட்டி முடிக்கும் வரையிலான பணிகளை கண்காணித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 2017–-2018ஆம் நிதி ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக, அப்போதைய ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப் பார் வேல்முருகன், புகார் மனு மீது விசாரணை நடத்தி, 30.6.2024 அன்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.