சென்னை, ஜூலை 1 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (அய்டிஅய்) மற்றும் 305 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை அய்டிஅய்யில் இன்று (ஜூலை.1) முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055689 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உலவும் 52 மருந்துகள் தரமற்றவை!
சென்னை, ஜூலை 1 சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளையும் ஒன்றிய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.
அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 52 மருந்துகள் தரமற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விவரங்கள் ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் (cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியம் இல்லையாம்!
மது விற்பனையை தனியாரிடம் வழங்க வேண்டுமாம்!
பிஜேபி அண்ணாமலை புது கரடி
கோவை, ஜூலை 1- தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என் றும், மதுவிற்பனையை தனியாரிடம் வழங்க வேண்டும் என்றும் கோவையில் அண்ணாமலை கூறினார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியின் செயல்பாடுகள் குறித்து பா.ஜனதா ஆய்வு கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (30.6.2024) நடைபெற்றது. கூட்டத்துக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா கட்சியை தயார்படுத்த ஆய்வு கூட்டம் நடந்து வருகிறது. சட்டமன்றத்தில் டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் கூறியது என்னை பொறுத்தவரை உண்மை. ஒரு அமைச்சரே தமிழ்நாடு அரசில் குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இதை நகைச்சுவையாக கடந்து செல்லாமல் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கோவை ஈஷா யோகா மய்யம், யானைகள் வழித்தடத்தில் உள்ளதாக கூறி தி.மு.க. அரசு பிரச்சினை செய்ய பார்க்கிறது. ஆனால் விதிமீறல் இல்லை என்று ஈஷா யோகா மய்ய நிர்வாகம் ஆதாரத்துடன் கூறிவிட்டது.
மதுவிலக்கு சாத்தியம் இல்லை
தமிழ்நாட்டில் 100 சதவீத மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை.படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை குறைத்து கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். டாஸ்மாக் என்ற போர்வையில் தெருத்தெருவாக அரசே மது விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளை முறைப்படுத்த நடவடிக்கை தேவை.
தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மது விற்பனை குறையும். இதனால் தி.மு.க.வை சார்ந்து இருக்கும் மது தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படும். இதனால் தான் கள்ளுக்கடைகளை திறக்க அரசு அனுமதி மறுத்து வருகிறது.
-இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.