வல்லம், ஜூன் 29- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்றது.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன்(DOTE) இணைந்து தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “பிரிண்டட் சர்க்கியூட் போர்ட் டிசைன்” Printed Circuit Board Design) என்ற தலைப்பில் 18.06.2024 முதல் 24.06.2024 வரை நடைபெற்ற 6 நாள் பயிற்சித் திட்டத்தின் துவக்க விழா 18.06.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரின் முதல்வர் டாக்டர் அ.ஹேமலதா தலைமை தாங்கி உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்பயிற்சித்திட்டத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை மாணவர்க ளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சென்னை, வி.அய். மைக்ரோசிஸ்டத்தை (Vi Micro System) சேர்ந்த பயிற்றுநர்கள் பெனார்கின் மற்றும் மெல்கின் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்தனர்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திரு வாரூர் மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 22 பாலிடெக்னிக் பேராசிரியர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தொழிலக பயிலக இணைப்பு திட்டத்தின் மேலாளர் ஆர்.அய்யநாதன் மற்றும் பேராசிரியை ஞா.செங்கொடி ஆகியோர் இப்பயிற்சி திட்டத்தை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.