சுயமரியாதைத் திருமண முறை என்பது 90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது!
மணமக்களே, தன்னம்பிக்கையோடு வாழுங்கள்;
மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராதீர்கள்!
கடலூர், ஜூன் 30 நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள், நிறைய சம்பாதிக்கிறீர்கள். இன்னும் வாழ்வில் நீங்கள் உயருவீர்கள்; உங்களுடைய உழைப்பு உங்களை முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை. தன்னம்பிக்கையோடு வாழுங்கள்; மூடநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: தே.தமிழரசன் – கு.பிரியதர்ஷினி கடந்த 9.6.2024 அன்று காலை கடலூர், பாரதி சாலையில் உள்ள திவான்பகதூர் சுப்பராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில் த.தேசிங்ராஜன் – அருள்மொழி ஆகியோரது மகன் தே.தமிழரசன் அவர்களுக்கும், தி.குணசேகரன் – அனிதா ஆகியோரின் மூத்த மகள் கு.பிரியதர்ஷினி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் நகர செயலாளர் கோவிந்தராசன்!
தொடர்ந்து கடலூருக்குப் பெருமை என்னவென்றால், இங்கே புகழேந்தி அவர்களும் இருக்கிறார். கடலூர் இளவழுதி அவர்கள் – என்னுடைய மூத்த அண்ணார் கோவிந்தராசன் அவர்கள்தான், முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர்.
அன்றைக்கு ஒரு சாதாரண கொட்டகைதான் அமைப்பு ரீதியாக இருந்தது. இன்றைக்குப் பெரிய அளவிற்குக் கட்டடமாக வளர்த்திருக்கிறார்கள் தி.மு. கழகப் பொறுப்பாளர்கள் – அதற்கெல்லாம் அமைச்சர் அவர்கள்தான் காரணம்.
அமைச்சர் அவர்கள் ஒரு நிகழ்விற்கு வந்தார் என்றால், அவரிடம் கோரிக்கை வைக்காமல் அனுப்பக் கூடாது, குடிமக்கள் என்கிற முறையில்.
மணமக்கள் இரண்டு பேரும் உறுதி மொழி சொன்ன நேரத்தில், மணமகன் தமிழரசனுக்கு மதிப்பெண் போடுவதா? மணமகள் பிரியதர்ஷினிக்கு அதிக மதிப்பெண் போடுவதா? என்று கேட்டால், நடுநிலைமையிலிருந்து விருப்பு வெறுப்பில்லாமல் மதிப்பெண் போடவேண்டும் என்றால், மணமகள் பிரியதர்ஷினிக்குத்தான் போடவேண்டும். இதனால், மணமகன் தமிழரசன் கோபித்துக் கொள்ளமாட்டார்.
சுயமரியாதைத் திருமண முறை என்பது
90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது!
இங்கே வர்த்தக சங்கத் தலைவர் அய்யா துரைராசு அவர்களும் இருக்கிறார். அவர் வீட்டுத் திருமணத்தை சென்ற முறை வரும்பொழுது நடத்தி வைத்தோம். ‘‘சுயமரியாதைத் திருமணம் – தத்துவமும், வரலாறும்!” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றோம். சுயமரியாதைத் திருமண முறை என்பது 90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது. தி.மு.க.. ஆட்சிக்கு வந்ததும், அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முப்பெரும் சாதனைகளைச் செய்தார், ஓராண்டில்.
அண்ணாவின் முப்பெரும் சாதனை!
அந்த முப்பெரும் சாதனை என்னவென்றால்,
1. தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்.
2. சுயமரியாதைத் திருமணம் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்று சட்டமாக்கினார்.
3. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் – தமிழ் – ஆங்கிலம் என்று ஆக்கினார்.
சுயமரியாதைத் திருமணத்தைப்பற்றி இந்தியா முழுவதும் இன்றைக்குப் பேசுகிறார்கள்.
நீட் தேர்வினுடைய கொடுமைகளை தமிழ்நாடுதான் முதலில் எடுத்துச் சொன்னது -நாம்தான் முதலில் சொன்னோம்.
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், மத்தியப் பிரதேசத்திலிருந்து குரல் எழுகிறது – நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் என்று.
வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடுதான்!
எல்லாவற்றிலும் வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடு தான் – திராவிட ஆட்சிதான் – நம்முடைய திராவிட நாயகர்தான் – இப்படிப்பட்ட அமைச்சர்களுடைய கருத்தோட்டம்தான்.
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கேட்டார்கள்.
குணசேகரன் அவர்களையும், அனிதா அவர்களையும் என்னிடம் அறிமுகப்படுத்தும்பொழுது சொன்னேன். ‘‘பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறீர்கள்” என்று.
அதேபோன்று, நம்முடைய தேசிங்ராஜன் அவர்களு டைய மகள் – எங்களுடைய பேத்தி தமிழ்ச்செல்வி சிங்கப்பூரில் இருக்கிறார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர்தான். எல்லாம் தமிழ்ப் பெயராகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு வேறு பெயர் வைத்திருந்தார்கள் என்றால், நான் வெளியில் சென்ற பிறகு உள்ளே நுழைந்தி ருக்கலாம்.
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை
வைக்கவேண்டும்!
தமிழ்நாட்டில், பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும். தமிழில் பேசவேண்டும்.
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், தமிழ்ச்செல்வி அவர்களும் பணியில் இருக்கிறார்; அவருடைய வாழ்வி ணையரும் பணியில் இருக்கிறார். சிங்கப்பூரில் நிரந்தரக் குடிமகளாக இருக்கிறார். சிறிய வயதில் அவருக்குப் படிப்பை தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைக்கு சுயமாக நிற்கக்கூடிய அளவில் இருக்கிறார்.
இங்கே எல்லா பேரப் பிள்ளைகளும் இம்மணவிழாவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால், திராவிட இயக்கம் மிக முக்கியமானது. இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் அறிவாசான் தந்தை பெரியார்.
பெரியார் அவர்கள் பிறந்திருக்கவில்லையானால், நாங்கள் யாரும் படித்திருக்க முடியாது. நமக்கெல்லாம் படிப்பு வராது என்று இங்கே சொன்னார்கள்.
நாங்கள்தான் முதல் தலைமுறை பட்டதாரிகள்!
நம்முடைய அமைச்சர் அவர்கள் வழக்குரைஞர் – சட்டப் படிப்பு படித்தவர். அவருடைய அப்பாவோ, அவருடைய தாத்தாவோ என்ன படித்தார்கள்? நாங்கள்தான் முதல் தலைமுறை பட்டதாரிகள்.
எங்கள் பிள்ளைகள், எங்களைவிட அதிகமாகப் படித்திருக்கிறார்கள். எம்.பி.ஏ., என்றால், மாநில நிர்வாகத் துறை. பிஎச்.டி., படிப்பு படித்திருக்கிறார்கள்.
‘‘கடற்பாறையில் தாமரை மலருமா?’’
இவற்றையெல்லாம் ஒழிப்பதற்காகத்தான், தாமரை மலரவேண்டும், தாமரை மலரவேண்டும் என்று சொன்னார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது சொன்னார்கள், ‘‘கடற்பாறையில் தாமரை மலருமா?” என்று நாம் கேட்டோம். மலருவது என்பது பிறகு; முதலில், முளைக்கவே முளைக்காது.
மணமக்களுக்கு நான் அறிவுரை சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. நம்மைவிட அதிக விஷயம் தெரிந்த வர்கள் அவர்கள்.
அந்தக் காலம், அந்தக் காலத்தில் என்று சிலர் புரியாமல் சொல்வார்கள். ஆனால், இந்தக் காலம் எப்படி தெரியுமா? எந்தக் கேள்விகளுக்கும் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லிவிடுவார்கள். உலகமே அவர்களுடைய கைகளில் வைத்திருக்கும் செல்பேசியில் இருக்கிறது.
இப்பொழுது பார்த்தீர்களேயானால், ‘‘செயற்கை நுண்ணறிவு” என்று. அதைப் பார்த்தால், நமக்கே பயமாக இருக்கிறது. உருவத்தையே எப்படி மாற்றிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது.
1928 ஆம் ஆண்டு
ஆலப்பாக்கத்தில் தந்தை பெரியார்!
அன்றைக்கு 1928 ஆம் ஆண்டு துரைராஜ் அய்யா வீட்டுத் திருமணத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் ஆலப்பாக்கத்திற்கு வந்தார். இங்கே உள்ள மஞ்சள் மைதானத்தில்தான் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, மலம் நிரப்பிய முட்டையை வீசினார்கள். அதைப்பற்றி அவர் கவலைப்படாமல், போர்வையைப் போர்த்திக்கொண்டு நீண்ட நேரம் உரை யாற்றினார்.
திராவிட இயக்கம் திடீரென்று வரவில்லை!
இந்தத் தகவல்கள் எல்லாம் இன்றைய இளை ஞர்களுக்குத் தெரியவேண்டும். இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்று. இந்த இயக்கம் திடீரென்று வரவில்லை; மந்திரத்தினால் வரவில்லை. இந்த இயக்கத்திற்காகப் பல பேர் போராடியிருக்கிறார்கள். கருப்புச் சட்டை அணிந்துகொண்டு இங்கே நிற்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. நம்மாட்கள் படிக்கவேண்டும் என்று நினைத்தார்கள்; பெண்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். எங்கள் அண்ணார் உள்பட, எல்லா பெண்களும் படிக்கவேண்டும் என்றுதான் விரும்பி னார்கள்.
அந்த அளவிற்கு இன்றைக்கு ஒரு சமூக மாற்றம் வந்திருப்பதினால், பெண் பிள்ளைகள் நன்றாகப் படித்திருக்கிறார்கள்.
ஆகவே, அவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் பணத்தைச் சேருங்கள்; ஆனால், அதற்காக சேர்க்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சேருங்கள்.
பணம் எப்பொழுதுமே கருவிகளாகத்தான் இருக்கவேண்டும்!
பல பேர் பணத்தைச் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. பணம் எப்பொழுதுமே கருவிகளாகத்தான் இருக்கவேண்டும்.
விலை உயர்ந்த கார்களை வாங்கினாலும்கூட, கார் ஷெட்டில் அதனை விட்டுவிட்டுத்தான் வீட்டிற்குள் படுக்கச் செல்கிறீர்களே தவிர, இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியிருக்கிறோமே, அதனுள் படுத்துக் கொள்ள லாம் என்று யாரும் நினைப்பதில்லை.
ஒருபோதும் பணம் நமக்கு
எஜமானனாக மாறிவிடக் கூடாது!
ஆகவே, பணம் ஒரு கருவியாக இருக்கவேண்டுமே தவிர, அது நம்முடைய வேலைக்காரனாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒருபோதும் நமக்கு எஜமானனாக மாறிவிடக் கூடாது.
இப்படி நினைக்கின்ற வரையில், சமூகத்தில் நாம் உயர்ந்திருப்போம்.
இல்லறம் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தொண்டறம்.
பொதுக்காரியங்களுக்கு உதவி செய்யவேண்டும். படிப்பதற்கு, மருத்துவத்திற்கு உதவி செய்யவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டிய நேரத்தில் உதவவேண்டும்.
யார் யாருக்கு வசதி வாய்ப்புக் குறைவாக இருக்கிறதோ – தேவையானவர்களோ அவர்களுக்கெல்லாம் உதவவேண்டும். அப்படி பலர் உதவிதான் நாங்கள் எல்லாம் வந்திருக்கின்றோம்.
கடைசி காலம்வரையில்
மிதிவண்டியில்தான் சென்றார்!
எளிய நிலையில் இருந்த குடும்பம். அதேபோன்று, எங்கள் அண்ணன் கோவிந்தராசு அவர்களுடைய நிலை என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். கடைசி காலம்வரையில் மிதிவண்டியில்தான் சென்றார்.
அப்படி இருந்தாலும், கொள்கை மரியாதைக்குரியதாக இருக்கவேண்டிய காரணம் என்ன?
நாணயம், ஒழுக்கம், பொதுத் தொண்டறம். இதைப் பேரப் பிள்ளைகள், எங்களுடையப் பேரப் பிள்ளைகள் மட்டுமல்ல, எல்லோரும் அதனைக் கடைப்பிடிக்கவேண்டும்.
நன்றி உணர்ச்சி என்பது மிகவும் முக்கியம்!
இவற்றையெல்லாம்விட நன்றி உணர்ச்சி என்பது மிகவும் முக்கியம். வாழ்வில் நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும், எவ்வளவுதான் வளர்ந்தாலும், உங்கள் தாய் – தந்தையை நீங்கள் மதிக்கவேண்டும்; அவர்களுக்கு நன்றி காட்டவேண்டும்.
உங்கள் பெற்றோருடைய தியாகத்தினால்தான் நீங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, சிக்கனமாக, வரவிற்குட்பட்டு செலவு செய்யுங்கள். உங்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல், சமூகத்திற்காகவும் பயன்படுத்துங்கள்; மற்றவர்களுக்குத் தொண்டறம் செய்வதற்குப் பயன்படுத்துங்கள்.
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், சமூகத்திற்குப் பயன்படக் கூடிய அளவிற்கு வாழுங்கள்.
இன்றைக்கு மருத்துவமனைகளாக, பல்கலைக்கழகங்களாக உருவாகி உள்ளன!
தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்துப் போடு வதற்குக்கூட நாலணா வாங்குகிறாரே, என்று கேட்பார்கள். புத்தகம் வாங்கினால், வேறு புத்தமாக இருந்தால், அதில் கையெழுத்துப் போடுவதற்கு நாலணா கேட்பார். குடிஅரசுப் பதிப்பு புத்தகமாக இருந்தால், அவர்கள் பணம் கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்லிவிடுவார்.
அப்படி அவர் சேர்த்தவைதான் இன்றைக்கு மருத்துவ மனைகளாக, பல்கலைக் கழகங்களாக உருவாகி, உலகம் முழுவதும் இதில் பயின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட பிள்ளைகள் எல்லாம், இன்றைக்குப் பிஎச்.டி. போன்ற பல படிப்புகளைப் படித்து, பேராசிரியர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.
தன்னம்பிக்கையோடு வாழுங்கள்;
மூடநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள்!
இளைஞர்களே, நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள், நிறைய சம்பாதிக்கிறீர்கள். இன்னும் வாழ்வில் நீங்கள் உயருவீர்கள்; உங்களுடைய உழைப்பு உங்களை முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை. தன்னம்பிக்கை யோடு வாழுங்கள்; மூடநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் இப்பொழுதுதான் முடிந்தது. ஆனாலும், களைப்பு இன்னும் தீரவில்லை. இந்தத் தேர்தலில், பகுத்தறிவாளர்கள்தான் உண்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மோடிக்குக் கடவுள்கூட
பயன்படுகின்ற வரையில்தான்!
இராமன் அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. அதற்காக கடவுளையே மாற்றிவிட்டார் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள். முன்பெல்லாம் ‘ஜெய் சிறீராம்’ என்று சொன்னவர், இன்றைக்கு ‘ஜெய் ஜெகன்னாத்’ என்று சொல்கிறார்.
ஆகவே, மோடிக்குக் கடவுள்கூட பயன்படுகின்ற வரையில்தான். அது இராமனாக இருந்தாலும் சரி. இராமன் கோவில் உள்ள அயோத்தி பைசாபாத் தொகுதியில்கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அதைச் சுற்றியுள்ள அய்ந்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்றிருக்கிறது.
இதற்கெல்லாம் வழிகாட்டி யார் தெரியுமா?
திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
எப்படி என்றால், 1971 சேலத்தில், ‘‘இராமனை செருப்பால் அடித்துவிட்டார்கள்; இராமனை அவமதித்து விட்டார்கள்; தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறாது” என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க. 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதற்கு முன்பு 138 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது தி.மு.க.
தி.மு.க.வைச் சேர்ந்த இராஜராமன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயராமன் இன்னொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.
கவிஞர் கண்ணதாசன்
இதுகுறித்து கவிஞர் கண்ணதாசன் அவர்கள், ‘‘இராஜா ராமன் வெற்றி பெற்றார்; ஜெயராமன் வெற்றி பெற்றார்; ஆனால், உண்மையான இராமன் தோல்வியுற்றான்” என்று எழுதினார்.
அதேபோன்றுதான், இன்றைக்கு அயோத்தியில் இராமன் தோற்றுப் போய்விட்டான்.
கடைசி நேரத்தில்கூட, தன்னுடைய மனைவி தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஒருவர் உருண்டார். ஆனால், அவர் தோல்வி அடைந்தார்.
உழைப்பு, அறிவு, பகுத்தறிவு – தன்னம்பிக்கையோடு இருந்தால், உங்களை யாரும் வீழ்த்த முடியாது!
எத்தனைக் கடவுள்கள் இருந்தாலும், உழைப்பு, உழைப்பு, அறிவு, பகுத்தறிவு – தன்னம்பிக்கையோடு இருந்தால், உங்களை யாரும் வீழ்த்த முடியாது.
எனவே, தன்னம்பிக்கையா, மூடநம்பிக்கையா என்று கேட்டால், தன்னம்பிக்கையோடு நீங்கள் வாழவேண்டும்.
மருந்து எதற்காகச் சாப்பிடுகிறீர்கள் என்று உங்களைப் பார்த்து யாராவது கேட்டால்,
‘‘மருந்துக் கடைக்காரருக்கு மருந்துகள் வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காக மருந்து சாப்பிடுகிறேன் என்றோ அல்லது மருந்து கண்டுபிடித்தவர் வருத்தப்படுவார் என்பதற்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வீர்களா? நம்முடைய நோய் தீருவதற்காகத்தான், மருந்து சாப்பிடுகின்றோம்.
எங்களுக்காக அல்ல –
பெரியாருக்காக அல்ல!
ஆகவேதான், பகுத்தறிவு என்று சொன்னால், சுயமரியாதை என்று சொன்னால், நம்முடைய தரத்தை, நம்முடைய அறிவை, நம்முடைய முயற்சியை வளர்த்துக் கொள்வதற்குத்தான் அது தேவையே தவிர, எங்களுக்காக அல்ல – பெரியாருக்காக அல்ல!
எனவே, அன்பு மணமக்களே! நீங்கள் கல்வி அறிவு உள்ளவர்களாக இருக்கிறீர்கள். முழுக்க முழுக்க பகுத்தறி வாளர்களாக மாறுங்கள். அது உங்களை என்றைக்கும் உயர்த்தும்.
சம்பந்தியாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மீண்டும் நன்றி சொல்லி அமைகிறேன்.
அமைச்சர் அவர்களே, உங்களுடைய வெற்றி தொட ரட்டும் – அதற்கு எங்களைப் போன்றவர்கள் என்றைக்கும் துணையாக இருப்போம்.
அமைச்சர் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.