அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் பேரவை தலைவர் விளக்கம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 30 சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ஆம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பேரவைக்கூட்டத்தை 9 நாட்களுக்கு மட்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் 20-ஆம் தேதி பேரவைக் கூட்டம் தொடங்கியது. முதல் நாளில் பேரவையின் மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குவைத்தில் இறந்த இந்தியர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 21-ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளும் துறைதோறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வலியுறுத்தி ஜூன் 26-ஆம் தேதியும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி 28-ஆம் தேதியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.மேலும், மதுவிலக்கு சட்டத்தில் தண்டனை அதிகரிப்பு, காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மாநகராட்சிகள் உருவாக்கம் உட்பட 14 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதி நாளான நேற்று (29.6.2024) நிறைவேற்றப்பட்டன.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன், சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்ட நிலையில், பேரவையை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இந்த 9 நாள் கூட்டத்தொடரில், கள்ளக்குறிச்சி விவகாரத்தைஎழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்து வந்தனர். அதைத்தொடர்ந்து பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதேபோல், இந்த கூட்டத் தொடரில் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரம், அவரது ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றதுடன் முதலமைச்சரின் தீர்மானங்கள், விதி எண் 110-இன் கீழான அறிவிப்புகள் மீது தங்கள் கருத்துகளையும் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *