திருமதி. சோனியா காந்தி
மாநிலங்களவை உறுப்பினர்,
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர்
2024 ஜூன் 4 ஆம் நாளன்று நம் நாட்டு வாக்காளப் பெருமக்களின் தீர்ப்பு தெளிவாகவும் உறுதியாகவும் வெளிவந்தது. தேர்தல் பரப்புரைகளின் போது தன்னை தெய்வீகப் பண்பு நிறைந்தவராக சொல்லிக் கொண்டிருந்த ஒரு பிரதமர் அடைந்த மிகப்பெரிய தோல்வியை மக்களின் தீர்ப்பு பறைசாற்றியது. அது ஒரு தனிமனிதனின் தோல்வி மட்டுமல்ல, அரசியல் சார்ந்த தார்மீகத் தோல்வியும் கூட. பாசாங்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தீர்ப்பு அது. பிரிவினைவாத அரசியலை அடியோடு புறக்கணித்த தீர்ப்பு அது. திரு. நரேந்திர மோடியின் ஆட்சி முறையே வெறுப்பிலும், முரண்பாடுகளிலும் மூழ்கிக் கிடந்ததை மக்கள் அறிவார்கள். மக்களின் தீர்ப்பு அத்தகைய ஆட்சியை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டதை தேர்தல் முடிவுகள் உணர்த்தி விட்டன.
அனுசரணை மறுப்பு
இருப்பினும் எந்த மாற்றமும் நிகழாதது போல் பிரதமர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கருத்தொருமிப்பை ஆதரிப்பது போல் ஒருபுறம் நடந்து கொண்டே மறுபுறம் சண்டை சச்சரவுகளையும், மோதல்களையுமே தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகளை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வாக்காளர்களின் தீர்ப்பை அவர் புரிந்துக் கொண்டதாகவும் தோன்றவில்லை. லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் ‘அவருக்கு கூற விரும்பிய செய்தியை அவர் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றே நினைக்கத் தோன்றுகிறது. 18வது மக்களவையின் தொடக்கமே திருப்திகரமாக இல்லாமல் போனது வேதனைக்குரிய விஷயம்தான். பிரதமரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்தோம். அது நிறைவேறவில்லை. பரஸ்பர கருத்தொற்றுமை ஏற்படும்; ஒருவரையொருவர் மதிக்கும் நிலை உருவாகும் என்று நாம் நினைத்தபடி நடக்கவில்லை. நட்பும், நல்லிணக்கமும் ஏற்படா விட்டாலும், அனுசரணையாவது ஓரளவுக்கு இருக்கக்கூடும் என்ற நம் எதிர்பார்ப்பும் வெறும் நப்பாசையாகி விட்டது. நம் கருத்துகளை செவிமடுக்கவும் இவர்கள் தயாராக இல்லை என்கிற அவலநிலையில் தோழமை உணர்வையும், இணக்கத்தையும் எப்படி எதிர்பார்ப்பது?
சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஒத்திசைவு தேவை என்று கோரிக்கை விடுத்தார் பிரதமர். அவருடைய தூதர்கள் மூலம் இந்த கோரிக்கை வெளிப்பட்ட போது இண்டியா கூட்டணியினர் பிரதமரிடம் கூறியது என்னவென்று வாசகர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
எங்கள் பதில் நேரடியாகவும், சுருக்கமாகவும் இப்படித்தான் இருந்தது:
“நாங்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவளிப்போம். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொன்று தொட்டு நீண்டகாலமாக கடைப்பிடிக்கப் பட்டு வரும் வழக்கம் அது.” எங்களுடைய இந்த நியாயமான கோரிக்கை அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போயிற்று. இந்த ஆட்சியாளர்கள் 17வது மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை நிரப்பாமலேயே வைத்திருந்ததை வாசகர்கள் நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்ப்பது நலம். அரசமைப்புச் சட்ட விதிமீறல் அப்போதே நிகழ்ந்துள்ளது.
நம் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் பழைய குப்பையைக் கிளறியது போல் பிரதமரும் அவரது கட்சியினரும் அவசரக்காலச் சட்டமான எமர்ஜென்ஸியைப் பற்றி பேச ஆரம்பித்தனர். வியப்புக்குரிய விஷயம் சபாநாயகரும் இதில் கலந்து கொண்டதுதான். அரசியல் சார்ந்த விமரிசனங்கள் அவையில் நிகழும் போது விலகி இருக்கவேண்டும் சபாநாயகர் என்பது மரபு. பாரபட்சம் எதுவுமின்றி அவர் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதே விதி. அதை மீறி நடந்து கொண்டார் சபாநாயகர்.
பிரதமரும் அவரது கட்சியினரும் இப்படி அன்றைய எமர்ஜென்சியை விமர்சித்ததே அரசமைப்புச் சட்டம் புறக்கணிக்கப்பட்ட கொடுமையிலிருந்து எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பும் செயலாகவே இருந்தது. அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அடிப்படை கோட்பாடுகள் மீறப்படுவதும், அவமதிக்கப்படுவதும் நாடாளுமன்றத்தின் சீரான நடவடிக்கைகளை பாதிக்கத்தான் செய்யும். பல்வேறு துறைகளும், நிறுவனங்களும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே நாட்டில் இயங்கி வருகின்றன. இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளால் நாடாளுமன்றத்தில் குழப்பங்களும், இடையூறுகளும் ஏற்படுவதில் வியப்பில்லை. மக்களவையில் அமைதியின்மை ஏற்படத்தான் செய்யும். மீண்டும் பதவிக்கு வந்துள்ள பிரதமருக்கு இது அழகல்ல. ஆரம்ப நாட்களிலேயே மக்களவையில் இந்த அவலநிலை ஏற்படலாமா?
1977 மார்ச் மாதமே நம் நாட்டு மக்கள் எமர்ஜென்ஸிக்கு எதிராக தீர்ப்பளித்து அதை முடிவுற வைத்தனர் என்பது வரலாற்று உண்மை. தயக்கம் எதுவுமின்றி, மறுப்பு எதுவுமின்றி மக்களின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் எமர்ஜென்சியை கொண்டுவந்த அதே கட்சி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தது. அந்த பெரும்பான்மை பலத்தை மோடியும், அவரது கட்சியினரும் இதுவரை பெற்றதில்லை. இதுவும் ஒரு வரலாற்று உண்மையே.
விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்போமா? நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியும் அதனுள்ளும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. அதைப்பற்றி விவாதம் நடத்தக் கோரிய 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக அவையிலிருந்து நீக்கப்பட்டனர். இத்தகைய நிகழ்வு சற்றும் எதிர்பார்க்கப்படாத; முன்பு எப்போதும் நடைபெற்றிராத நிகழ்வாகும். மிகப்பெரிய கொடுமை அவர்கள் நீக்கப்பட்டது. அவர்கள் வெளியேறியதைச் சாதகமாக்கிக் கொண்டு மூன்று (கிரிமினல்) குற்றவியல் நீதி சார்ந்த சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொண்டார்கள். இதைப்பற்றி முன்னதாக எந்த விவாதமும் நடைபெறவில்லை. இந்த மூன்று சட்டங்கள் ஏற்புடையவை அல்ல என்று பல சட்ட வல்லுநர்கள் மற்றும் பல அறிஞர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். நாடாளுமன்றம் அதுபற்றி முழுமையாக ஆராய்ந்து விவாதித்து ஏற்றுக் கொள்ளும்வரை அந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றி விடாமல் நிறுத்தி வைத்திருக்கலாம் அல்லவா? அப்படித்தானே நாடாளுமன்றத்தில் நடப்பது வழக்கம்? 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரையாவது காத்திருந்தார்களா? அதுவும் இல்லை. திட்டமிட்டு அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொண்டார்கள்.
வனங்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்டங்களில் சென்ற ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் இதனால் பெரும் அமளியும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டன. பல எதிர்ப்புகளையும் மீறி உயிரியல் சார்ந்த சில சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. சுற்றுச்சூழலியல் மற்றும் மானுட வாழ்வியல் சார்ந்த பேரிடர்களும் நிகழலாம் என்றே நிகோபார் செயல் திட்டம் கூட நம்மை அச்சுறுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் முறைப்படி விவாதங்கள் நடத்தி பிரதமர் பரிசீலிக்க வேண்டாமா? கருத்தொற்றுமை அவசியம் என்று வலியுறுத்திவரும் பிரதமர் செயலில் அதைக் காண்பிக்க வேண்டாமா? உண்மையிலேயே ஒத்திசைவில் அக்கறை உள்ளதா அவருக்கு? சட்டங்கள் நிறைவேற்ற அனைவரின் ஒப்புதலும் அவசியம் என்பதை உணர்ந்து அவர் இனியாவது நடந்துக் கொள்வாரா?
‘நீட்’ குளறுபடிகளாலும், முறைகேடுகளாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வு தடம் புரண்டு போய்விட்டது. பாதிப்பு அதிகமல்ல; முறைகேடுகளும் குறைவுதான் என்பதே ஒன்றியக் கல்வி அமைச்சரின் பதில். “தேர்வுகள் பற்றிய விவாதம்” (பரீகஷா பே சர்ச்சா) என்று அடிக்கடி கூறிவந்தார் பிரதமர். கேள்வித்தாள்கள் கசிவு, மதிப்பெண் குளறுபடி என்று பல முறைகேடுகளால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் பிரதமரோ மௌனம் சாதித்து வருகிறார். உயர் மட்டக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளும் உள்ளன. இருந்தாலும் NCERT, UGC போன்ற அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எப்படி தரம் தாழ்ந்துவிட்டன என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பல பல்கலைக்கழகங்களும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதைப் பற்றி அக்கறையுடன் ஆராயாத அமைப்புகளும், நிறுவனங்களும் இருந்து என்ன பயன்?
பிரதமர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தான அலட்சியம்!
இவை போதாதென்று நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் மீது நடைபெறும் தாக்குதல்களும் இன்னொரு கொடுமை. அவர்கள் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான் உண்மை. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வீடுகள் புல்டோஸர்களால் இடித்துத் தள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பி இந்த அக்கிரமம் நடந்து வருகிறது. முறைப்படி அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை. விதிகள் மீறப்படுகின்றன. நிரபராதிகள் ஒட்டுமொத்தமாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் அள்ளி வீசாத பொய்களா? எத்தனை எத்தனை உத்தரவாதங்கள்…….. வாக்குறுதிகள்! எனவே இத்தகைய கொடுமைகள் நிகழ்வதில் வியப்பேதுமில்லை! பிரதமரின் பிரிவினைவாத பேச்சையும், யதேச்சதிகார நடவடிக்கைகளையும் நினைவு கூர்ந்துப் பார்க்கும்போது இன்றைய அவலநிலை நமக்கு வியப்பளிக்கவில்லை.
வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தேர்தல் தோல்வி பயம் பிரதமரைப் பிடித்து வதைத்ததை நாம் அறிவோம். இந்தப் பயம் அவரை நிறைய பேச வைத்தது. பொய்யான வாக்குறுதிகளை தர வைத்தது. தன் பதவிக்குரிய கவுரவம் பற்றி சிறிதும் சிந்திக்காமல் பலர் மீது புழுதிவாரி இறைத்து மேடைகளில் அவரை முழங்க வைத்தது அந்த பயம். கண்ணியக்குறைவான அவருடைய பல விமர்சனங்கள் அவர் வகித்த பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதையும் அவர் உணரவில்லை.
2022 பிப்ரவரியில் பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் கணிசமான பெரும்பான்மை பெற்றன. பதினைந்தே மாதங்களில் மணிப்பூர் மாநிலமே கொழுந்து விட்டு எரிந்தது. எரிய விட்டார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் எரிந்து சாம்பலானார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அடைக்கலம் தேடி எங்கெங்கோ அலைந்தனர். சமூகத்தில் அமைதி குலைந்தது. பதட்டமான மாநிலமாகவே இருந்துள்ள மணிப்பூர் மாநிலமே சிதைந்து சின்னாபின்னமாயிற்று. இவ்வளவு நடந்தும் அங்கு சென்று பார்வையிட பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. அங்குள்ள தலைவர்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்த்துப் பேசவே அவர் விரும்பவில்லை. இறுமாப்புடன் அவர் இறுதிவரை மணிப்பூருக்குப் போகாமலே இருந்தார். அதற்குள் 18வது மக்களவை தேர்தலும் ஏழு கட்டங்களில் நடந்தே முடிந்து விட்டது.
மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் மோடியின் பா.ஜ.க. தோல்வியுற்றதில் வியப்பில்லை. இது மோடியை பாதித்ததாகவும் தெரியவில்லை. மணிப்பூர் கலவரத்தை அவர் பொருட்படுத்தவே இல்லை. அவரிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இன்றுவரை ஒரு வார்த்தை கூட வெளிப்படவில்லை!
40 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் தன் தரத்தையே தாழ்த்திக்கொண்டார். அவருடைய உரைகளில் வார்த்தைகள் அவர் வகித்த உயர்ந்த பதவிக்கு இழுக்கையையே தேடித்தந்தன. நம் சமூகப் பட்டாடையில் ஏற்பட்ட மிகப்பெரிய கிழிசலுக்கு அவருடைய நிர்வாகச் சீர்கேடே காரணம். 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று அவர் முழங்கினார். “சப்கா சாத்… சப்கா விகாஸ்” (மக்களோடு நான்…… மக்களின் வளர்ச்சிக்காக நான்) என்றெல்லாம் உரையாற்றினார். கோடிக்கணக்கான நம் மக்களுக்கு அதைக்கேட்டு கேட்டு புளித்தே போயிருக்கும். “போதுமய்யா போதும்! ஆளை விடுங்கள்!” என்று சொல்லாமல் சொல்லி தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டார்கள்.
இந்தியாவின் குரலை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கும்:
மோதல்களுக்கும், சச்சரவுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் தெளிவாகக் கூறிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆக்கப்பூர்வமான செயல்களை எதிர்பார்ப்பதாக கூறி யுள்ளார்கள். பாரபட்சமில்லாமல், மக்கள் நலனுக்காக பாடுபடும் நேர்மையான ஆட்சியாக இருந்தாலே போதும் என்கின்றனர் எதிர்க்கட்சியினர். பிரதமரும் அவருடைய ஒன்றிய அரசும் நேர்மறையான நேர்மையான ஆட்சியை வழங்கும் என்பதே நம் நம்பிக்கை. ஆட்சியின் துவக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டாலும் நாம் நம்பிக்கை இழக்காமல் எல்லாவற்றையும் சீரமைப்போம். நாடாளுமன்றம் செவ்வனே இயங்க வழி வகுப்போம். இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக எங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்களுடைய குரல் செவிமடுக்கப்பட நாங்கள் பாடுபடுவோம். மக்களின் குறைகள் அனைத்தையும் அவர்கள் சார்பில் தெரியப்படுத்தி அவைகளைத் தீர்க்க தக்க நடவடிக்கை எடுப்போம். எங்கள் ஜனநாயகக் கடமைகளை நாங்கள் சிறப்பாக ஆற்றிட எங்கள் கரங்களை பலப்படுத்துமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
(‘தி இந்து’ நாளிதழ் – 29.06.2024)
தமிழில்: எம்.ஆர். மனோகர்