ஆசிரியர் திறன் மேம்பாடு குறித்த ஆய்வறிக்கை வெளியீடு

2 Min Read

புதுடில்லி, ஜூன் 30- விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தர்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அய்க்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளிகளைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆரம்ப மற்றும் நடுநிலைநிலைப் பள்ளிகளில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பாட அறிவை அறிந்துகொள்ளும் வகையிலான ஆய்வு ஒன்றை கல்விக்கான முன்னெடுப்புகள் (இஅய்) என்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது. அந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கணிதப் பாடம் சார்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சித் தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் இந்த அறிக்கை பகிரப்பட்டது. இதுதொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தர்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்குப் பதிலளிக்க 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறினர்.

7-ஆம் வகுப்பு பாடங்களில் தடுமாற்றம்: நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதிலளித்தனர். ஆனால் 7-ஆம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடையளித்தனர்.
பயிற்சித் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதிலளித்தனர். 25 சதவீத கேள்விகளுக்கு எவ்வித தவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதிலளித்தனர். அதேபோல் வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கும் தவறான புரிதலோடு ஆசிரியர்கள் பதிலளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியர்கள் செய்தனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்த நிறுவனத்தின் துணை நிறுவனர் சிறீதர் ராஜகோபாலன் கூறியதாவது: பள்ளிப் பாடப் புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வெழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இதை நிறுத்திவிட்டு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் நமது கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான விழிப்புணர்வாக நாம் இந்த ஆய்வை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நவீன கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *