சேலம், ஜூன் 30 பல்வேறு ஊழல் மற்றும் ஜாதிய ரீதியிலான செயல்பாடுகளில் சிக்கி, புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஓராண்டு தமிழ்நாடு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அரசினுடைய அனுமதி இல்லாமல் மேனாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களை தொடங்கிய புகாரின் அடிப்படையில் ஜெகநாதன் கைதாகி தற்போது நிபந்தனை பிணையில் உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதோடு மட்டுமல்லாது உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஜெகநாதன் ஈடுபட்டதாக மீது ஆசிரியர் சங்கம் மற்றும் பணியாளர்கள் 500 பக்கங்கள் கொண்ட புகார் கடிதத்தை ஆளுநருக்கு எழுதியிருந்தனர்.
இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் ஜாதிய ரீதியாக செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் குறித்து உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பழனிசாமி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜெகநாதன் ஓய்வுபெற இருந்த நிலையில், மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.