குறைந்த உப்பை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் சென்னையில் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 1- குறைந்த உப்பு உணவை எடுத்துக் கொள்ள நாம் பழக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை, சென்னை அய்அய்டியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்’ ஆகியவை சார்பில் குறைந்த உப்பு உணவை எடுத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயிலரங்கம் சென்னை அய்அய்டி வளாகத்தில் நேற்று (30.6.2024) நடைபெற்றது.

அதிக உப்பை உட்கொள்வதற்கு எதிராக ஒன்றாக சேர்ந்து போராடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேக் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவுகள் பதிக்கப்பட்ட லேபிள்களின் அவசியம் குறித்தும், இதில் சட்டபூர்வமான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்டவை தொடர்பாகவும் பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் கலந்துகொண்டு பயிலரங்கை தொடங்கி வைத்தார். மேலும் உணவில் உப்பை குறைப்பது குறித்து விழிப்புணர்வை பரப்பும் வகையிலான புத்தகம் மற்றும் பதாகைகளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

“குறைந்த உப்பை எடுத்துக் கொள்வது என்பது ஒரு மருத்துவ சவாலாக இல்லாமல் வணிக நிர்ணயமாக மாறி வருகிறது. ஒவ்வொரு உணவுகளிலும் உப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 8 கிராம் அளவு உப்பை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முடிந்த அளவு குறைந்த அளவு உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்ற முதலில் கடினமாக இருக்கும்.

ஆனால், பின்னர் நமக்கு எளிதாக பழகிவிடும். சில நாடுகளில் மக்களின் நலன் கருதி இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நாமும் இதை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ரிசால்வ் டூ சேவ் லைவ்ஸ்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அமித் ஷா, சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை தலைவர் ராஜன் ரவிச்சந்திரன், அறங்காவலர் ஆர்.சுந்தர், அய்அய்டி பேராசிரியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டவிரோதமாக வயிற்றில் இருக்கும்
சிசுவை கண்டறிந்த கும்பல் கைது

தருமபுரி, ஜூலை 1- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெக்குந்தி கிராமத்தில் மர்மக் கும்பல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்வதாக சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது.

இதை அடுத்து மருத்துவர் சாந்தி மற்றும் மருத்துவக் குழுவினர் மெர்குரி முத்தப்பா நகருக்கு சென்று லலிதா வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒரு அறையில் அனுமதி இன்றி ஸ்கேன் கருவி வைத்து கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து வந்ததும். ஸ்கேனில் பாலினம் செய்து சொல்வதற்கு ஒருவருக்கு ரூபாய் 13,000 கட்டணமாக பெற்று வருவது கண்டறியப் பட்டதுடன்.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் நான்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளதையும் கண்டுபிடித்தனர். இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட லலிதா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்கேன் சென்டரில் பணியாற்றிய முருகேசன், என்பவர் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்வது தெரியவந்தது.

அத்துடன் வீட்டில் வைத்திருந்த ஸ்கேன் கருவி மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் முருகேசன் என்பவர் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் கைதாகி மூன்று மாதமாக சிறையில் இருந்ததாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக பென்னகரம் காவல்துறையினர் நடராஜன், சின்னராஜ், இடைத்தரகர் லலிதா ஆகியோரை கைது செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *