சென்னை, ஜூன் 29- ‘நீட்’ விலக்கு தீர்மா னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் இருந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேர்வு குளறுபடிகள்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு, ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.6.2024) தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின்மீது பா.ஜனதா சட்டபேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வு மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன் அடைந்து வரு கின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் கூட சில தேர்வுகளின் கேள்வி-பதில்கள் ‘அவுட்’ ஆகி உள்ளது.
2ஆவது வெளிநடப்பு
‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. என்பதற்காகதான் அப்போது ஒன்றிய அமைச்சரான நட்டா, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 7.5சதவீத ஒதுக்கீடு வழங்கினர். அதனால் தற்போது ‘நீட்’ தேர்வு மூலம் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலப்பாளையம் பகுதியில் 10 பேர் ‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
-இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்ததும் பேரவையில் இருந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளியேறினர்.
பின்னர் அவர்கள் சிறிது நேரம் கழித்து அவைக்கு வந்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் நாங்கள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் பேரவைத் தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளாத தால் 2ஆவது முறையாக மீண்டும் வெளிநடப்பு செய்வதாக கூறி அவையில் இருந்து வெளியேறினர்.