அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆளுநர் ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சட்ட அத்துமீறலுக்கு அளவே இல்லையா?

* குற்றச்சாட்டு நிரூபணமான சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்குப் பதவி நீட்டிப்பு சட்டப் படியும், மரபுப்படியும் தவறானதே! 

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புத் தந்திருப்பது – தான்தோன்றித்தனமும், சட்ட மீறலும், மரபு மீறலுமாகும். போட்டி ஆட்சி நடத்த முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் தனது அரசியல் சட்ட அடாவடித்தன ஆளுமையைத் தொடங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசிற்கு ஒரு போட்டி அரசாங்கத்தை (Parallel Government) நடத்த மீண்டும் தொடங்கிவிட்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,தானடித்த மூப்பாக செயல்படும் முறை
18 ஆவது பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வின் ‘400 இடங்கள் கனவு’ பலிக்காமல் வெறும் 240 தொகுதிகள் மட்டுமே பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பதவியேற்ற அரசு, மக்கள் தீர்ப்பின்படி (Mandate) ஒரு தோல்வியுற்ற அரசு – ஆந்திராவின் தெலுங்குதேசம், பீகாரின் அய்க்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள், சில சுயேச்சைகளின் (Crutches) உதவிகளுடன்தான் ஒன்றியத்தில் ‘‘ஒரு மைனாரிட்டி அரசு” உள்ளது என்ற சுவரெழுத்தினை ஏனோ இன்னமும் தமிழ்நாடு ஆளுநராக, தமிழ்நாடு அரசின் அங்கம் என்ற நிலையில் உள்ளவராக இருக்கும் நிலையில், அதை வசதியாக மறந்துவிட்டு, ‘தானடித்த மூப்பாக’வே மீண்டும் நடக்கத் தொடங்கிவிட்டது – மீண்டும் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பதை நாட்டிற்குப் புலப்படுத்தும் பகிரங்கச் செய்தியாகும்.இது, வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு – பதவி நீட்டிப்பா?
எடுத்துக்காட்டாக, சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகம் பெரியார் பல்கலைக் கழகம்.
அதன் துணைவேந்தராக உள்ளவர்மீது குற்றச்சாட்டுகளை, அதில் பணிபுரியும் ஊழியர்களும், மாணவர்களும், பொதுநலத் தலைவர்கள் பலரும் எழுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை திரு.பழனிச்சாமி அய்.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்து, அந்தக் குழு விசாரணை நடத்தியது. அதில், மேனாள் பதிவாளர் தங்கவேல், துணைவேந்தர் ஜெகநாதன்மீது ஊழல் குற்றச்சாட்டுப் புகார் நிரூபணமானதாக, அரசுக்கு அக்குழு அறிக்கை அளித்தது.

அவரது வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற நிலையில், துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30 இல் முடிவடைந்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு ஆளுநர், அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்புத் தந்துள்ளது – பச்சையான அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல; தான் பொறுப்பில் உள்ள அரசாங்கத்திற்கு எதிரான (Article 163-இன்படி) சட்ட விரோதச் செயலே!
அவர்மீது விசாரணை நடக்கும்போதே தேவையின்றி ஆளுநர் அப்பல்கலைக் கழகத்திற்கு திடீர் ‘விசிட்‘ செய்து, அவரை அழைத்துப் பேசியதே அரசியல் அத்துமீறலாகும்!
அதன் பிறகு சில நாள்களுக்குமுன் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, உயர்கல்வித் துறை அமைச்சர் சொன்ன பதிலுக்கு நேர் எதிர்ப்பாக ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்‘ போட்ட கதையாக – வீண் வம்பை அரசியல் விவகாரமாக்கியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

மரபுமும் – சட்டமும் என்ன சொல்லுகிறது?
புதிய துணைவேந்தருக்குரிய நியமன சர்ச் கமிட்டி, தேடல் குழு, மற்ற குழுக்கள்பற்றிக் கவலைப்படாமல் ஆளுநர், ஜெகநாதனுக்குப் பதவி நீட்டிப்பு என்பது எப்படி சட்டப்படி சரியானது?
பொதுவாக மற்ற பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தால், ஒரு தனி ஆட்சிக் குழுவைத்தான் உருவாக்கி, மறு துணைவேந்தர் பொறுப்பேற்கும் வரை செய்வது வழமை மட்டுமல்ல – சட்டப்படியான நிகழ்வுகளும்கூட!

ஆளுநரின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளித் தேவை!
தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை உருவாக்கத்தானே, அதனிடம் சம்பளம் பெறும் ஆளுநர், தான் அந்த அரசாங்கத்தின் அரசமைப்புச் சட்டப்படிக்கான அங்கம் என்பதை அலட்சியப்படுத்தி, இப்படி அடாவடித்தன போட்டி அரசு நடத்தலாமா?
உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி வழக்கில், நீதிபதிகள் கூறியது ஆளுநருக்கு மறந்துவிட்டதா?
தமிழ்நாடு அரசும், உயர்கல்வித் துறையும் சட்டப்படி இந்த அடாவடித்தனத்திற்கும், ஆணவச் செருக்கிற்கும் முற்றுப்புள்ளி வைக்க, உரிய நடவடிக்கைகளை உடனடியாக காலதாமதமின்றி எடுக்கவேண்டும்!
தந்தை பெரியார் பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில், அதுவும் சேலத்தில் இப்படி ஓர் அரசமைப்புச் சட்ட அவப்பிரயோகமா? அதை அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா?
அனைத்துக் கட்சிகளும் இதில் ஒருங்கிணைந்து இந்த அரசியல் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டியது அவசரம், அவசியம்!

 

தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.7.2024

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *