புராண இதிகாசங்களைப் பாருங்களேன். திரவுபதியை அய்ந்து பேர் லிமிடெட் கம்பெனியாட்டம் நடத்தியதையும், அரிச்சந்திரன், தன் மனைவி சந்திரமதியை ஒரு பார்ப்பானுக்குக் கூலிக்கு விற்றதையும், இயற்பகை நாயனார். ஒரு பார்ப்பானுடன் தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்ததும், நளாயினி, குஷ்டம் பிடித்த தன் கணவனைத் தாசி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனதும் ஆன காரியங்கள் எல்லாம் எதைக் குறிக்கின்றன? பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக, படுமோசமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது.
எனக்கு நன்றாகத் தெரியும்; ஒரு கேசிலே ஒரு பெண்ணை அவள் கணவனா னவன் அவள் கையை ஒடித்து விட்டான் என்பதற்காக விசாரிக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் ஆனவர் தீர்ப்பிலே கையை ஒடித்த புருஷனுக்குப் பத்து ரூபாய் அபராதம் என்பதாகத் தண்டித்தார். அந்தக் கேசு பிரபலமான அய்க்கோர்ட் ஜட்ஜ் ஓர் அய்யர் அவர்களிடம் அப்பீலுக்குப் போனபோது, அந்தப் பார்ப்பன ஜட்ஜ் சொன்னார் “தன் மனைவியின் கையை ஒடித்ததற்காகப் புருஷனுக்கு அபராதமா? என்ன அக்கிரமம்; புருஷன் தன் மனைவியை அடிக்கவோ, பிடிக்கவோ உரிமையில்லையா? ஏதோ ஆத்திரத்தில் அடித்துவிட்டான்; படாத இடத்தில் பட்டுவிட்டது; அது ஒன்றும் குற்றமாகாது” என்று தண்டனையைத் தள்ளிவிட்டார்.
நீதியே இந்த நிலையில் இருந்தால், பெண்கள் எப்படி உரிமையோடு தலை நிமிர்ந்து வாழமுடியும்? பொதுவாக யாராவது தன் மனைவியை வீதியிலே போட்டு மிருகத்தனமாக அடித்துக் கொடுமைப்படுத்துவதைப் பார்த்து, ஏனப்பா இப்படி அடிக்கிறாய் என்று கேட்டால், பக்கத்தில் அடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பெண்ணே சொல்லுவாள், “கட்டினவன் அடிக்கிறான் அவனுக்கு உரிமையிருக்கிறது” என்று சொல்லுவார்களே தவிர, தவறு என்று யாரும் சொல்லமாட்டார்கள். இப்படியாக முன்பெல்லாம் பெண்களை மனித ஜீவன் என்று நினைக்காமல் அடுப்பு ஊதும் இயந்திரமாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும் மிகக்கொடுமையான முறையில் நடத்தி வந்திருக்கிறார்கள். இப்போது எல்லாம் இந்த மாதிரியான கொடுமைகள் பெரும்பாலும் இல்லை. காரணம் நமது 30 ஆண்டு கிளர்ச்சியின் பயனாகப் பெண்கள் ஆண்களுடன் சம அந்தஸ்து பெறும்படியான வாய்ப்புடனும் பெண்கள் உரிமை வேட்கையுடனும் இன்று இருப்பது ஒரு பெரிய திருப்பு முனையில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் அவர்கள் முன்னிலையில் இன்று முதல் நாங்கள் சட்டப்படியான கணவனும் மனை வியுமாக ஏற்று நடக்கச் சம்மதிக்கிறோம் என்று மட்டும்தான் சொன்னார்கள். பதிவுத் திருமணத்திற்கு அவ்வளவுதான் தேவை. நாங்கள் அதுமாத்திரம் இல்லாமல் இன்று முதல் நாங்கள் இருவரும் ஒருவருக் கொருவர் துணைவர்களாகவும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வதோடு, ஒருவர்க்கொருவர் எல்லாத் துறையிலும் இன்பதுன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகிறோம் என்பதுதான் நமது திருமணத்தின் முறையாகும்.
அதாவது ஆண்களைப் போலவே பெண்களையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்பதுதான்.
பெண்களுக்குச் சாஸ்திரத்தில், சட்டத்தில் சொத்துரிமை, திருமண ரத்து என்பது கிடையாது. நாங்கள் அன்று பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்ட நேரத்தில் பெண்களிலேயே பெரும்பாலோர் எதிர்த்தார்கள். இன்று பெண்களுக்குச் சொத்துரிமை என்பது சட்டமாக ஆக் கப்பட்டிருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அந்த நாளில் பால்யத் திருமணமுறைக் கொடுமை இருந்தது. 30, 40 ஆண்களுக்கு முன் திரு காளிதாஸ் சேட் அவர்கள் வீட்டில் மடிமேல் குழந்தையை வைத்துக் கொண்டே கலியாணம் செய்தது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அக்காலத்தில் நாங்கள் பெரிய மனிதர் என்று பெயர். என் தங்கை கண்ணம்மாள் மகளுக்குக் கூட ஒன்பது வயதிலேயே கலியாணம் ஆகிவிட்டது. இவ்வளவும் பெண்களை இளமையிலிருந்தே அடிமையாகப் பழக்குவதற்காகத்தான்.
கோயில்களிலே நம் பெண்களைப் பொட்டு கட்டுவதும் கூட பெண்களை இழிவுப்படுத்தவும், அதன் மூலமாகக் கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வருவ தற்கும், அதன் மூலமாக தன் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவுமேயாகும். நாம்தான் பெண்களைக் கேவலப்படுத்தும் ‘தேவதாசி’ முறையை ஒழிக்க வேண்டும் என்று பாடு பட்டோம். இன்று அதன் பலன் தேவதாசி ஒழிப்புச் சட்டமே ஏற்பட்டிருப்பது ஆகும்.
இதை எல்லாம் நன்றாக பார்க்கிற மத வெறியன் இவைகளை நல்லகாரியம் என்று சொல்லவே மாட்டான். இது எல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம், மதத்துக்கு விரோதம் என்பான்.
இந்த திருமணத்தில் நடந்த நிகழ்ச்சி சட்டப்படி போதுமானது இதில் எதற்கு ஆக சடங்குகளை சம்பந்தப்படுத்த வேண்டும்? சாப்பிட போகும் போதும், வெளிக்குப்போகும் போதும் சகுனம் பார்க்கிறானா? இல்லை. எதற்காக திருமணத்தில் சம்பந்தமில்லாத சகுனம் குளிகை, ராகுகாலம், என்பதாக பார்க்க வேண்டும். எதற்காக சம்பந்தமில்லாத கடவுளை சேர்க்க வேண்டும் என்று கூறி ஜோதி’த்தின் பித்தலாட்டங்களையும், கடவுளின் பித்தலாட்டங்களையும் எடுத்துக் காட்டி மணமக்களுக்கு வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய நல் அறி வுரைகளை கூறி வாழ்த்தினார் தனது உரையை முடித்தார்.
(15.11.1958 அன்று
ஈரோட்டில் யசோதை – ஜெகதீசன் திருமணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ 24.11.1958.)
சொத்துரிமையும் பெண்களும்
சீர்திருத்தத் திருமணத்தினால் பெண்ணும், ஆணும் சம உரிமை உடைவர்களாகப் பாவிக் கப்படுகின்றனர். ஆண்களுக்குப் பெண்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல. அவர் களைத்தான் நாம் பல ஆண்டுக்காலமாக அடி மைப்படுத்தி வைத்திருக்கின்றோம். அவர்களும் ஆண்களோடு முன்னேற, வாய்ப்பும் வசதியும் அளிப்போமேயானால், அவர்களும் சிறந்து விளங்குவார்கள்.
நாங்கள் அந்தக் காலத்திலேயே, அதாவது 1927-1928 இல் நடந்த செங்கற்பட்டு சுயமரி யாதை மாநாட்டிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமெனத் தீர்மானம் போட்டுள்ளோம்.
அது கண்டு பாமர மக்கள் மட்டும் எதிர்க்க வில்லை. மந்திரிகள் மனைவிமார்கள் உட்பட எல்லாம் மாநாடு கூட்டிக் கண்டித்தார்கள். குறும்புக்காரர்களெல்லாம் தாறுமாறாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். ஆண் பிள்ளை, தேவடியாள் வீட்டுக்குச் செல்லுகிறான் என்றால், அதுபோல் பெண்ணும், பலபேரைத் தேடிக்கொண்டு போக முடியுமா? என்று கேட்டார்கள்.
அப்படி ஆண் போகும்போது, பெண்ணும் போனால் என்ன தப்பு? என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் அவர்கள் அடங்கினார்கள். வியாக் கியானமோ, தத்துவார்த்தமோ சொல்லிக் கொண்டிருந்தால், எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கும். இப்படியெல்லாம் அடிநாள் தொட்டே பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டு வந்துள்ளோம்.
இப்படிப்பட்ட திருமணங்களால் ஆண்கள் சமுதாயத்திற்குப் பெரிய இழப்பாகத்தான் இருக்கும். தாங்கள் இதுவரை பெண்கள் சமுதா யத்தின் மீது செலுத்தி வந்த ஆதிக்கங்களை எல்லாம் விட்டுவிட வேண்டி இருக்கும். ஆனால் பெண்கள் சமுதாயத்திற்கோ ஒரேயடியான முன்னேற்றம். ஆகவே இம்மாதிரியான திருமணங்களுக்குத் தாய்மார்கள்தான் அதிகப்படியாக ஆதரவு கொடுக்க வேண்டும். காரணம், அது அவர்கள் வாழ்க்கை – உரிமையினைப் பற்றிய சங்கதி ஆகும்.
(பெங்களுரில் 11-01-1959 அன்று நடைபெற்ற கிருட்டினசாமி – சரஸ்வதி திருமணத்தில் தந்தை பெரியார் அறிவுரை ‘விடுதலை’- 15-01-1959.)